
- நெல்லையில் சாலை பணிகள் ஆய்வு
- தமிழகத்தில் பா.ஜனதா வெற்றியை பொதுத்தேர்தலில் பாருங்கள்
- மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டி
மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சா லை இணை மந்திரி வி.கே.சிங் இன்று நெல்லையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தாழையூத்து சாலையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
பொதுமக்கள் பாது காப்பான முறையில் சாலையை கடக்க இந்த சுரங்கப்பாதை உகந்ததாக இல்லை என பலரும் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம்.. என்றார்.
செய்தியாளர்கள் அவரிடம், நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் நிலையில் உள்ள பொழுது, தமிழகத்தில் ஏன் அவ்வாறு வெற்றி பெற முடியவில்லை? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த வி.கே.சிங், “தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெறவில்லை. இடைத்தேர்தலை வைத்து கணக்கிட வேண்டாம். பொதுத் தேர்தலில் பாருங்கள்” என்றார்.
உடன் இருந்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறும் போது, பென்னாகரம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது. பின்னர் 2011-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியாக உருவெடுத்தது. ஈரோடு தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர் அவர்கள் நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறைக்கும், பின்னர் டவுன் வ.உ.சி. மணிமண்டபத்திற்கும் சென்று பார்வையிட்டனர். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.