“க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்”- பெரியவாள்
(வசியம்செய்தவருக்கும்,பாதிக்கப்பட்டவருக்கும் அருள்)
சொன்னவர்-டி.கே.அனந்தநாராயணன்
………………………காஞ்சிபுரம்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
காஞ்சிபுரத்தில் பிரபலமான ஒரு சிற்றுண்டிச் சாலையின் முதலாளியான முதலியாரை, யாரோ வசியம் செய்து, தவறான வழியில் போகச் செய்து விட்டார்கள். கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமைப்பட்டுப் போனார்.தன்னுடைய சொத்துக்களில் பெரும்பகுதியை அந்தப் பெண்ணிடம் இழந்தார்.
குடும்பத்தாருக்கு கவலை வந்து விட்டது.சொத்துகள் போனாலும் பரவாயில்லை. உயிருக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே?
சங்கரன் முதலியார் என்ற பரம பக்தர் ,பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.”அவர் நல்லவர்; மந்திரத்தால் அவர் மனத்தை மாற்றிவிட்டார்கள்” என்றார்.
அன்று மூல நக்ஷத்ரம். பெரியவாள் மௌனம்.
முதலியார் சொன்ன விவரங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு, கண்களை மூடிய வண்ணம் சிறிது நேரம் இருந்தார்கள். பின், மூன்று விரல்களை உயர்த்திக் காட்டினார்கள். முதலியாருக்கு பொருள் விளங்கவில்லை.
“எனக்குப் புரியல்லீங்களே….”
பெரியவாள் தரையில் மூன்று என்ற இலக்கத்தைப் போட்டுக் காட்டினார்கள்.
மூன்று என்பது புரிந்தது முதலியாருக்கு. ஆனால் அதன் அர்த்தம் என்ன?
குழப்பத்துடன் காஞ்சிபுரத்துக்கு திரும்பிவிட்டார், முதலியார். ‘பெரியவாளிடம் சொல்லிவிட்டோம்’ என்ற ஒரு சிறு திருப்தி.
மூன்றாம் நாள் ஏமாந்து போனவர் வீட்டு வாசலில் ஒரு ரிக்ஷா வந்து நின்றது. ஒரு பெண்மணி இறங்கினாள்.- இரண்டு மூன்று பைகளுடன். இவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. அவைகளை யெல்லாம் அவரை நோக்கித் தூக்கி யெறிந்துவிட்டு, ஒரு வார்த்தப் பேசாமல் அதே ரிக்ஷாவிலேயே போயே போய்விட்டாள் – ஊரிலிருந்தே!
பைகளில், கேரளத்துப் பெண்ணுக்கு அவர் கொடுத்த புடவை – துணிமணி,நகை -நட்டு எல்லாம்! ஒரு குந்துமணி தங்கம் கூடக் குறையவில்லை.
க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள் பெரியவாள்



