November 27, 2021, 8:59 am
More

  சிறுவனுக்காக மலைமீது கோயில் கொண்ட பெருமாள்!

  perumal 1 - 1

  கரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார்.

  இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், தீவிர சைவ/சிவப் பற்றாளனாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

  ஒரு நாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்றிருந்தார். சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில் ‘கோவிந்தா… கோவிந்தா…’ எனும் சப்தம் கேட்டது. சுந்தராம்பிகை ஓடோடி வந்து தெருவை பார்த்தாள்.

  அப்போது ஒரு கூட்டம் கோவிந்தா… கோவிந்தா… என்று உரக்க குரல் கொடுத்து கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து, மார்பில் துளசி மாலையுடன்,நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

  கூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி,அந்த சிறுவன் தனது மகன் தான் என்று கூறி, அன்னையே! எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேச பெருமாளை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். ஆண் குழந்தை பிறந்தது.

  ஐந்தாவது வயதில் குழந்தையை அழைத்துக்கொண்டு பெருமாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம் என்றாள் மிகுந்த சந்தோஷத்துடன்.

  இதை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி, அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள்.குழந்தை பிறந்தால் ஐந்து வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருப்பதிக்கு வந்து, காணிக்கை செலுத்தி, முடி இறக்குவதாக திருமலை ஶ்ரீநிவாசப் பெருமாளிடம் மனமுருக பிரார்த்தனை செய்து, வேண்டி கொண்டாள்.

  திருமலை வேங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள்.
  வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர்.

  குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய காலம். இதுவரை தன் கணவர் டங்கணாச்சாரியிடம் இப்பிரார்த்தனை பற்றி எதுவும் கூறவில்லை சுந்தராம்பிகை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நேர்த்திக்கடனை செலுத்த கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை.

  கோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. ‘சிவபெருமானை வணங்கும் நான், திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்’ என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கலங்கி கண்ணீர் வடித்தாள்.இந்தக் கவலையில் சுந்தராம்பிகை உடல் நிலை மோசமானது.

  பாலகன் குண்டலாச்சாரி தனது தாய் எப்போதும் அழுவதை கண்டு, ‘ஏனம்மா அழுகிறாய்?’ என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை எடுத்து கூறினாள்.

  அதைக் கேட்ட குண்டலாச்சாரி, ‘அம்மா நீ அழாதே!. திருப்பதி ஶ்ரீநிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு அழைக்க போகிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம் என்றான்.

  மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய் சுந்தராம்பிகைக்கு, அழுவதா? சிரிப்பதா?, என்று கூட தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் உறங்கியவுடன் பாலகன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான “உளி” முதலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அருகே இருக்கும் சிறிய மலைக்குச் சென்றான்.

  “திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு விரைந்து ஓடி வா!. என் அன்னையை காப்பாற்று! என் அன்னையின் உயிர் நீங்கினால் நானும் இறந்து விடுவேன்,” என்று அழுது கொண்டே மலையின் மீது ஆலயம் எழுப்ப எவ்வளவு உயரத்தில் ஆலயம் அமைக்க வேண்டும்,என்று அளந்து கொண்டு இருந்தான்.

  அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, ‘குழந்தாய்! இரவு நேரத்தில் இங்கே வந்து என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார். குண்டலாச்சாரி, ‘நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி வேங்கடேஸ பெருமாளை இங்கு வந்து சேவை தருமாறு அழைக்க போகிறேன்’ என்று கூறினான்.

  இதனை கேட்ட அச்சந்நியாசி, இதற்காகவா அழுகிறாய்? நாம் இருவரும் சேர்ந்தே இங்கு கோயில் கட்டுவோம். ‘உன்னால் இக்காரியம் தனியாக முடியக்கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். அதில் திருப்பதி வேங்கடாசலபதி நிச்சயமாக உனக்காக எழுந்தருள்வார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டது .நீ இப்போது உன் வீட்டுக்கு போய்விட்டு நாளைக்கு இங்கே வா!’ என்று சாந்தமாக கூறினார் சந்யாசி.

  சிறுவன் குண்டலாசாரி சிறு கற்களைத் தூக்கி வந்து துறவியிடம் கொடுத்தான்.இதற்குள் இருட்டி நடுநிசி நெருங்கவே, குண்டலாசாரி மறுநாள் வருவதாக துறவியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு போய்விட்டான். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி வந்து சாதுவாக படுத்து உறங்கினான்.

  எப்போதும் போல் சிறுவன் தந்தை டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார். அங்கு புதியதாக ஒரு கோவில் தீடீரென நிர்மாணிக்க பட்டு கம்பீரமாக எழுந்து நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ‘ஒரேநாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனால் கூட முடியாதே! அதுவும் இந்த கடினமான மலைப்பகுதியில். வேறு யாரும் இதை செய்ய சாத்தியம் இல்லையே!

  மன்னர் குலோத்துங்கச் சோழன் கூட என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே’ என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி மன்னரிடம் விளக்கம் கேட்டார்.

  மன்னரும் வியப்பில் ஆழ்ந்தார் மலைக்குச் சென்று பார்த்தார். தனக்கே தெரியாமல் மிக சிறந்த முறையில் வேங்கடவனுக்குகாக விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றார்.

  டங்கணாச்சாரி மன்னர் வாக்கை மதிக்காமல் கோயில் கட்டியவனை நானே அழித்து விடுகிறேன்,” என்ற ஆவேசத்துடன் ஆத்திரம் கண்ணை மறைக்க, இரவில் சென்று கோயிலுக்குள் ஒளிந்து நின்றார் . கோவில் கட்டியவர்கள் எப்படியும் திரும்ப வருவார்கள் என்பதால் அவர் பதுங்கி இருந்தார்.

  அப்போது சிறுவன் குண்டலாச்சாரி உளி முதலான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் ஆத்திரம் கண்ணை மறைக்க டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை தன் மகன் என்று தெரியாமலேயே, வாளால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு யாரும் வராததால், வீட்டிற்கு வந்து உறங்கினார் டங்கணாச்சாரி.

  மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து, கீழே கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து, தூக்கி வந்தனர். அப்போது டங்கணாச்சாரி திருதிருவென பேய் முழி முழித்தார்.

  மகனை இழந்த சுந்தராம்பிகை அழுது அரட்றினாள். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, ‘கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்’ என்று கூறினார்.

  அதைக்கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு ‘நான் துளசியை கையால் தொடமாட்டேன்’ என்றார்.

  இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து ‘இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல’ என்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.

  அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி தூங்கியவன் எழுவது போல, உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.

  அப்போது அசரீரி ஓங்கி ஒலித்தது.
  தானாய் தோன்றிய அப்பெருமாள் ‘‘குண்டலாச்சாரிக்காக தான் இங்கு தோன்றி காட்சி தந்தேன்; ‘குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு, மகிழ்ந்ததால் தான், யாம் இங்கே பிரசன்னமாகி இருக்கிறோம்”
  இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்தலாம். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ மேலும் “டங்கணாச்சாரி “ஹரியும் நானே”, “ஹரனும் நானே”என்றார்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,108FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-