
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
85. அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!
ஸ்லோகம்:
வ்ருத்தானாம் வசனம் ஸ்ருத்வா யோ௨ ப்யுத்தானம் ப்ரயோஜயேத்|
உத்தானஸ்ய பலம் சம்யக் ததா ஸ லபதே௨சிராத்||
– மஹாபாரதம்.
பொருள்:
வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்களின் சொல்படி கேட்டு செயல் புரிவோருக்கு நல்ல பலன் குறைந்த நேரத்திலேயே எளிதாகக் கிடைக்கும்.
விளக்கம்:
‘பெரியோர் கூற்று பழைய அமுதுக்கு மாற்று’ என்றொரு பழமொழி உள்ளது. பழைய அன்னம் உடலுக்கு குளிர்ச்சி தந்து நலம் பயப்பது போல பெரியோர் கூறியதை கேட்பதால் வாழ்வில் நலன் விளையும் என்பது இதன் பொருள்.
அனுபவம் நிறைந்த முதியோரின் வழிகாட்டலால் எளிதில் வெற்றியை அடையலாம் என்று கூறும் மகாபாரத ஸ்லோகம் இது.
அதனால்தான் மகாபாரதப் போர் முடிந்தபின் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் தர்ம சூட்சுமங்களை கற்றுக் கொள்ளும்படி தர்மபுத்திரனைப் பணித்தார் கிருஷ்ண பகவான்.
வம்ச பரம்பரையாக நமக்கு கிடைத்து வரும் ஞானம் முதியோரான அறிஞர்களிடமிருந்தே அல்லவா?
வயதில் பெரியவர்கள் பல அனுபவங்களைத் தாண்டி வந்தவர்கள். நமக்கு ஏற்படும் சந்தேகங்கள், தடைகள் போன்றவற்றை அவர்களும் எப்போதோ பார்த்திருப்பார்கள். அதனால் அவர்களின் அறிவுரைகளை கேட்டுப் பெறவேண்டுமென்று எடுத்துரைக்கிறது இந்த ஸ்லோகம். எவ்வாறு நடந்து கொண்டால் நல்லது என்று அவர்கள் வழிகாட்டுவார்கள்.
நம் முயற்சியும் அவர்களின் அனுபவமும் சேரும்போது குறைந்த நேரத்தில் அதிக பலன் பெற முடியும்.