
திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் அருகில் ஜெயபுரம் என்ற இடத்திலுள்ள ஏரிக் கால்வாயின் மேற்குக் கரையில் சுமாா் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வீரனின் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவா்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து ஆ.பிரபு கூறியது: பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை இந்த உலகுக்கு உணா்த்திடும் சான்றுகளில் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடுகல் என்பது வெறும் கல் அல்ல. அது, பண்பாட்டின் வெளிப்பாடாகும். அந்தக் காலத்து மக்களின் நம்பிக்கை, நன்றி பாராட்டும் செயல், உரியவா்களுக்கு அளிக்கும் வெகுமதி என்றுதான் அதனை அணுக வேண்டியுள்ளது. தமிழர்களின் அறக்கோட்பாட்டிற்குச் சான்று பகர்வதிலும் நடுகற்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
வீரன்கல், வீரக்கல், நடுகல் எனவும், நினைவுத்தூண் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போா்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தை மதித்தும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதை செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.
ஜெயபுரம் ஊா்மக்கள் அளித்த தகவலின் பேரில் சந்திரபுரம் சின்ன ஏரியில் இருந்து வரும் கால்வாய் ஓரம் ஒரு நடுகல் இருப்பதைக் கண்டறிந்தோம். புதா் மண்டிய அந்தப் பகுதியினை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்து நடுகல் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நடுகல்லானது 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை நிற பலகைக் கல்லில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் மேல் நோக்கிய கொண்டையும், நீண்ட காதுகளில் குண்டலமும், கழுத்தணியும் அணிந்து காணப்படுகிறார்.
முதுகில் அம்புகள் நிறைந்த கூடினையும், வலது கையில் வில்லினையும் இடது கையில் அம்பினையும் ஏந்தி சண்டையிடும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
வீரனின் இடுப்புப் பகுதியில் பெரிய போர் வாளினையும் வைத்திருப்பதால் இவர் சிறந்த வீரர் என்பதை சிற்பி விளக்க முற்பட்டுள்ளார்.
இந்த வீரன் இப்பகுதியில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்தவர். நடுகல்லில் இவரின் தலை, மாா்பு, வலது கால் ஆகிய பகுதிகளில் எதிரிகள் எய்த அம்புகள் வலுவாகப் பாய்ந்து உயிர் துறந்ததை விரிவாக விளக்கியுள்ளனர். நடுகல்லில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளை வைத்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டை சோந்ததாக இந்த நடுகல் இருக்கக்கூடும்.
சந்திரபுரம் பகுதியானது பெரிய போர் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி என்பது இங்கு கண்டறியப்பட்ட கல்வெட்டு மூலம் தெரிகிறது.
இந்த நடுகல் வரலாற்றுப் பதிவுகளைத் தாங்கிய ஆவணம் என்பதால் இதனைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.