
விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -30. Strategy
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
Strategy
வீரனே! வெற்றி பெறுவாயாக!
அது 2019ம் ஆண்டு. முப்பத்தாறு வயதான ஒரு இளைஞனின் பெயர் நம் தேசத்தில் மட்டுமல்ல… உலகமெங்கும் எதிரொலித்தது. அவர் பாரத விமானப் படையைச் சேர்ந்த பைலட்டாக சேவை புரிந்து வந்த விங் கமாண்டர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளைத் திருப்பி அடித்த தீரன் அவர். 2019 பிப்ரவரி 21ம் தேதி இந்த சாகச வீரர் மிக் 21 என்ற போர் விமானத்தில் எதிரிகளின் ஜெட் விமானத்தை துரத்திச் சென்றார். எதிரிகள் பயன்படுத்திய மிசைல் நம் விமானத்தைத் தாக்கியது விமானத்தை ஓட்டி வந்த அந்த சாகச வீரர் பாராசூட் உதவியோடு கீழே குதித்தார். அது பகைவர்களின் பகுதி. அங்கிருந்த குறும்பு இளைஞர்கள் இவரை அடித்துத் துன்புறுத்தினர். பலவிதமாக நிந்தித்தனர். ஆயினும் இந்திய வீரர் கலங்கவில்லை.
நம் அரசாங்கத்துக்கு இவருடைய விவரம் தெரிய வந்தது. இந்த சாகசச் செயல் தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்ட்டன போர்க் கைதியாக பிடிபட்டவர்களைத் திரும்ப ஒப்படைப்பது யுத்த தர்மம். ஆனால் பாகிஸ்தான் பலமுறை இந்த் நியமத்தை மீறியுள்ளது. இந்த போர்க் கைதியை, இந்த வீர ஜவானை விடுவிப்பதற்கு நரேந்திர மோடி அரசு திரையின் பின் என்ன செய்ததோ தெரியாது.

பகை நாடு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் போன சூழ்நிலையில் அந்த வீரரை ஒப்படைத்தது. அறுபது மணி நேரத்தில் ஒப்படைத்து விட வேண்டிய சூழலை நம் தேசத் தலைமை உருவாக்கியது. எதிரிகளின் சிறையிலிருந்து நம் வீரரை விடுதலை செய்விக்க முடிந்த நம் இந்திய அரசாங்கத்தின் வெற்றி வியூகம் பாராட்டுக்குரியது. இனி வரும் தலைமுறைகளுக்கு இது ஒரு வழிகாட்டியாக விளங்கக் கூடியது.
நலமாக இந்தியா வந்தடைந்த அந்த இளைஞரை ‘வீரசக்ரா’ விருதால் கௌரவித்தோம். அவர்தான் இந்தியர்களின் இதயத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் இடத்தைப் பிடித்த விங் காமண்டர் அபிநந்தன் வர்தமான்.
வீரர்களைப் பாதுகாப்பது அரசாளுபவரின் முக்கிய கடமைகளுள் ஒன்று. “நாட்டுப் பாதுகாப்பிற்காக உயிரையும் தியாகம் செய்யத் துணியும் வீரர்களின் சம்பளம் நேரத்தோடு அவர்களுக்கு கிடைக்கும்படி செய்கிறாயா? அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறாயா?” என்று தர்மபுத்திரனை வினவுகிறார் நாரத முனிவர்.
கச்சித் பலஸ்ய தே முக்யா: சர்வயுத்தவிசாரதா: |
த்ருஷ்டாவதாதா விக்ராந்தா த்வயா சத்க்ருத்ய மானிதா: ||
(மகாபாரதம் சபா பர்வம் 5-48)
பொருள்:- உன் படையில் முக்கியமான தளபதிகள் அச்சமின்றி போர்த் திறமையோடு கபடமின்றி பராக்கிரமத்தோடு உள்ளனரா? தகுந்தபடி சன்மானம் செய்து அவர்களை கௌரவித்து திருப்தியளிக்கிறாயா?
கச்சித் பலஸ்ய பக்தம் ச வேதனம் ச யதோசிதம் |
சம்ப்ராப்த காலே தாதவ்யம் ததாசி ந விகர்ஷசி ||
(மகாபாரதம் சபா பர்வம் 5-49)
பொருள்:- உன் படை வீரர்களுக்குத் தேவையான உணவு, வசதி, சம்பளம் நேரத்தோடு கிடைக்கும்படி செய்கிறாயா? அவர்களின் சம்பளத்தை தாமதிக்காமலும் குறைவின்றியும் அளித்து வருகிறாயா?
இந்திய அரசாங்கம் 2020-21 ஆண்டு பட்ஜெட்டில் பதவி ஓய்வு பெற்ற வீரர்களுக்காக ரூ 113,278 கோடியை ஒதுக்கியது. இது ராணுவத்தினர் பெறும் சம்பளத்தை விட (111,294 கோடி ரூ) அதிகம். பார்லிமெண்டில் 2016 நவம்பரில் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சர், பென்ஷன் பெறுபவர்களின் எண்ணிக்கை மரணித்த வீரர்களின் குடும்பத்தினர் முதலானவர்கள் இருபது லட்சத்து ஆறாயிரம் என்று குறிப்பிட்டார். இது பணி புரியும் பத்து லட்சம் வீரர்களை விட சுமார் இரு மடங்கு எண்ணிக்கை. ஒரே ராங்க் ஒரே பென்ஷன் திட்டம் 2014ல் அமலுக்கு வந்த பின் முன்னாள் வீரர்களின் பென்ஷன் அதிக அளவு உயர்ந்துள்ளது.
ஸ்வதர்மம்!
ஸ்வ்தர்மாசரணம் சக்த்யா விதர்மாச்ச நிவர்தனம் |
தைவால்லப்தேன சந்தோஷ ஆத்மவிச்ச்ரணார்சனம் ||
(பாகவதம் 3-28-2)
பொருள்:- முடிந்த அளவு தர்மத்தைக் கடைபிடிப்பது, அதர்மத்திலிருந்து விலகியிருப்பது, பிராப்தத்தை ஒட்டி கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைவது, ஆத்ம ஞானிகளின் பாதங்களை வணங்குவது என்ற நான்கும் உத்தம மனிதனின் கடமைகள்.
“ஒவ்வொரு குடிமகனும் தனக்கு ஒதுக்கப்பட்ட கடமையை பொறுப்புணர்ந்து நிறைவேற்ற வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளை அன்போடு வளர்ப்பது. அவர்களுக்கு கல்வியறிவூட்டுவது போன்றவை கடமைகள். கணவன் மனைவியிடையே நிலவும் அன்பு ஸ்வதர்மம். மனைவியின் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வது கணவனின் தர்மம். கணவனுக்கு அன்போடு உதவுவது மனைவியின் தர்மம்.
உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு கடமையை மறக்கக் கூடாது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இடத்தைப் பொறுத்து அவனுடைய தர்மம் என்ன என்பது தெரித்திருக்கும். சமுதாய தர்மமும் ஸ்வதர்மமே! பணிபுரியும் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்ட பணியும் தெய்வத் தொண்டே என்பதை மறக்கக் கூடாது. இல்லத்தாருக்கு மகான்களோடு சத்சங்கம், அவர்களின் சேவை கூட கடமையே!” – (சுவாமி தத்வவிதானந்த சரஸ்வதி – பாகவத சப்தாகம்)
சாந்தி மந்திரம்!
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாயேன மார்கேனண மஹீம் மஹீசா: |
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம்
லோகா: சமஸ்தா: சுகினோ பவந்து ||
பொருள்:- மக்கள் அனைவருக்கும் நலம் விளையட்டும்! அரசாளுபவர் நீதியோடு கூடிய வழியில் பூ மண்டலத்தை ஆள்பவராகட்டும்! பசுக்களுக்கும் அந்தணர்களுக்கும் தினமும் சுபம் விளையட்டும்! பூவுலகத்திற்கு மட்டுமின்றி அனைத்துலங்களுக்கும் சுபம் விளையட்டும்!
சர்வே பவந்து சுகின:
சர்வே சந்து நிராமயா: |
சர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித்து:க பாக்பவேத் ||
பொருள்:- அனைவரும் சுகமாக இருக்க வேண்டும். அனைவரும ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அனைவரும் சுபங்களையே பார்க்க வேண்டும். எந்த ஒருவரும் துயரப்படக் கூடாது.
ப்ரவர்ததாம் ப்ரக்ருதி ஹிதாய பார்திவ:
சரஸ்வதீ ஸ்ருதிமஹதாம் மஹீயதாம் |
மமாபி ச க்ஷபயது நீல லோஹித:
புனர்பவம் பரிகத சக்திராத்மபூ: ||
(அபிஜ்ஞான சாகுந்தலம் 7-35)
பொருள்:- அரசாள்பவர் மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களையே செய்வாராக! மொழியும் அறிவும் அளிக்கும் சரஸ்வதி எங்கும் வணங்கப்படுவாளாக! அர்த்த நாரீஸ்வர சொரூபனான பரமேஸ்வரன் எனக்கு பிறவியற்ற மோட்சத்தை அருள்வாராக!
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: !!
சுபம்!
விஜயபதம் தொடர் நிறைவுற்றது!!
மிக அருமையான தொடர். இன்னும் இன்னும் படிக்க வேண்டும் போலுள்ளது.