
சனாதன தர்மத்திற்கு ஆதாரங்களான வேத, புராண, இதிகாசங்களைப் பற்றிக் குறிப்பிட்டோம். அவற்றின் சொரூப சுபாவங்களை விரிவாகப் பார்த்தோம். இந்த நல் நூல்களின் ஆதாரத்துடனும் சத்புருஷர்களின் நல் நடத்தையுடனும் நம் பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்னும் செல்வம் வளர்ந்துள்ளது.
இவற்றோடு கூட நம் கலாச்சாரத்தின் மேன்மைக்கும் செழிப்பான வளர்ச்சிக்கும் உதவுபவை ஸ்தோத்திர நூல்கள்.
நம் நாட்டில் ஸ்லோக நூல்கள் எண்ணற்றவையாக உள்ளன. அவற்றின் சக்தி, சங்கீதம் நிருத்தியம் போன்ற கலைகளின் மேல் தீவிரமாகப் பாய்ந்துள்ளது. இறைவனின் தத்துவம், மகிமை, லீலை, குணம், வைபவம் இவற்றைப் போற்றுவதே துதிப்பாடல்கள்.
யாகங்களின் போது வைதிக மந்திரங்களால் செய்யப்பட்ட தேவதைகளின் துதியை புராணங்களில் சுலோகங்களால் கட்டிப் போட்டார் வியாச மகரிஷி.
தெய்வத்தைப் பல்வேறு உருவங்களில் உபாசனை செய்யும் பக்தர்கள், தம் பக்திக்கும், அனுபூதிக்கும் சரணாகதிக்கும் ஏற்ப அக்ஷர வடிவங்களாக அபாரமான ஸ்லோகங்களை அருளியுள்ளார்கள்.

ஆன்மீக கண்ணோட்டத்துடன் மட்டுமின்றி, கலைப் பார்வையுடன் தரிசித்தாலும் பரிபூரண கவிதைப் படைப்புகளாக ஸ்தோத்திர சாகித்தியம் மலர்ந்துள்ளது.
வேத, புராண மார்க்கங்களை அனுசரித்து காளிதாஸர் போன்ற மகாகவிகள் அற்புதமான சந்தஸ்ஸுகளில் பாவனைச் சித்திரகளுடனும் சப்த, அர்த்த அலங்காரங்களுடனும் மகோன்னதமான ஸ்தாயியில் ஸ்தோத்திர சாகித்தியத்தை அருளியுள்ளார்கள். அது மட்டுமன்றி தத்துவச் சிந்தனை, ஜீவனின் வேதனை முதலிய எத்தனையோ பாவனைகள் அந்தப் படைப்புகளில் நதி நீரோட்டம்போல் பிரவகிக்கின்றன.
ஸ்தோத்திரங்களைப் படிப்பதாலும் பாராயணம் செய்வதாலும் நல்ல பலன்களை அனுபவத்தில் பெற்றவர்கள் அவற்றைப் பவித்திர நூல்களாகக் கண்டு ஆராதித்து வருகிறார்கள்.
சகஸ்ரநாம ஸ்தோத்திரங்கள் போன்றவற்றோடு சேர்த்து பல்வேறு துதிகள் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கிடைக்கின்றன. புராண நூல்களை பற்றி கேட்கவே வேண்டாம்!
ஆதிசங்கர பகவத்பாதரின் சக்தியால், ஸ்தோத்திர சாகித்தியம் ஒரு மேன்மையான ஒளி பொருந்திய இடத்தை பிடித்ததுள்ளது. அவருடைய கனகதாரா ஸ்தோத்திரம், சௌந்தரிய லஹரி, சிவானந்த லஹரி போன்றவை மகா காவியங்களாக போற்றப்படுகின்றன. இவற்றை சாமானியர்கள் கூட எளிதாகப் பாராயணம் செய்கிறார்கள்.
சிவ தாண்டவ ஸ்துதி, மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் போன்றவை சங்கீத வடிவெடுத்தது, அழகான லயத்துடன் அனைத்து மக்களுக்கும் நல்ல ரசானுபூதியை அளிக்கின்றன. அஷ்டகங்களாக, தண்டகங்களாக விஸ்தரித்துள்ள துதிப்பாடல் சாகித்தியம், சமஸ்கிருதத்தில் ஒரு மகா சமுத்திரம் போல் காணப்படுகிறது. சியாமளா தண்டகம் போன்றவை இன்றும் நித்ய பாராயணமாக உள்ளன
புஷ்பதந்தரின் சிவ மகிம்னா ஸ்துதி பிரசித்தியாக தேசமெங்கும் பரவி உள்ளது. லீலாசுகரின் ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம், அப்பைய தீக்ஷரின் சிவகர்ணாம்ருதம், ஆதி சங்கரர் எழுதியதாக கூறப்படும் ஸ்ரீராமகிருஷ்ணாமிருதம் போன்றவை சாகித்ய உலகின் அமிர்த கலசங்கள். ஜெயதேவரின் கீதகோவிந்தம் ஒரு ரசஸ்துதி.
சில ஸ்தோத்திர காவியங்கள், பல்வேறு க்ஷேத்திரங்களோடு தொடர்புடையவை. உதாரணத்திற்கு குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணரைத் துதித்துப் பாடிய ஸ்ரீமன் நாராயணீயம் நாராயண பட்டத்ரி தன் தவத்தின் பலனால் அருளிய துதிப் பாடல். தெய்வத்தின் மறு உருவான இந்த துதி, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் பிரசித்தியாக உள்ளது. சந்தஸ்ஸிலும் பக்தியிலும் அலங்காரச் செல்வத்திலும் சகல லட்சணங்களையும் பெற்ற நூல் இது. இதன் பாராயணம் பரிபூரண ஆரோக்கியத்தை அருள வல்லது.
மயூர கவி எழுதிய சூரிய சதகம், ஸ்ரீகூர நாராயணகவி எழுதிய சுதர்சன சதகம் போன்றவை படிக்கும் போது நம்மை மறக்கச் செய்கின்றன.
நம் நாட்டு கலாச்சாரத்திற்கு உயிர் போன்ற சமஸ்கிருத மொழி, இன்றளவும் சாமானியர்களிடம் சிறிதளவாவது உயிர் வாழ்கிறதென்றால், அது ஸ்தோத்திரப் படைப்புகளினால்தான். அவற்றின் மகிமையை அங்கீகரிக்கத்தான் வேண்டும்.
நம் நாட்டு மொழிகள் அனைத்திலும் துதிப் பாடல்கள் பிரகாசமான இடத்தை பிடித்துள்ளன. மகாராஷ்டிராவில் துக்காராம், ஞானேஷ்வர் போன்றவர்களின் நூல்கள், தமிழில் ஆழ்வார்கள், நாயன்மார்களின் வைஷ்ணவ, சிவ சாகித்தியங்கள், கன்னடத்தில் பசவேஸ்வரரின் வசனங்கள், தாச சாகித்தியங்கள் … இவை சில உதாரணங்கள் மட்டுமே!
தெலுங்கில் தாசரதி சதகம், ந்ருசிம்ம சதகம், ஸ்ரீகிருஷ்ண சதகம் போன்றவை தெய்வ பக்தியோடு கூட தர்ம சிந்தனையையும் நீதி நேர்மையையும் கூட போதிக்கின்றன. ஆஞ்சநேயர் தண்டகம் போன்றவை மிகச் சாமானியர்களைக் கூட அரவணைக்கின்றன. போத்தனா எழுதிய பாகவத காவியம் எத்தனையோ அற்புத துதி பாடல்களை தெலுங்கு மொழியில் சாஸ்வதமாக பிரதிஷ்டை செய்துள்ளது. தூர்ஜடி எழுதிய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சதகம் கம்பீரமான நூலாக சைவ சாகித்தியத்தின் மணி தீபமாக விளங்குகிறது.
ஸ்தோத்திரப் படைப்புகள் சங்கீத உலகில் கூட நிலைபெற்றுள்ளன. தெய்வ பக்தி இல்லாத சங்கீதத்தை நம் நாட்டு மக்களின் இதயம் ஏற்காதேமோ! எந்த மொழியானாலும் எந்த இடமானாலும் தெய்வ பக்திப் பாடல்களே கீர்த்தனை செய்யப்பட்டு சங்கீத உலகைச் செழிப்பாக்கி உள்ளன.
மீரா, சூர்தாசர் போன்ற வடநாட்டு பக்தர்களோடுகூட, அன்னமய்யா, ராமதாசர், க்ஷேத்ரய்யா, தியாகராஜ சுவாமி, முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, சதாசிவ பிரம்மேந்திர சுவாமி, தரி கொண்ட வேங்கமாம்பா போன்ற சங்கீத ஆச்சார்யர்கள் எத்தனையோ பேர் கீர்த்தனை வடிவில் ஸ்தோத்திர சாகித்தியத்தை படைத்துள்ளனர்.
இவை நம் அழியாத கலைச் செல்வங்கள். தார்மீக வாரிசுகள். முக்திக்குப் படிக்கட்டுகள். நம் நாட்டு பக்தி பாவனை இந்த சரஸ்வதி கிருபையை இதயத்தில் இருத்திக் கொண்டு காப்பாற்றி வருகிறது. இதன் மூலம் நம் பக்தி மார்க்கத்தையும் தார்மீக செல்வத்தையும் இடைவிடாமல் நிலைத்திருக்கச் செய்து வருகிறோம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



