
இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட், இந்தூர், 02.03.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன் ஆல் அவுட் & இரண்டாவது இன்னிங்ஸில் 163 ஆல் அவுட் (புஜாரா 59, ஷ்ரேயாஸ் ஐயர் 26, நாதன் லியன் 8/64) ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 197 ஆல் அவுட் (க்வாஜா 60, லபுசேன் 31, ஸ்மித் 26, ஜதேஜா 4/78, அஷ்வின் 3/44, உமேஷ் யாதவ் 3/12). ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 75 ரன்கள் பின்தங்கி உள்ளது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் நாலு விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்திருந்தது. இன்று முதல் ஒரு மணி நேரம் ஆஸ்திரேலிய அணியின் ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் கிரீன் இருவரும் 70 ஓவர்கள் வரை நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை 186க்கு உயர்த்தினர்.
அதன் பின்னர் அடுத்த ஆறு ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 11 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. அஷ்வினும் உமேஷ் யாதவும் இன்று தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். அதன் பின்னர் ஆடவந்த இந்திய பேட்டர்கள் மீண்டும் ஒரு முறை தாங்கள் டெஸ்ட் மேட்ச் விளையாட தகுதியானவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார்கள்.
ஷுப்மன் கில் (5 ரன்) முதலில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரோஹித் ஷர்மா (12 ரன்), விராட் கோலி (13 ரன்), ஜதேஜா (7 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (27 பந்துகளில் 26 ரன்), பரத் (3 ரன்) என இந்திய பேட்டர்கள் வந்தார்கள் சென்றார்கள். புஜாரா 142 பந்துகள் விளையாடி 59 ரன்கள் எடுத்தார். இத்தகைய பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் 163 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இன்னமும் மூன்று நாள்கள் ஆட்டம் உள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 76 ரன்கள் எடுக்க வேண்டும். முதல் நாள் 14 விக்கட்டுகள், இன்று இரண்டாம் நாள் 16 விக்கட்டுகள்; எனவே நாளை 10 விக்கட்டுகள் எடுப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. ஆனால் இந்தூர் மைதானத்தின் பிட்ச் தரமான பிட்ச் இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.