கழுகுகள் சிறு பறவைகளாக இருக்கும் போதே தம் பெற்றோரால் கூட்டில் இருந்து கீழே உதறித் தள்ளப்படும். பின் அவை பறக்கும் சக்தி பெற்று பறந்து திரிந்து உணவு தேடும்.
தன்னை எதிர்க்கும் பறவைகளிடமிருந்து தன்னையும் தன் வாழ்விடத்தையும் காத்துக் கொள்ள மூர்க்கமாக சண்டையிடும். இது இப்படியே போய்க்கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் மூக்கு நகத்தின் கூர் மழுங்கி… கால் நகங்கள் வளர்ந்து உடல் கனத்து பறக்க முடியாமலும் முன் போல் சண்டை செய்ய இயலாமலும் போகும்…
இதுதான் அவற்றின் திருப்புமுனைக் கட்டம்.
வாழ்ந்தால் வல்லூறு (ராஜாளி) இல்லையேல் வாழ்வதற்கே பெரும் ஊறு..!
இந்தக் கட்டத்தில் அவை பெரும் மலைகளின் உச்சிக் குன்றின் மீதமர்ந்து தன கூர் மழுங்கிய அலகால் தன் உடலின் இறக்கைகளை குருதி சொட்டச் சொட்ட பிய்த்தெறியும்.
தனது கால் நகங்களை மலை முகடுகளில் முட்டி உடைத்தெறியும். தன் பருத்த அலகை கூர்செய்ய மலை மீது மோதி உடைத்தெறிந்து குருதிச் சேற்றிலேயே கண்ணயராது காத்திருக்கும்.
இத்தகைய நிலைகண்டு எளிதில் வீழ்த்தி கதை முடிக்க எண்ணி வரும் பகைவரையும் அஞ்சாது எதிர்த்து வீழ்த்தும். மாரியும், வாடையும், செந்தழல் வீசும் வெய்யோனின் வெப்பமும் மாறிமாறி வந்தாலும் உணவு துறந்து உடல் பலம் பெறக் காத்திருந்து தோகையும், கூரிய நகமும், மின்னும் வேல்களை ஒத்த அலகும் பெற்று ஆதவனின் வெளிப்படு திசையில் முடிவிலா உயரத்தில் பறந்து தன் குரலால் வெற்றி முழக்கமிட்டு தன் மீள்கையை உணர்த்தும்…
இனி அது சாதாரண கழுகு அல்ல… அதுவே ராசாளி…!
ஒவ்வொரு மாந்தர்க்கும் வாழ்க்கை தன் வாழ்க்கையை மாற்ற ஒரு கணம் கொடுக்கும்…
அத்தருணத்தில் முடிவெடுப்போம் நாம் வாழப் போவது வல்லூறாகவா? அல்லது…
கருத்து: ஸ்ரீ கிருஷ்ண விக்னேஷ்




