“எனக்கே மூணு நாளா ஜுரம்-!”-பெரியவா.
( நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. ‘எனக்கே மூணு நாளா ஜுரம்’. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!”)

பெரியவரின் நகைச்சுவை.-மறுபதிவு
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர். ஒரு நாள் இவர் படுத்துக்கொண்டிருக்கும்போது கிழவர் ஒருவர் வந்தார். “பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை: அடிக்கடி ஜுரம் வருது. ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு!” என்று பெரிய பட்டியல் போட்டு, “பெரியவாதான் காப்பத்தணும்!” என்று கும்பிட்டார்.
பெரியவா முனகிக் கொண்டே “ஒக்காரு! உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா..” என்று ஆரம்பித்தார்:
“ஒரு கிராமத்திலே, கோயிலில் குறி சொல்லும் பூசாரி ஒருவர் இருந்தார். அவர் சொன்னதெல்லாம் பலித்துவிடும்.அதே ஊரில் இருந்த ஒரு போலீஸ்காரர், பூசாரியின் நெருங்கிய நண்பன்.
ஒரு நாள் அந்த பூசாரி கோயிலைத் திறந்தார். பல சாமான்கள் திருட்டுப் போய்விட்டதைப் பார்த்தார். உடனே தன் போலீஸ் நண்பனிடம் தெரிவிக்க ஓடினார்.
அதே சமயம் அந்த போலீஸ்காரர் பூசாரியைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தார்.. “தேடிப்போன மூலிகை காலில் சுத்திண்டதுபோல நீயே வந்துட்டியே!” என்று பூசாரி சந்தோஷப்பட்டார். “கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல நீங்க வந்துட்டிங்களே!” என்று போலீஸ்காரனும் சந்தோஷப்பட்டார்.
“என்னது, நீ என்னைத் தேடி வரயா? என்ன ஆயிற்று?” என்றார் பூசாரி. “என் சைக்கிளைக் காணோம்: யார் எடுத்திருப்பான்னு கொஞ்சம் குறி பார்த்துச் சொல்லணும். அதுக்குத்தான் ஓடி வரேன்!”என்றார் அவர்!. “அட…ராமா! நானே கோயில் சாமான்களைக் காணோம் நீ கண்டு பிடித்துக் கொடுப்பாய் என்று உன்னைத் தேடி வந்துண்டிருக்கேன். நீ இப்படிச் சொல்றயே?” என்றாராம்.
இது போலத்தான், நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. ‘எனக்கே மூணு நாளா ஜுரம்’. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!” என்று சிரித்தாராம் பெரியவா.
கிழவரும் சிரித்துவிட்டார்.



