
விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -25
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
Time Management | பொற்காலைப் பொழுது!
சமஸ்கிருத மொழியை கற்க நினைக்கிறீர்களா? சங்கீதம் சாதனை செய்ய விருப்பமா? உங்கள் விருப்பமான எழுத்தாளரின் நூலைப் படிக்கக் வேண்டுமா? நீங்கள் அளிக்கப் போகும் சொற்பொழிவை பட்டை தீட்ட வேண்டுமா? பிரமோஷன் தேர்வுக்கு சீரியசாக தயாராகுகிறீர்களா? கரெஸ்பான்டென்ஸ் கோர்ஸ் மூலம் முதுகலை படிக்க வேண்டுமா?
நேற்று கற்றுக் கொண்ட பாடத்தை மனப்பாடம் செய்ய நினைக்கிறீர்களா? இன்று நீங்கள் பள்ளியில் கற்றுத் தர வேண்டிய பாடத்தை தயாரிக்க வேண்டுமா? இவையனைதிற்கும் நம்மிடம் உள்ள பதில், “ஆமாம்! ஆனால் நேரேம் போதவில்லை!” என்பதே அல்லவா? இதற்கு உள்ள ஒரே தீர்வு காலையில் சீக்கிரம் துயிலேழுவதே!
சூரியன் உதிக்கும் முன் சுமார் ஒன்றரை மணி நேரம் முன்பாக அதாவது பிரம்ம முகூர்த்ததில் எழுந்து விட்டால் மிகவும் அமைதியாக தியானம் செய்ய முடியும். விடியற்காலையில் எழுவது ஆரோக்கியத்தின் சின்னம். விடியற்காலையில் எழுவது புத்திசாலிகளின் இயல்பு. காலையிலேயே துயிலெழுந்தால் உங்கள் வாழ்வே மாறிவிடும். உங்கள் உடல் நலம் சீராகும். லாபமும் வெற்றியும் உங்கள் வசமாகும்.
ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில் இந்த பொற்காலைப் பொழுது குறித்து இவ்விதம் கூறுகிறார்…
ப்ராஹ்மே முஹூர்த்தே உத்திஷ்டேத் ஸ்வஸ்தோ ரக்ஷார்த மாயுஷ: !
ஸரீர சிந்தாம் நிர்வர்த்ய க்ருதசௌச விதிஸ்தத: !!
(அஷ்டாங்க ஹ்ருதயம், சூத்திர ஸ்தானம் 2-1)
பொருள்:- பிரம்ம முகூர்த்தத்தில் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உடல் உபாதைகளை போக்கிக் கொண்டு சுத்தமாக தயாராக வேண்டும்.
பிரம்ம முகூர்தத்ததில் துயிலெழுபவர்கள் சாதிக்க இயலாதது ஏதாவது உண்டா?
விடியலில் துயில் நீங்கி வாழ்க்கையை வெற்றிப் பாதையில் திருப்பிக் கொண்ட பிரமுகர்கள் பலர் உள்ளனர். எட்டு மணிக்கும் ஒன்பது மணிக்கும் தூங்கி எழுந்து ஜிம்மில் இரண்டு மணி நேரம் செலவழிப்பதை விட சூரியோதயத்திற்கு முன்பே எழுந்து உடற்பயிற்சி செய்வது மேல்.
நம் குடும்பங்களில் முதியோரின் வாழ்வியலைக் கவனியுங்கள்… எப்போது படுத்துறங்குவர்? எப்போது விழித்தெழுவர்? இரவு சீக்கிரம் தூங்குவதும் விடியலிலேயே எழுவதும் (Early to bed early to rise ) அவர்களின் ஆரோக்கிய ரகசியம். நோய் எதிர்ப்பு சக்தி வளர்வதற்கு முக்கிய கரணம் அதுவே என்கிறது வைத்திய சாஸ்திரம். புகழ்பெற்ற பலருடைய நேர அட்டவணை, செயல்முறை ஒழுக்கத்தோடு கூடியதாக இருக்கும்.
புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் பராத ரத்னா மோட்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா நூறு ஆண்டுகளுக்கு மேல் (1860-1962) வாழ்ந்தார். 25வது வயதில் எப்படிப்பட்ட நேர வரையறை கடைபிடித்தரோ 90வது வயதிலும் அதே போல் கடைபிடித்தார். அழகாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அனைவரும் விரும்புவர். ஆனால் அதற்கு வேண்டிய நடைமுறையும் இருக்க வேண்டுமல்லவா? அர்த்த ராத்திரியில் உணவு உண்பது, தேதி மாறியபின் படுத்துறங்குவது, நேரம் கழித்து எழுவது… போன்றவை உடல் நலத்திற்கு நல்லதல்ல.
வெற்றி பெற விரும்புபவர் நேரத்தை சம்பாதிக்க வேண்டும். எப்படி? நேரத்தை சம்பாதிப்பதற்கு ஒரு ரகசியம் இருக்கிறது என்கிறார் கனடாவைச் சேர்ந்து உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ராபின் சர்மா. அவர் எழுவிய The Five AM Club: Your morning, Elevate Your lIfe என்ற நூலில். இந்த நூல் கோடிக்கணக்கான காப்பிகள் விற்றது. பலருக்கும் எழுச்சியூட்டியது. புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள், திரைப்பட நடிக நடிகையர், தொழில் முனைவோர் இந்த நூலைப் பாராட்டியுள்ளனர்.
அவர் கூறும் ரகசியம் என்ன?
காலையில் ஒரு மணி நேரம் முன்பாக எழுந்து உங்கள் தினசரி காலைப் பணிகளைத் தொடங்குங்கள். 5 ஏஎம் கிளப்பில் சேருங்கள்…. என்ற உதவிக் குறிப்பை அளிக்கிறது இந்த நூல். இவ்வளவு விடியற்காலையில் எழுந்து என்ன செய்வது? என்று சிலருக்கு சந்தேகம் எழும். என்ன செய்ய முடியாது? என்பது அனுபவஸ்தர்களின் எதிர்க் கேள்வி.
நீங்கள் கனவு காணும் லட்சியங்களை அடைய வேண்டுமானால் ஒரு மணி நேரம் அதற்காக ஒதுக்கினால் சாதிக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ராபின் சர்மா. இதனையே ‘கோல்டன் ஹவர்’ – பொற்காலை நேரம் என்கிறார். ஒரு மணி நேரம் முன்பாக எழுந்து உங்களுக்கான முக்கிய வேலைகளுக்காக அதனை பயன்படுத்துங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை எத்தனை திருப்தியாக உள்ளதோ நீங்களே கவனிக்க முடியும். அதற்காகத்தான் நேரத்தோடு படுத்துறங்கி பிரம்ம முகூர்தத்தில் துயிலெழுந்து ஆயுளையும் ஆரோக்கியத்தையும் காப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று நம் பாரதிய ரிஷிகள் எடுத்துரைத்தார்கள். பிரம்ம முகூர்த்தம் என்றால் விடியற்காலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடைப்பட்ட காலம்.
மகாபாரதத்தில் தர்மபுத்திரனுக்கு நல்ல பழக்க வழக்கங்களை போதித்த பீஷ்மர் எதையெதை கடைபிடித்தால் மனிதன் ஆரோக்கியத்தோடு விளங்குவான் என்று விவரிக்கையில் சூரியன் உதிக்கும் முன்பே துயிலெழுவதன் முக்கியத்தவத்தை இவ்வாறு எடுத்துரைக்கிறார்…
ப்ராஹ்மீ முகூர்தே புத்யேத தர்மார்தௌ சானு சிந்தயேத் !
உத்தாயாசம்ய திஷ்டேத பூர்வாம் சந்த்யாம் க்ருதாஞ்சலி: !!
(மகாபாரதம் அனுசாசனிக பர்வம் 104-116)
பொருள்:- பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழ வேண்டும். செய்ய வேண்டிய பணிகளைக் குறித்து சிந்திக்க வேண்டும். படுக்கையிலிருந்து எழுந்து சிறிது நீரருந்தி கைகளைக் குவித்து இறைவனை வணங்கி பின் வேலைகளைத் தொடங்க வேண்டும்.
அரசாளுபவன் ஒரு நாளை எவ்வாறு கழிக்கக் வேண்டும் என்பதை நாரதர் தர்ம புத்திரனுக்கு போதிக்கிறார்…
க்வச்சித்வௌ பதமௌ யாமௌ ராத்ரே: சுப்த்வா விசாம்பதே !!
சஞ்சிதயசி தர்மார்தௌ யாம உத்தாய பஸ்சிமே !!
(மகாபாரதம் சபா பர்வம் 5-86)
பொருள்: ராஜா! நீ இரவு முதல் யாமத்திலும் இரண்டாவது யாமத்திலும் நன்கு உறங்கி கடைசி யாமத்தில் உறக்கத்திலிருந்து விழித்து தர்மம் அர்த்தம் முதலியவை குறித்து சிந்திக்கிறாயா?
கச்சிதர்தயசே நித்யம் மனுஷ்யான் சமலம் க்ருத: !
உத்தாய காலே காலஜ்ஞை ஸஹ பாண்டவ மந்த்ரிபி: !!
(மகாபாரதம் சபா பர்வம் 5-87)
பொருள்: பாண்டு நந்தனா! நீ தினமும் விடியற்காலையே துயிலெழுந்து தாயராகி, இடம், காலம் இவற்றுக்கு ஏற்ப அமைச்சர்களோடு அமர்ந்து உன் தரிசனத்திற்காக வந்த குடிமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாயா?
ப்ரம்ம முகூர்தத்தில் சுற்றுச் சூழல் அமைதியாக இருக்கும். செவிக்கு இனியமையான பறவைகளின் கீச்சு கீச்சு ஒலி தவிர வேறு ஒலிமாசு இருக்காது. தென்றல் காற்று குளுமையாக வீசும். இரவு சுகமாக உறங்கி தேவையான ஓய்வு பெற்று எழுபவரின் மனதும் உடலும் வலிமை பெறுகிறது. அந்த நேரத்தில் யாரும் தொந்தரவு செய்பவரும் இருக்க மாட்டார்.
ஆதலால் அன்று செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிந்திப்பதிலோ தியானத்திலோ கழிக்க முடியும். ஒரு சிறந்த இலட்சியத்திற்காக பணி புரிபவர், ஆன்மீகத்தில் முன்னேற விரும்புபவர், இந்த அமைதியான நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். நாள் முழுவதும் உற்சாகமாகப் பணி புரிவதற்குத் தேவையான சக்தி இதன் மூலம் கிடைக்கும்.
சோம்பலாலோ அதிக தூக்கத்தாலோ சூரியன் உதித்த பின் துயிலெழுபவர் இத்தகைய அழகிய காட்சிகளைப் பார்க்க இயலாது. அதன் பலன்களைப் பெற இயலாது.
சுபம்!