கேள்வி:- ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் மைநாக பர்வத்தின் மேல் சிறிது ஓய்வெடுக்கும்படி கூறிய சமுத்திர ராஜன், பின்னர் யுத்த காண்டத்தில் ராமன் மூன்று நாட்கள் தர்ப்பை ஆசனத்திலிருந்த பின்பே ராம பாணத்திற்கு பயந்து மட்டுமே வழி அமைத்துத் தந்தான். எதனால் இப்படி?
பதில்:- சமுத்திர ராஜனும் பரமத்வாவான ஸ்ரீ ராமனுக்கு தாசனே. அதனால்தான் ராம காரியமாகச் செல்லும் ஹனுமனை ஓய்வெடுப்பதற்காக வரவேற்று உபசரிக்கும்படி மைநாகத்திடம் கூறினான். ஆயின் ஸ்ரீராமனுக்கு உடனே வழிவிடாமல் சில நாட்கள் கழித்து வழி அமைத்ததில் சிறந்த உட்பொருள் உள்ளது.
குறி பார்த்துத் தொடுத்த ராம பாணத்தின் மூலம் அங்கு அருகில் ‘த்ருமகுல்யர்கள்’ என்ற பிரதேசத்தில் இருந்து கொண்டு சமுத்திர ராஜனுக்குத் துன்பம் விளைவித்த ராட்சசர்களை அழிக்க வேண்டுமென்பது சமுத்திரனின் உத்தேசம். எனவேதான் ராமன் அம்பை எடுத்து பாணம் தொடுக்கும் வரை பொறுத்திருந்தான். அதன் பின் ராமனை பிரார்தித்து, த்ருமகுல்யர்களின் இடத்தில் அசுரர்களை வதைக்கும்படி வேண்டினான். ராமனும் அவனுடைய வேண்டுகோளை ஏற்றான். இது முக்கியமான காரணம்.
ஆனால் இதில் மற்றொரு பொருளும் உள்ளது. இயற்கை சக்திகளை அனுகூலமாக்கிக் கொள்வதற்கு சனாதன தர்மத்தில் பலவித தீக்ஷை வழி முறைகள் கூறப்பட்டுள்ளன. முதலில் அந்த தீட்சைகளை மேற்கொண்டு இயற்கை சக்திகளின் அதிஷ்டான தேவதைகளை உபாசனை செய்து பிரசன்னம் செய்து கொள்ள வேண்டும். அப்போது பிரக்ருதி அனுகூலமளிக்கும். இந்த தர்மத்தை நமக்கு போதிப்பதற்காகவே தர்ப்பை ஆசனத்தில் தீட்சையாக இருந்து காட்டினான் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து...
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)