spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்வாமி கூரத்தாழ்வான்

ஸ்வாமி கூரத்தாழ்வான்

- Advertisement -

ஸ்வாமி கூரத்தாழ்வான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம் : தை, ஹஸ்தம்
அவதார ஸ்தலம் : கூரம்
ஆசார்யன் : எம்பெருமானார்
சிஷ்யர்கள் : திருவரங்கத்தமுதனார்
பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்
அருளிச்செய்தவை : பஞ்ச ஸ்தவம் (அதிமானுஷ ஸ்தவம், ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம்), யோநித்யம் அச்யுத மற்றும் லக்ஷ்மிநாத தனியன்கள்.

இந்தக் கட்டுரையில்…

கி.பி 1010 (சௌம்ய வருஷம், தை மாதம், ஹஸ்த நக்ஷத்ரத்தன்று) ஒரு உன்னத குடும்பத்தில் கூரம் என்னும் கிரமத்தில் உள்ள கூரத்தாழ்வார் மற்றும் பெருந்தேவி அம்மாள் என்பவர்களுக்கு திருக்குமாரராக திருவவதரித்தார். இவருக்கு ஸ்ரீவத்ஸாங்கன் என்ற திருநாமத்தை சூட்டினார்கள்.

இவருடைய திருத்தாயார் சிறு வயதிலேயே ஆசார்யன் திருவடி (பரமபதித்தார்) அடைந்தார். சாஸ்திரம் ஒருவர் ஏதாவது ஒரு ஆச்ரமத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் (அதாவது ஒருவனுடைய திருமணத்திற்கு பின் அவன் தர்மபத்னி பரமபதித்தால், அவன் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு க்ருஹஸ்தாச்ரமத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்) இவருடைய திருத்தகப்பனாரோ மறுபடியும் திருக்கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு “நான் திருமணம் செய்து கொண்டால், வரும் புது மனைவி கூரத்தாழ்வானை நன்றாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அது மிகப் பெரிய பாகவத அபச்சாரம்” என்று கூறினார். இவருக்கு இத்தகைய உயர்ந்த பண்புகள் சிறு வயதிலேயே இருந்தது.

தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பி இவரை வழிநடத்தி வந்தார். தன்னுடைய நல்ல குணங்களுக்கு ஏற்றவரான ஆண்டாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளையே புகலிடமாகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரத்தையும் பெற்றுக்கொண்டார்.

தன்னுடைய அனைத்து செல்வங்களையும் கூரத்திலேயே விட்டு, தன்னுடைய தர்மபத்னியுடன் திருவரங்கம் சென்று அங்கு உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) பண்ணி வாழ்ந்து வந்தார்.

போதாயன வ்ருத்தி க்ரந்தம் என்ற க்ரந்தத்தை மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவரும் காஷ்மீரம் சென்றார். திரும்பி வரும் வழியில் அந்த க்ரந்தத்தை இழந்த பின்னர், இதைக் கண்டு எம்பெருமானார் வருந்த, அதற்கு கூரத்தாழ்வான் தான் அந்த க்ரந்தம் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டேன் என்று எம்பெருமானாருக்கு ஆறுதல் கூறினார். பிறகு திருவரங்கம் வந்தவுடன், எம்பெருமானாருடைய மிகப் பெரும் க்ரந்தமான “ஸ்ரீ பாஷ்யம்” என்னும் க்ரந்தத்தை எம்பெருமானார் அருளிச்செய்ய அதை இவர் பனை ஓலைகளில் ஏடுபடுத்துவதற்கு உதவி புரிந்தார்.

அமுதனார் – ஆழ்வான் – எம்பெருமானார்

இவர் திருவரங்கத்தமுதனாரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயிக்கச் செய்தார். எப்படி என்றால், முதலில் ஏகாகம் என்ற சடங்கில் உட்கார்ந்து, அவரிடமிருந்து கோயில் பொறுப்பு மற்றும் சாவியை பெற்று எம்பெருமானாரிடம் ஒப்படைத்தார்.

எம்பெருமானாருக்குப் பதிலாக இவர் சைவ அரசனிடம் சென்று, “ருத்ரன் தான் மிகப் பெரியவன்” என்று அரசன் கூறும் கூற்றை மறுத்து பேசி, “ஸ்ரீமன் நாராயணனே மிகவும் உயர்ந்தவன்” என்று ஸ்தாபித்தார். இந்த விவாதத்தின் இறுதியில் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை (சம்பிரதாயம்) காப்பதற்காக தன்னுடைய தர்சனத்தை (கண்கள்) இழந்தார்.

இவர் திருவரங்கத்தை விட்டு திருமாலிருஞ்சோலைக்குச் (எம்பெருமானார் திருநாராயணபுரத்திற்குச் (மேல்கோட்டை) சென்ற பிறகு) சென்று அங்கு 12 வருடங்கள் இருந்தார்.

பஞ்சஸ்தவத்தில் ஒன்றான ஸுந்தரபாஹு ஸ்தவத்தை இவர் கள்ளழகருக்காக (திருமாலிருஞ்சோலை எம்பெருமான்) அருளிச்செய்தார். எம்பெருமானார் திருவரங்கத்திற்கு எழுந்தருளிவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் இவர் திருவரங்கம் எழுந்தருளினார். எம்பெருமானார் நியமனத்தினால் இவர் வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாளிடம் அருளிச்செய்தார். இறுதியில் தன்னுடைய அனைத்து சம்பந்திகளுக்கும் மோக்ஷம் வேண்டும் என்றும், முக்கியமாக நாலூரானுக்கும் (ஆழ்வான் கண்களை இழப்பதற்கு இவனும் ஒரு முக்கியமான காரணம்) மோக்ஷம் வேண்டும் என்று கேட்டார்.

மொத்தமாக இவர் பஞ்ச ஸ்தவத்தை இவர் அருளிச்செய்தார் – ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம் மற்றும் ஸ்ரீ ஸ்தவம். இவை அனைத்துமே வேதாந்த அர்த்தங்களின் சாராம்சமாக விளங்குகிறது.
எம்பெருமானர் திருவரங்கம் கோயிலில் இவருக்கு பௌராணிக கைங்கர்யத்தை (பெருமாளுக்கு புராணங்கள் வாசிப்பது) நியமித்தார். மேலும் இவரது காலத்தில் இவரே நமது சம்ப்ரதாயத்திற்கு க்ரந்த நிர்வாகியாக (காலக்ஷேபாதிகாரி) இருந்தார்.

ஆழ்வான் மற்றும் அவருடைய திருக்குமாரர்கள்

பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்

இவரும், இவருடைய தர்ம பத்னியும், ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ப்ரசாதத்தை பெற்றனர். அந்த ப்ரசாதத்தை ஸ்வீகரித்ததால், இரண்டு அழகான குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். அவர்களுக்கு பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள்.
இவர் அருளிச்செயல் (4000 திவ்ய ப்ரபந்தம்) அனுபவத்தில் மிகவும் மூழ்கி இருந்தார். இதை எப்படி கண்டுகொள்ளலாம் என்றால், எப்பொழுது உபன்யாசத்தை தொடங்கினாலும், சொல்லப்போகும் விஷயத்தின் அனுபவத்தை நினைத்து மிகவும் உருகி அழுவார் இல்லையெனில் மூர்சையுற்றுக்கிடப்பார்.

பெரிய பெருமாள் நேரடியாக இவருடன் பேசுவார். இறுதியில் இவர் பெரிய பெருமாளிடம் மோக்ஷத்தைக் கேட்டார், பெரிய பெருமாளும் தந்தோம் என்றருளினார். இதைத் கேட்டறிந்த எம்பெருமானார், விரைந்து இவரிடம் வந்து, “எனக்கு முன்பாக எப்படி நீர் செல்லலாம்?” என்று கேட்க, அதற்கு இவர் “திருவாய்மொழியில் சூழ்விசும்பணிமுகில் பதிகத்தில் ஆழ்வார் கூறின படி, ஒருவன் பரமபதத்திற்குச் செல்லும் போது, நித்யர்கள் மற்றும் முக்தர்கள் வந்து, புதிய முக்தாத்மாவின் திருவடியை விளக்குவார்கள். இதை எப்படி தேவரீர் வந்து அடியேனுக்குச் செய்வதை அனுமதிக்கமுடியும். அதனால் தான் அடியேன் தேவரீருக்கு முன்பாகச் செல்கிறேன்” என்று கூறினார்.

பல ஐதீஹ்யங்கள் (சம்பவங்கள்) கூரத்தாழ்வானைப் பற்றி வ்யாக்யானங்கள் மற்றும் குரு பரம்பரா ப்ரபாவத்தில் விஸ்தரமாக கூறப்பட்டுள்ளது. இந்த ஒரு பக்கத்தில் கூரத்தாழ்வான் வைபவத்தைக் கூறி முடித்து விடமுடியுமா? கூரத்தாழ்வான் வைபவத்தைக் கூறுவதற்கு எனது இயலாமை அல்ல என்றால், இந்த பக்கம் முடிவற்றதாக இருக்கும்.

ஆழ்வானுடைய தனியன்

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)?

ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

எம்பெருமானாருடைய ப்ரதான சிஷ்யர்களுள் ஒருவர் கூரத்தாழ்வான். காஞ்சிபுரம் அருகில் உள்ள கூரம் என்ற கிராமத்தில் ஒரு உன்னதமான குடும்பத்தில் அவதரித்தார். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களுக்கு ஒரு உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அது கூரத்தாழ்வான் தான். இவர் முக்குறும்பை தொலைத்தவர் அதாவது 3 மதங்களை தொலைத்தவர் (வித்யா மதம் – மிகச்சிறந்த ஞானம் உடையவன் என்று பெருமைப்படுவது, தன மதம் – மிகுந்த செல்வம் உடையவன் என்று பெருமைப்படுவது, ஆபிஜாத்ய மதம் – ஒரு உயர்ந்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தேன் என்று பெருமைப்படுவது).

இவருடைய பெருமையை திருவரங்கத்தமுதனார், இராமானுச நூற்றந்தாதியிலும் “மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”, மணவாள மாமுனிகள், யதிராஜ விம்சதியிலும், “வாசாமகோசர மஹாகுண தேசிகாக்ர்ய கூராதிநாத” கூறினார்கள். இவர்கள் இருவருமே கூரத்தாழ்வானுடைய பெருமையை வாக்கினால் சொல்லி முடிக்க முடியாது என்று கூறினார்கள். உண்மையில் இராமானுச நூற்றந்தாதி மற்றும் யதிராஜ விம்சதி இரண்டுமே எம்பெருமானாருடைய பெருமைகளை கூற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அருளிச்செய்யப்பட்டது [இருந்தாலும் ஆழ்வான் பெருமை பேசப்பட்டது].

எம்பெருமானார் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்கு மிகவும் முக்கியமான ஆசார்யராகக் கருதப்படுகிறார். இந்த சம்ப்ரதாயம் உண்மையில் சனாதன தர்மத்தையே (வைதிக மதம் – வேதத்தை அடிப்படையாக கொண்டு விளங்கும் மதம்) பிரதிபலிக்கிறது. மேலும் தத்வத்ரயத்தைப் (சித் – ஜீவாத்மா, அசித் – உயிரற்ற பொருள், ஈச்வரன் – ஸ்ரீமன் நாராயணன்) பற்றி மிகவும் தெளிவாகவும் எல்லையற்ற ஞானத்தையும் உடையது. எம்பெருமானார் பாரத தேசம் முழுவதும் இந்த உயர்ந்த தர்மத்தை போதித்தார்.

இவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் பலவித நிலைகளில் இருந்து பலரையும் திருத்திப் பணிகொண்டார் – போதகர், கோயில் நிர்வாகம், சமூக சீர்திருத்தம், மனித நேயம் உடையவர், மற்றும் பல. வேதம், வேதாந்தம், பகவத் கீதை, சரணாகதியின் விளக்கம் (பகவானே புகல் என்றிருப்பது) மற்றும் வைதீக அனுஷ்டானங்களை விளக்குவதற்காக இவர் ஒன்பது க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

எம்பெருமானாருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஏனென்றால் இவருடைய திருத்தகப்பனார் திருவல்லிக்கேணியில் முக்கியமாக இருக்கும் பார்த்தசாரதி எம்பெருமானிடம் ப்ரார்தித்ததால் தான் எம்பெருமானர் இந்த உலகில் அவதரித்தார். திருவல்லிக்கேணி 108 திவ்யதேக்சங்களுள் ஒன்று. இந்த திவ்யதேசத்தை பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

கீதாசாரியனும் ஆழ்வானும் – 1

ஸ்ரீ பார்த்தசாரதி – அர்ஜுனனுக்கு ஸ்ரீபகவத் கீதையை அருளிச்செய்த கீதாசார்யன் . கிருஷ்ணர் தாமே தன் சோதிவாய் மலர்ந்தருளி சாதித்தால் ஸ்ரீ பகவத் கீதை சனாதன தர்மத்திற்கு, அதிலும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு முக்கியமான ப்ரமாணமாகக் கருதப்படுகிறது.

பகவத் கீதையில் 13 வது அத்யாயத்தில் கண்ணன் எம்பெருமான் க்ஷேத்ரம் (உடல்) மற்றும் க்ஷேத்ரஜ்ஞ (ஆத்மா) என்னுமவற்றைப் பற்றி விளக்குகிறார். அவர் கூறும் உபதேசத்தின் ஒரு பகுதியில், பகவானை உணர்ந்த ஒரு ஜீவாத்மாவினுடைய 20 குணங்களைப் பற்றி விளக்குகிறார். இந்த குணங்கள் கூரத்தாழ்வானிடத்தில் மிகவும் தெளிவாக ப்ரகாசிக்கிறது. இப்படிப்பட்ட குணங்களை ஆழ்வானின் வாழ்வில் நடந்த சரித்திரங்களைக் கொண்டு உதாரணங்களுடன் இப்பொழுது அனுபவிப்போம்.

ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11

அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥

அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥

அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥

அமானித்வம் – பணிவு

இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.

முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.

அதம்பித்வம் – செருக்கின்மை

போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.

அஹிம்ஸா – வன்முறையின்மை

ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.

க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை

எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.

இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.

ஆர்ஜவம் – நேர்மை

ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.

பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.

ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது

எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.

சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை

இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.

ஸ்தைர்யம் – மன உறுதி

“ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.

ஆத்ம-வினிக்ரஹ: – சுய கட்டுப்பாடு (வைராக்யம்)

அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.

இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்

திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.

அனஹங்கார – தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்

மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான் அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.

ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் – எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்ப்பது

ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.

அஸக்திர் – பற்றின்மை

எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.

புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க: – குழந்தை, மனைவி , வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்

அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.

இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.

இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம் ச ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்

கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி

மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.

விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்

ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.

அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்

சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்

தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.

தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது

அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.

இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe