
விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -23
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
Ethics & Values
ராம ராஜ்ஜியம்!
சக்ரவர்த்திகள் பலர் ஆண்ட பவித்திர பூமி நம் பாரத தேசம். அந்த சக்ரவர்த்திகளும் அரசார்களும் ஆதரிசமான ஆட்சி நடத்தினார்கள். இவர்களின் மக்கள் மனம் மகிழும் அரசாட்சிக்கு ஆதாரமானது தர்மம். அரச புரோகிதர்கள் அரசர்களுக்கு நிரந்தரம் வழிகாட்டி வந்தார்கள்.
மக்கள் சேவையே முக்கியம் (People First) என்பது முற்காலத்தில் அரசர்கள் கற்றுக் கொண்ட முதல் பாடம். அதனால் பாரதிய ராஜாக்கள் பெற்ற தந்தை போல் குடிமக்களை காத்து வந்தனர் என்பது அனேக நூல்கள் மூலம் அறிய முடிகிறது.
“ப்ரவர்ததாம் ப்ரக்ருதி ஹிதாய பாரதிவ:” – அரசர்கள் மக்கள் நலத்தைக் கருத்தில் கொண்டு பணிபுரிவார்களாக! என்று ஆசி கூறினர் கவிஞர்கள். தர்மத்தோடு அரசாளுபவர் உத்தம லோகங்களையும் புண்ணிய லோகங்களையும் அடைவர் என்று பஞ்சம வேதமாகிய மகாபாரதம் கூறுகிறது.
ராம ராஜ்ஜியம் எப்படி இருந்தது?
ராம ராஜ்ஜியம் ஆதரிசமான அரசாட்சிக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது. அரசாளுபவர் அனைவரின் லட்சியமும் ராம ராஜ்ஜியம் போல் விளங்க வேண்டும் என்பதே. அது தர்மத்தை அனுசரித்து நடக்கும் ஆட்சிக்கு உதாரணம்.
ஸ்ரீராமன் அரசாண்டபோது மக்களுக்கு மனக் கவலைகள் இல்லை. நோய்கள் இல்லை. அதர்மம் என்ற சொல் ராமனின் ஆட்சியில் இல்லை. மக்கள் ஒருவரையொருவர் பாதுக்காத்துக் கொள்ளும் பொறுமையும் சமரசமும் கொண்டிருந்தனர். திருட்டுத்தனம் இல்லை. யாருக்கும் எந்த அனர்த்தமும் நிகழவில்லை. அகால மரணங்கள் இல்லை. மக்களுக்கு நோய் அச்சம் என்பது இல்லை. கொடிய விலங்குகளின் அச்சம் இல்லை.
துவாபர யுகத்தில் ராம ராஜ்ஜியம்:-
ஆதரிசமான அரசாட்சிக்கு ராம ராஜ்ஜியத்தை உதாரணம் காட்டுவது வழக்கம். ஸ்ரீராமனின் ஆட்சியை மக்கள் எத்தனை தூரம் விரும்பினரோ தர்மபுத்திரனின் ஆட்சி கூட அதே போல் ஜனப் பிரியமாக விளங்கியது.
தர்மபுத்திரன் எந்த ராஜ்ஜியத்தில் இருந்தாலும் அந்த ராஜ்ஜியம் சுபிட்சமாக இருக்கும் என்றார் பீஷ்மர். தர்மபுத்திரன், மனைவி துரௌபதியோடும் தம்பிகளோடும் அக்ஞாதவாசத்தை விராட ராஜனின் அரண்மனையில் கழித்தனர். அதற்கு முன் அரண்ய வசத்தில் இருந்த போது தர்மபுத்தரன் யட்சனின் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறி அக்ஞாதவாசத்தில் யாரும் அடையாளம் காண இயலாது என்ற சிறந்த வரத்தை யமனிடமிருந்து பெற்றிருந்தான்.

போராசை கொண்ட துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களின் அக்ஞாதவாசத்தை பங்கம் செய்துவிட வேண்டுமென்று பலவித சதிகளைச் செய்து பார்த்தான். அந்த சபையில் பீஷ்மர் யுதிஷ்டிரனின் சிறப்பு குறித்து நீண்ட நேரம் பேசினார்.
தர்மபுத்திரனின் சிறப்பு குறித்து பீஷ்மர் கூறியவை:-
தர்மபுத்திரன் வசிக்கும் நகரத்திலோ கிராமத்திலோ அங்கிருக்கும் அரசனுக்கு தீங்கு விளையாது. அந்த குடிமக்களுக்கு இயல்பாகவே நல்ல குணங்களான தானம் செய்வது, இனிமையாகப் பேசுவது, பகைவர்களை வெல்வது, உதார குணம், பணிவு, வெட்கம், சீலம் முதலான குணங்கள் பழக்கமாகும். சுயமாக தர்மாத்மாக்களாக அசூயை பொறாமை இன்றி ஆனந்தமாக சேர்ந்து வாழ்பவர்களாக பிரஜைகள் விளங்குவர். தர்மபுத்திரர் இருக்கும் ராஜ்ஜியத்தில் பூமி பசுமையாக விளங்கும். வறட்சியின்றி பயிர்கள் நன்கு வளரும். மரங்கள் நல்ல ருசியான பழங்களைத் தரும் அங்கு கோ செல்வம் அதிகமாக இருக்கும். பசுக்கள் ஆரோக்கியமாக விளங்கும். பாண்டவர்கள் வசிக்கும் நாட்டில் அகால் மரணங்கள் நிகழாது. தர்மபுத்திரன் இருக்குமிடத்தில் மக்கள் உண்மையே பேசுவர். தானம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் தர்மத்தை மதித்து நடப்பவராகவும் மக்கள் விளங்குவர்.
கலியுகத்தில் ராம் ராஜ்ஜியம்:-
எப்போதும் ராம ராஜ்ஜியம் என்ற சொல்லைக் கேட்டு வருகிறோம். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத்கீதையில் ஆதரிசமான அரசாட்சியின் சாரம் நிறைந்துள்ளது. இதன் உதவியோடு நாம் நன்மை தீமைகளையும் நியாய அநியாயங்களையும் நீதி அநீதிகளையும் அடையாளம் காணமுடியும்.
குடிமக்களின் முழுமையான முன்னேற்றத்திலேயே அரசாளுபவரின் சாமர்த்தியம் இருக்குமென்று சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறார். இந்த கருத்துகளை சிவாஜி அமல்படுத்திய விதம் அனைவரும் ஏற்று நடக்க வல்லது. சிவாஜியின் ஆளுமையில் சிறந்த அரசாளுபவரின் குணங்கள் அனைத்தும் சேர்ந்திருந்தன. அத்தகைய சிறந்த ஆளுமையே அந்நிய ஆட்சியிலிருந்து மக்களுக்கு விடுதலை பெற்றுத் தர தூண்டுதாலாக விளங்கியது.
சிவாஜியின் ஆதரவாளர்களுக்கு பகைவர்களோடு போராடி வெல்லும் திறமையை அளித்தது. அதே நேரம் சிவாஜி தன் மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்தான். எத்தனை சிறப்பாக மக்களுக்காக பணி புரிந்தான் என்றால் தன் ராஜ்ஜியத்தின் செல்வமனைத்தையும் மக்களுக்கே உடமையாக்கினான்.
சிவாஜிக்கு அத்தகைய ராமராஜ்ஜியத் தூண்டுதலை சிறுவயதில் அளித்தவர் அவனுடைய ஆன்மீக குருவான ஹனுமான் உபாசகர் சமர்த்த ராமதாசர். அதனால்தான் சிவாஜி உண்மையான மக்கள் நாயகனாகப் பெயர் பெற்றான்.
சுபம்!