“தேவ துந்துபிகள் முழங்கின. தேவகி தேவி குழந்தையை கண்ணெதிரில் பார்த்தாள்” என்று ஸ்ரீகிருஷ்ண ஜனனம் அற்புதமாக வர்ணிக்கப் படுகிறது. ஏனென்றால் சிசு தாயின் கர்ப்பத்தில் வளர்ந்தானே தவிர ஒன்பது மாதங்கள் நிறைந்து அஷ்டமி நடு இரவில் அவள் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை. தேவகி வசுதேவரின் எதிரில் தென்பட்டான். இது மிகவும் ஆச்சரியமான விஷயம். எவ்வாறு என்பதை பார்க்கலாம்…!
“தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீவத்ச லக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம்
பீதாம்பரம் சாந்த்ர பயோத லௌபகம்
மஹார்ஹ வைடூர்ய கிரீட குண்டலத்விஷா
பரிஷ் வக்த சஹஸ்ர குந்தலம் உத்தாம
காஞ்ச்யங்கத கங்கணாதிபிஹி விரோசமாநம்
வசுதேவ ஜக்ஷத”
“பார்ப்பதற்கு சிறு குழந்தையாக இருந்தாலும் நான்கு கரங்களோடு இருந்தான்”. இங்கு சுக யோகீந்திரர் கூறும் சொற்களை கவனமாகப் பார்த்தால் செய்யுளின் முதல் பாதம் படித்தாலே நம் உடல் புல்லரிக்கிறது.
“தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்” என்கிறார். முதலில் ‘பாலகம்’ என்று கூறவில்லை. “தம் அற்புதம் பாலகம்” என்கிறார். ‘தம்’ என்றால் ‘அந்த’ என்று பொருள். அந்த அற்புதமான பாலகன் என்கிறார். ‘தம்’ என்பது சம்ஸ்கிருதத்தில் ‘தத்’ என்ற சொல்லின் வேற்றுமை உருபு. ‘தத்’ காயத்ரி மந்திரத்தில் முதல் அக்ஷரம். தத் என்பது பரமாத்மாவை குறிக்கிறது. தம் என்றால் பரமாத்மா. பரமாத்மா எப்படிப்பட்டவர்? அற்புதமானவர். இறைவனை விட ஆச்சரியமானவர் வேறு யாருமில்லை!

“ஆஸ்சர்ய வத் பஸ்யதி கஸ்கிதேனம்” என்கிறது உபநிஷத்து. எனவே அற்புதம் என்பது பரமாத்ம ஸ்வரூபம். மிக மிக ஆச்சரியமான பரமாத்ம தத்துவம் அது. அது ‘பாலகம்’! குழந்தை வடிவத்தை எடுத்து வந்தது. எனவே பாலகனாக வந்தது யார்? சம்பூர்ணமான பரமாத்மா! ஆச்சரிய தத்துவமான பரமாத்மா சிறு குழந்தையாகத் தோன்றினான்.
அந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. தாமரை போன்ற விசாலமான நேத்திரங்கள். நான்கு கைகளிலும் சங்கு சக்கரம் கதை பத்மம் இவற்றை பிடித்துள்ளான். அத்தகைய சிறிய குழந்தை வடிவத்திலேயே ‘ஸ்ரீவத்ஸலக்ஷ்மம்’… வக்ஷஸ்தலத்தில் லட்சுமிதேவி, ஸ்ரீவத்ஸ லாஞ்சனம் கௌஸ்துபம் அனைத்தும் பிரகாசித்தன. அதோடுகூட பீதாம்பரம் அணிந்திருந்தான். நிறைந்த மேகத்தைப் போல் பிரகாசித்தான். அற்புதமான கிரீடம் ஆபரணங்கள் இவை அனைத்தோடும் கூட ஒளிவீசுபவனாக இருந்தான். ரம்யமான அழகிய கேசம் கொண்டிருந்தான்.
பிரகாசமான வடிவத்தோடு எதிரில் நின்ற பகவானை தேவகியும் வசுதேவரும் பார்த்து வியந்தனர். என்ன அழகு! என்ன அழகு! அன்னமாச்சர்யார் வியந்து பாடுகிறார்.
“புட்டேயபுடே சதுர்புஜாலு சங்கு சக்ராலு
எட்டு தரியின்செனே ஈ க்ருஷ்ணுடு
அட்டே கிரீடமு ஆபரணாலு தரிஞ்சியெட்ட
நெதுடனுன்னாடு ஈ க்ருஷ்ணுடு
சதுலாரா ஓ சதுலாரா சூடரே
ஸ்ராவண பஹுளாஷ்டமி
கதலாய நடுரேயி கலிகெ ஸ்ரீக்ருஷ்ணுடு”
இந்த சொரூபத்தை இது போன்ற குழந்தையைக் காண்பது ஆச்சர்யமல்லவா? அதனால்தான் “கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்” என்றார் வியாச பகவான். நேராக வந்து தோன்றிய பகவான் ஸ்ரீகிருஷ்ணரன். அதாவது உண்மையான மகாவிஷ்ணு எப்படி இருப்பாரோ அப்படியே இறங்கி வந்து விட்டார் என்பது இதன் விளக்கம்.
அவர் தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்தது ஒரு லீலையே! உண்மையில் அவர் எதிரில் தென்பட்டார். அப்படிப்பட்ட உருவத்தை ஆச்சரியமாக பார்த்தனர் தேவகியும் வசுதேவரும். கண்ணைப் பறிக்கும் தேஜசோடு ஒளி வீசுகிறான் குழந்தை கண்ணன்.
“அரய ஸ்ராவண பஹுளாஷ்டமி சந்த்ரோதயான சிருலதோ னுதயிஞ்சே ஸ்ரீக்ருஷ்ணுடிதிவோ…!’ என்று கீர்த்தனை செய்கிறார் அன்னமாச்சார்யார்.
உண்மையில் அது கிருஷ்ணாஷ்டமி தினம். அந்த சமயத்தில் சந்திரன் வரமாட்டான். வெண்ணிலவு இருக்காது. ஆனால் அந்த சிறைச்சாலை முழுவதும் வெண்ணிலவால் நிறைந்து போனதாம். ஏனென்றால் அங்கே ஒரு நீல சந்திரன் உதயமானான் என்கிறார். அந்த நீல சந்திரனே கிருஷ்ணசந்திரன்.
“நிசாமையே நீல நிசாகரம்” என்கிறார் நாராயண பட்டத்திரி. அப்படிப்பட்ட திவ்ய வடிவம் அங்கு தோற்றமளித்தது.
“சுவ்வி சுவ்வி சுவ்வாலம்மா நவ்வுசு தேவகி நந்தனு கனியே!” – இத்தனை அற்புதமாக வர்ணிக்கிறார் அன்னமையா.
எந்தத் தாயும் பிரசவ வேதனையின் போது சிரிக்க மாட்டாள். ஆனால் தேவகி தேவி குழந்தை உதயமான போது மகிழ்ந்து சிரித்தாள். அதாவது தேவகிக்கு பிரசவ வேதனை இல்லை என்பது பொருள். எதிரில் பகவான் தென்பட்டான். எத்தனை உயர்ந்த சொரூபம் பாருங்கள்! பிறக்கும்போது தாயைக் கூட அழ விடவில்லை கண்ணபிரான்! அத்தகைய “ஆனந்த ப்ரதாதா!” சிரித்துக்கொண்டே ஆனந்தமாக பார்த்தாளாம் தேவகீ தேவி!
மேலும் அந்த சமயத்தில்,
“சசிவொடசெ அலசம்புலு கடசெ
திசல தேவதல திகுள்ளு விடசெ
சுவ்வி சுவ்வி சுவ்வாலம்மா!” – அன்னமாச்சார்யார் இந்த நிகழ்வை வர்ணித்த அழகை எத்தனை அனுபவித்தாலும் போதாது!
அவ்விதமாக பகவான் ஆவிர்பாவம் நடந்த உடனே வசுதேவர் ஆனந்தத்தில் புளகாங்கிதமடைந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். முழங்கால் மீது அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் வழிய பரமாத்மாவை துதி செய்தார். ஏனென்றால் அவர்களுக்கு குழந்தை என்ற பாவனை ஏற்படவில்லை. பரமாத்மாவாக பார்த்தார்கள்.
பின்னர் தேவகி தேவி கூட போற்றித் துதித்தாள். “கண்ணில் தென்பட்ட வடிவம் எப்படி இருக்கிறதென்றால் இப்படிப்பட்டது என்று மனதால் நினைக்கவோ வார்த்தையால் விவரிக்கவோ இயலாதது. நிர்குணமானது. சர்வ வியாபகமான ஜோதி ஸ்வரூபம் எதுவோ எதைப் பற்றி வேதங்கள் நாங்கள் எதுவும் கூற இயலவில்லை கூறுகின்றனவோ அப்படிப்பட்ட ஆத்யாத்மிக ஒளியாகிய பரமாத்மா இன்று எனக்கு சிசு வடிவத்தில் தென்படுகிறான்.
சுவாமீ! உன்னை பார்த்துக்கொண்டே இருந்தால் நீ என் குழந்தை என்ற பாவனை வரவில்லை. அதனால் நான் பிரார்த்திக்கிறேன்! “உபசம்ஹார விஸ்வாத்மன் அதோ ரூபம் அலௌகிகம்” உன் அலௌகிகமான ரூபத்தை உபசம்ஹாரம் செய்து கொள்! சங்கு சக்கரம் கதை புஷ்பம் லட்சமி வக்ஷஸ்தலத்தோடும் சதுர்புஜங்களோடும் பிரகாசிக்கும் இந்த உருவத்தை உபசம்ஹரித்துக் கொண்டு நீ குழந்தையாகத் தென்படு, சுவாமீ! நீ எங்களுக்கு குழந்தையாக தென்படுவது என்பது ஒரு ஆச்சரியம்! இப்படிப்பட்ட அற்புதமான வரத்தை அருளிய உனக்கு நமஸ்காரம்!” என்று தேவகி கூறினாள்.
உடனே பகவான், “உங்களிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும்” என்றான். “நீங்கள் இன்று என்னை மகனாக பெற்றீர்கள் என்றால் அதன் பின்னால் சில புண்ணியங்கள் உள்ளன. முதலில் உங்கள் பிறவி வேறாக இருந்தது. அந்தப் பிறவியில் வசுதேவர் ‘சுதபன்’ என்ற பிரஜாபதியாக விளங்கினார். அப்போது அம்மா! உன் பெயர் ‘ப்ருஷ்ணி’. நீங்கள் இருவரும் என்னை நோக்கி தவம் செய்தீர்கள். தவம் செய்து “நாராயணா! நீ எங்கள் பிள்ளையாக வரவேண்டும்!” என்று பிரார்த்தனை செய்தீர்கள். அப்போது நான் உங்களுக்கு புத்திரனாக அவதரித்தேன். ‘ப்ருஷ்ணகர்பன்’ என்பது என் பெயர். ஆயின் உங்களுக்கு நான் மகனாகப் பிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எத்தனை தீவிரமாக இருந்தது என்றால் அதனைத் தீர்ப்பதற்கு ஒரு பிறவி போதவில்லை. அதனால் அடுத்த பிறவியில் நீங்கள் இருவரும் அதிதி கஸ்யபராக பிறந்தீர்கள். உங்களிடம் நான் வாமனனாக அவதாரம் எடுத்தேன். இப்போது நீங்கள் இருவரும் தேவகி வசுதேவராக பிறந்துள்ளீர்கள். உங்களிடம் நான் வாசுதேவ ப்ரம்மமான கிருஷ்ணனாக அவதரித்துள்ளேன். இது உங்கள் மூன்றாவது பிறவி. இனி உங்களுக்குப் பிறவி கிடையாது” என்றான்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணன் உத்பவித்த விதம்! சாட்சாத் பகவான்! மனிதனைப் போல தென்பட்டாலும் சம்பூரணமான நாராயணனே கிருஷ்ணன்! இதனை நினைவில் கொள்ள வேண்டும்.
இனி உங்களுக்கு பிறவி கிடையாது என்றான். இங்கு சிறிது சிந்திக்க வேண்டும். கிருஷ்ண தத்துவம் மிக ஆழமானது. கிருஷ்ணாவதாரத்தில் மறுபிறவி அற்றவர்கள் யார்? தேவகியும் வசுதேவரும். அதேபோல் ஜெயனும் விஜயனும். இவர்கள் முற்பிறவியில் ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபு. இரண்டாவது பிறவியில் இராவணன் கும்பகர்ணன். மூன்றாவது பிறவியில் சிசுபாலன் தந்தவர்தனன். இனி அவர்களுக்கும் பிறவி இல்லை.

கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனை சரணடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லாமல் செய்து முக்தி அளிப்பவன் கிருஷ்ண பரமாத்மா! இது கிருஷ்ணாவதாரத் தத்துவம். அதனால்தான் கிருஷ்ணனை ‘முகுந்தாவதாரம்’ என்பார்கள். பரிபூரண அவதாரம். சாக்ஷாத் பகவத் அவதாரம். அனைவருக்கும் முக்தி அளிப்பவன். ராட்சச அம்சத்தோடு வந்தவர்களுக்கு கூட கண்ணனே அருகிலிருந்து அனைத்தையும் பூர்த்தி செய்தான். யார் கண்ணனை கோபத்தாலோ அன்பாலோ சிந்தனை செய்து கொண்டிருப்பார்களோ அவர்கள் அனைவருக்கும் முக்தி அளிப்பவன் கிருஷ்ண பரமாத்மா! இது இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம்.
இவ்வாறு கன்னம்ன் தேவகியிடமும் வசுதேவரிடமும் கூறிவிட்டு, “இப்போது நான் குழந்தை வடிவம் எடுக்கப் போகிறேன். என்னை ஜாக்கிரதையாக தூக்கிச் சென்று நந்தவிரஜத்தில் ஒரு பெண் சிசுவைக் ஈன்ற யசோதாயின் மடியில் என்னை வைத்து விட்டு அந்தப் பெண் குழந்தையை எடுத்து வாருங்கள். இவர்கள் உள்ளார்களே என்று அஞ்சாதீர்கள். நான் இருக்கிறேன்!” என்று அபயம் அளித்து சிசு வடிவமெடுத்தான் மாயக்கண்ணன்.
அப்போது வரை கண் மூடாமல் காவல் காத்து வந்த சேவகர்கள் நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள். ஏனென்றால் யோக மாயையின் வேலை அது. “யாதேவி சர்வ பூதேஷு நித்ரா ரூபேண சம்ஸ்திதா! நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ!” அந்த யோக மாயையின் பணியால் அதுவரை கண்காணித்து வந்தவர்கள் அனைவரும் இருந்த இடத்திலேயே தூங்கி வழிந்தார்கள்.
தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த கம்சனுடைய பயம் எத்தனை தீவிரமானது என்றால் அஷ்டம கர்ப்பத்தில் பிறப்பவன் தன்னைக் கொன்று விடுவான் என்று இத்தனை நாட்களாக அச்சப்பட்டு கொண்டே இருந்தான்.
“அவன் பிறக்கும் நேரம் நெருங்கிவிட்டது. அவன் பெயர் விஷ்ணுவாம். அதையும் கேள்விப்பட்டேன். பிறந்து வளர்ந்து பெரியவனாகி வந்து என்னைக் கொல்லப் போகிறானா? அல்லது பிறந்ததுமே என்னருகில் வந்து ‘மாமா!’ என்றழைத்துக் கொன்று விடுவானா?”
“ஸ்ரவண ரந்த்ரம்பு ஏ சப்தம்பு வினபடு அது ஹரியனு பலுகனி ஏல கின்சு…!” -எங்கேயோ ஏதோ சொல் காதில் விழுந்தாலும் “ஹரி என்னை அழைக்கிறானோ?” என்றே தோன்றுகிறதாம் கம்சனுக்கு. போகிற போக்கில் புல் தடுக்கினாலும் ‘மாமா!’ என்று யாரோ அழைப்பது போல் தடுமாறுகிறானாம். அவ்வாறு பயந்து கொண்டே இருந்தான் கம்சன். மொத்தத்தில் சதா சர்வ காலமும் விஷ்ணுவையே நினைக்கிறான் கம்சன். அவன் ஒரு மகா யோகி. பயயோகி!
அதற்குள் வசுதேவர் பகவானின் ஆணைப்படி நடக்கத் தயாரானார். பரந்தாமன் அழகான இரு கைகள் கொண்ட குழந்தை வடிவமாக தன்னை மாற்றிக்கொண்டான். உடனே வசுதேவரின் கை விலங்குகள் தாமாகவே கழன்று கொண்டன. ஒரு கூடையில் மிருதுவான படுக்கை விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்து கிளம்பும்போது சிறைச்சாலை கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. கூடையோடு நலமாக வெளியே வந்தார்.
அச்சமயத்தில் ஆனந்த மிகுதியால் யமுனை நதி பொங்கியது. ஆனால் வசுதேவரைக் கண்டதும் தன்னை அடக்கிக் கொண்டது. அதற்குள் புஷ்ப மழை போல சிறு தூறல் ஆரம்பித்தது. கூடையில் உள்ள குழந்தை நனைந்து விடுவானே என்று வசுதேவர் நினைப்பதற்குள் ஆதிசேஷன் வந்து படமெடுத்து காத்து நின்றான். “கிருஷ்ணஸ்ய பகவான் ஸ்வயம்” என்றால் இதுதான். ஆரம்பத்திலிருந்தே மகிமை காட்டத் தொடங்கிவிட்டான் மாயக்கண்ணன்.
அதுமட்டுமல்ல அவ்வாறு பொங்கிய யமுனை கூட குறைந்து விட்டது. எத்தனை குறைந்தது என்றால் வசுதேவரின் பாதம் வரை. எதனால்? கிருஷ்ணனைத் தூக்கி சுமந்து வரும் வசுதேவரின் பாதங்களை தொட்டு அலம்ப வேண்டும் என்று யமுன நதி அவ்வாறு பிரவகித்தது.
அவ்விதமாக வசுதேவர் நந்த வ்ரஜத்தில் கண்ணனை இறக்கி வைத்து அங்கிருந்து அம்மனை எடுத்துக் கொண்டு திரும்பவும் முன் போலவே வந்து தேவகியின் மடியில் பெண் குழந்தையை வைத்தார். தானும் அருகில் அமர்ந்த உடனே கைவிலங்கு தாமாகவே பூட்டிக் கொண்டது. கதவுகள் மூடிக் கொண்டன. தூங்கி வழிந்த சேவகர்கள் விழித்து எழுந்தனர்.
உடனே அப்பெண் சிசு அழத் தொடங்கியது. யோகமாயை அவள்! அவளுக்கு தெரியாதா எப்போது அழ வேண்டும் என்று? உடனே காவலர்கள் மகிழ்ந்தனர். மிகச் சிறப்பாக காவல் காப்பதாக உறுதி செய்து கொண்டனர். எட்டாவது கர்ப்பம் பிரசவம் ஆகி விட்டது என்ற செய்தியை கம்சனுக்கு தெரிவிக்க குதூகலமாகச் சென்றனர்.
அதற்குள் கம்சன் தூக்கம் பிடிக்காமல் அவசர அவசரமாக எதிர் வந்தான். சிறைச்சாலைக்குள் நுழைந்தான். வியந்துபோனான். ஏனென்றால் எட்டாவது குழந்தையாக ஹரி வந்து பிறப்பான் என்றுதானே கேள்விப்பட்டான்? இது என்ன? பெண் குழந்தை பிறந்திருக்கிறதே! ஒரு கணம் யோசித்தான். உடனே தீர்மானித்து விட்டான். இது அந்த விஷ்ணு மாயையே! என்னிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெண் வடிவில் பிறந்துள்ளான் என்று எண்ணினான்.
அதுவும் உண்மைதான். விஷ்ணுவின் பெண் வடிவமே கௌரி! அது ஒரு ரகசியம். உபாசனை தொடர்பான அழகான அம்சம். “யா உமா ஸா ஸ்வயம் விஷ்ணுஹு!”
எப்படி இருந்தாலும் இது அஷ்டம கர்ப்பம். கொல்லாமல் விடக்கூடாதென்று எண்ணி குழந்தையை எடுக்க முயலும்போது தேவகி குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
“அண்ணா! வேண்டாம்! பெண் குழந்தையை எதுவும் செய்து விடாதே! உன் மருமகன் அல்ல. இவள் உன் மருமகள்! உன் கோபத்தை அடக்கிக் கொள். பெண்ணைக் கொல்வது தவறு. அதுவும் பெண் சிசுவைக் கொல்வது மேலும் தோஷம். அந்தப் பாவத்தைச் செய்யாதே!” என்று வேண்டினாள்.
ஆனாலும் கேட்காமல் பலவந்தமாக அந்தக் குழந்தையைப் பிடுங்கி வெளியில் எடுத்து வந்து ஒரு கல்லின் மேல் தூக்கி எறிந்தான். அப் பெண் சிசு கீழே விழாமல் ஆகாயத்தில் உயர்ந்து எட்டு கரங்களோடு சிம்ம வாகனத்தில் தரிசனம் அளித்தது. ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்த்தான் கம்சன். ஜெகன்மாதா அஷ்ட புஜங்களோடு சிம்மவாகினியாக தோற்றமளித்தாள். சித்தர்கள் தேவர்கள் ருஷிகள் அம்பாளைத் துதிக்கையில் அப்சரஸ் பெண்கள் கீர்த்தனை செய்கையில் ஒளிமயமாக பிரகாசித்தாள் ஜகத் ஜனனி.

இப்போது நாமனைவரும் ஜெகன்மாதாவை சிந்தனை செய்தோம். ஜகன் மாதாவின் தரிசனம் பெற்று தன்யமானோம்! ஏனென்றால் ஸ்ராவண அஷ்டமி கிருஷ்ண ஜன்மாஷ்டமி! அதே சமயத்தில் அம்பாளின் ஜன்மாஷ்டமியும் இன்றே அல்லவா?
அப்படிப்பட்ட அம்பாளை சில பவித்ர நாமங்களால் துதி செய்தால் உய்டையலாம் என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. யார் இந்த நாமங்களால் அம்பாளை போற்றுவாரோ அவருக்கு அம்மனின் அருள் கிடைக்கும் என்று நாராயணனே பாகவதத்தில் கூறியுள்ளார்.
துர்கா பத்ரகாளி விஜயா வைஷ்ணவி குமுதா சண்டிகா கிருஷ்ணா மாதவி கன்யகா மாயா நாராயணி ஈசானா சாரதா அம்பிகா – இவை அம்பிகையின் திவ்ய நாமங்கள்! பாகவதத்தில் பரமாத்மாவே சுயமாக தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட அம்பிகை ஆகாய மண்டலத்தில் ஒளி வீசியபடி ஆச்சரியத்தோடு பார்த்த கம்சனிடம் கூறுகிறாள், “வெட்கமாக இல்லையா உனக்கு? ஆறு சிறு குழந்தைகளைக் கொன்றாய். இப்போது என்னையும் கல்லின் மீது வீசி எறிந்து கொல்லப் பார்த்தாய். இதுவா உன் வீரம்? நீ எத்தனைதான் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்த்தாலும் உன்னை கொல்லக் கூடியவன் பிறந்துவிட்டான். ஓரிடத்தில் வளர்கிறான்” என்றாள்.
எங்கே வளர்கிறான் என்று கூறவில்லை. இதில் ஒரு ரகசியம் உள்ளது. அதையும் நாம் அறியவேண்டும். கம்சனிடம் இந்த விவரங்களை யோக மாயை எதற்காக கூறவேண்டும்? எதுவும் சொல்லாமல் இருந்து விட்டால் பிரச்சனையே இருக்காது அல்லவா?
கிருஷ்ணனிடம் திட்டம் ஒன்று உள்ளது. கம்சன் ஒரு யோகி. அந்த யோகத்தின் பெயர் பய யோகம். ராமாயணத்தில் மாரீசன். பாகவதத்தில் கம்சன். இருவரும் ஒரே மாதிரி பயத்தில் இருந்தவர்கள். யோகம் என்றால் நிரந்தர சிந்தனை. நிரந்தரம் இறை சிந்தனை செய்து வந்தால் ஒழிய முக்தி கிடைக்காது. அப்படியின்றி கிருஷ்ணன் திடீரென்று பிறந்து வந்து கம்சனை ஒரே குத்து குத்தி கொன்று விட்டால் கம்சன் இறப்பானே தவிர அவனுக்கு முக்தி கிடைக்காது. கிருஷ்ணன் கையால் மரணம் அடைந்தால் புண்ணியம் கிடைக்கும். ஆனால் மீண்டும் பிறப்பான். இவர்கள் அனைவரும் முற்பிறவிகளில் ராட்சசர்கள் ஆனதால் அவ்விதம் விஷ்ணு கையால் அடிபட்டு மீண்டும் பிறப்பெடுத்தவர்கள். அதனால்தான் அவர்களுக்கு முக்தி கிடைக்க வில்லை. யுத்தம் செய்தார்கள். மரணித்தார்கள். அவ்வளவே!
இப்போது அவ்வாறு இல்லை. அவனுக்கு முக்தி அருள வேண்டும். அதற்கான தகுதி நிரந்தர பகவத் சிந்தனை. அதையும் கிருஷ்ணன் அளித்தான். “யோக க்ஷேமம் வஹாம் யஹம்” என்பது இதுதான். அவனுடைய பய யோகத்தை நலமாக காத்து வந்தான். அதனை எங்கே தொடங்கினான் என்றால் முதலில் அசரீரியாக அஷ்டம கர்ப்பம் உனக்கு எமன் என்று கூறியதிலிருந்து அவனுடைய பயயோகம் ஆரம்பமானது. எட்டாவது குழந்தையாக விஷ்ணு வந்து அவதரித்து தன்னைக் கொன்று விடுவான் என்று அப்போதிலிருந்தே பயம் தொடங்கிவிட்டது. நடுவில் தன் மருமகன்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது நாரதர் வந்து பயத்தை மீண்டும் தூண்டி விட்டு சென்றார். கம்சனின் சிந்தனை யார் மீது சென்றது? விஷ்ணு சிந்தனை!
இப்போது யோக மாயை எதுவும் கூறாமல் சென்றிருந்தால் அஷ்டம கர்பம் மாயமாகிவிட்டது என்று எண்ணி நன்றாக உறங்கச் சென்று விடுவான். அதனால் அவனுடைய யோகம் தொடர்பறுந்து போகும்.
அதனால் மீண்டும் அவனுக்கு வேலை கொடுத்தாள் அம்பிகை. ஓரிடத்தில் வளர்கிறான் என்று கூறிச் சென்றாள். அது எந்த இடமென்று தேடுவதில் அவன் மீதி நாளை செலவிட வேண்டும். அத்தனை விஷ்ணு சிந்தனை இருந்தால்தான் கிருஷ்ணன் வந்து கொல்லும்போது அந்த சிந்தனையின் பலனாக சரீரத்தை விட்டு முக்தி பெறுவான். இத்தனை ரகசியம் உள்ளது இந்த கதையில். யோக மாயை செய்த யோகம் தொடர்பான ரகசியம் இது.
அவ்விதம் அம்பிகை எச்சரிக்கை செய்துவிட்டு மறைந்தாள். உடனே கம்சன் தேவகி வசுதேவர் இருவரின் பாதங்களிலும் விழுந்து வணங்கினான். “விஷ்ணு ஏதோ மாயை செய்துவிட்டான். இங்கே பிறப்பான் என்று கூறிவிட்டு வேறு எங்கோ பிறந்திருக்கிறான். நான் அறியாமல் சகோதரியான உன்னையும் உன் கணவரையும் மிகவும் துன்புறுத்தினேன். என்னை மன்னியுங்கள்!” என்று கை கூப்பித் தொழுதான். ஏதும் அறியாதவர் போல் அவர்கள் இருவரும் மவுனம் காத்தனர். சிறையிலிருந்து அவர்களை விடுவித்து, “உங்கள் வீட்டிற்கு சென்று நலமாக வாழுங்கள்! என்னை மன்னியுங்கள்!” என்றான்.
அதன்பின் அந்த சமயத்தில் யார் யார் பிறந்திருப்பார்களோ அந்த குழந்தைகள் அனைவரையும் வதைத்துவிட வேண்டும் என்று எண்ணி பல வித துஷ்டர்களை ராஜ்ஜியத்தின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைத்தான். பலவிதமான துஷ்ட சக்திகள் அங்கிருந்து கிளம்பிச் சென்று சிசுக்களை வதைக்கத் தொடங்கின.
அதே சமயம் நந்தவ்ரஜத்தில் யோக மாயை செய்த மாயத்தால், பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று அறியாத நிலையில் யசோதை இருந்தாள். யசோதை கண்திறந்து கண்ணனைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தாள். பிறந்தவன் யசோதை நந்தகோபரின் புதல்வன் ஆனாலும் கோகுலம் முழுவதும் பண்டிகை கொண்டாடினார்கள்.
நந்தனின் வீட்டிற்கு உற்சவம் கொண்டாடுவதற்காக கோகுலத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் திரண்டு சென்றார்கள். ஆண்கள் எவ்வாறு சென்றார்கள் என்றால் அழகான சட்டை, நல்ல வஸ்திரங்களை அணிந்து காணிக்கையாக நல்ல மதுரமான பதார்த்தங்களை எடுத்துச் சென்றார்கள். பெண்களும் உற்சாகமாகக் கிளம்பினார்கள்.
“என்ன தவம் செய்தோமோ! நம் யசோதா அம்மாவுக்கு சின்ன மகன் பிறந்திருக்கிறான். வாருங்கள் போய் பார்ப்போம்!” என்று அலங்கரித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

பிறந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை வேத பண்டிதர்கள் உதவியோடு நந்தகோபன் பூர்த்தி செய்தார்.
“நந்தஸ்த்வாத்மஜ உத்பந்நே ஜாதாஹ்லாதோ மஹாமனா: !
ஆஹூய விப்ரான் வேதஞான் ஸ்நாத: ஸுசிரலங்க்ருத: !!”
பிள்ளைக்கு தலைக்கு எண்ணெய் தடவி குளிப்பாட்டி, “விஷ்ணு ரட்சை இந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டும்” என்று நீரை கையில் எடுத்து குழந்தையைச் சுற்றி விட்டார்கள்.
“ஜோ ஜோ கமல தளேக்ஷணா
ஜோ ஜோ ம்ருகராஜமத்ய
ஜோ ஜோ கிருஷ்ணா
ஜோ ஜோ வல்லவகரபத
ஜோ ஜோ பூர்ணேந்து வதன
ஜோ ஜோ யனுசுன்…”
என்று பரமாத்மாவை ஊஞ்சலில் இட்டு அனைவரும் ஆனந்தமாக கானம் இசைத்தார்கள்.
சின்னக் கண்ணன் உறக்கம் கொண்டான். உண்மையில் பிரளய காலத்தில் ஜீவர்கள் அனைவரும் உறங்குகையில் விழித்திருந்து தூங்கச் செய்த பரமாத்மா கோபிகைகள் தூங்கச் செய்யும் போது ஹாய்யாக உறங்கினான்! எத்தனை அற்புதமான நிலையைக் காண்பிக்கிறான் கிருஷ்ணன் இங்கே! அதன் பின் பரமாத்மா குழந்தையாக இருந்த போதே பல லீலைகளை செய்தான்.
ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு நமஸ்காரம்! குழந்தைக் கண்ணனின் லீலைகளை எண்ணி மகிழ்வோம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



