
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
69. அறிவுள்ள நண்பன்!
ஸ்லோகம்:
மனீஷிணஸ்ஸந்தி ந தே ஷிதைஷிணோ
ஷிதைஷிணஸ்ஸந்தி ந தே மனீஷிண: |
சுஹ்ருச்ச வித்வானபி துர்லபோ ந்ருணாம்
யதௌஷதம் ஸ்வாது ஹிதம் ச துர்லபம் ||
— போஜ சரித்திரம்
பொருள்:
உலகில் அறிவாளிகள் உண்டு. ஆனால் அவர்கள் நம் நன்மையை விரும்பாதவர்களாக இருக்கலாம். நம் நன்மையை விரும்புபவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் அறிவாளிகளாக இல்லாமல் இருக்கலாம். அறிவோடு கூடிய நண்பர்கள் கிடைப்பது அரிது. இனிப்பாகவும் இருந்து நோயையும் தீர்க்கும் மருந்து கிடைப்பது அரிது.
விளக்கம்:
எதேச்சையாக சந்தித்த இருவர் படிப்படியாக நண்பர்களாவர். உள்ளத்தில் நல்லெண்ணம் உள்ளவர்களே நண்பர்கள். அப்படிப்பட்ட நண்பன் நம் மேன்மையை விரும்புபவனாகவும் அறிவாளியாகவும் இருந்தானென்றால் எத்தனை நன்றாக இருக்கும்… என்பதை தெரிவிக்கும் சுலோகம் இது.
நம் நலன் விரும்பியாகவும் அறிவுக்கூர்மை உடையவனாகவும் உள்ளவனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேடத்தான் வேண்டும்.
நம் நலத்தை விரும்புபவன் அறிவில்லாதவனானாலும் அறிவுத் திறன் உள்ளவர் நம் நலனை விரும்பாதவரானாலும் பலன் இருக்காது. இரு நற்குணங்களும் உள்ளவர் மிக அரிதாகவே கிடைப்பார். அவர்களுக்காக தேட வேண்டும். வெறும் நலம் விரும்பியாக இருந்தாலும் போதாது.
அது தொடர்பான கதை ஒன்று உண்டு. ஒரு வணிகன் குரங்கு ஒன்று வளர்த்தான். தன் முதலாளியின் நலம் விரும்பியான அந்த குரங்கு வணிகனைப் பாதுகாத்து வந்தது. ஒருநாள் வணிகன் உறக்கத்தில் இருந்தபோது ஒரு ஈ அவன் முகம் மீது அடிக்கடி வந்து அமர்ந்தது. முதலில் குரங்கு அதனை விரட்டியது. ஆனால் பின்னர் எரிச்சலடைந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அடித்தது. அவன் முகத்தில் பெரும் காயத்தோடு உயிர் தப்பினான். குரங்கின் அறியாமை வணிகனின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது.
நலம் விரும்பி அறிவற்றவனாக இருந்தால் வரும் அபாயத்தை விளக்கும் கதை இது. அறிவுள்ளவன் நண்பனாக கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம்!