spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?"உப்பு வாங்கலையோ உப்பு! "-(அக்ஷய த்ரிதியை ஸ்பெஷல் போஸ்ட்)

“உப்பு வாங்கலையோ உப்பு! “-(அக்ஷய த்ரிதியை ஸ்பெஷல் போஸ்ட்)

- Advertisement -

“உப்பு வாங்கலையோ உப்பு! “-

(அக்ஷய த்ரிதியை ஸ்பெஷல் போஸ்ட்)

கட்டுரையாளர்-கீதா சாம்பசிவம்

அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?

அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.

அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில் ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும். யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில் உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர். மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச் செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில் வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள் அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.

எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe