உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமேதியில் ராகுல் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக., சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராகுல், ஓட்டுப்பதிவு தினத்தில்கூட அமேதியில் ஏன் இல்லை என்று கேள்வி எழுபியுள்ளார் ஸ்மிருதி இரானி.
‘அமேதி தொகுதி மக்களுக்கு ராகுல் ஏன் இங்கு இல்லை என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும். ராகுல் ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்? அவருக்கு அமேதி தொகுதி மக்கள் மீது அக்கறை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என்று கூறினார்.
மேலும், ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்காவை விமர்சித்த ஸ்மிருதி இரானி, கடந்த 5 ஆண்டுகளாக என் பெயர் பிரியங்காவுக்குத் தெரியாது. ஆனால், இப்போது பிரியங்கா வத்ரா அவரது கணவரின் பெயரை விட எனது பெயரைத் தான் அதிக முறை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து டுவிட்டர் மூலம் நிர்வாகிகளை எச்சரித்ததுடன், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்து விட்டேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.
ராகுலின் இத்தகைய அரசியலை தண்டிப்பதா அல்லது வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ராகுல் டிரஸ்டியாக இருக்கும் மருத்துவமனையில் ஒருவருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை இருந்தும் சிகிச்சை மறுக்கப்பட்டதால், அவர் உயிரிழந்துள்ளார்… என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அமேதி தொகுதியில் காங்கிரசுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியினர் தங்களை கட்டாயப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோவை டிவிட்டரில் ரீ-டுவீட் செய்து பகிர்ந்துள்ளார் ஸ்மிருதி இரானி.
Alert @ECISVEEP Congress President @RahulGandhi ensuring booth capturing. https://t.co/KbAgGOrRhI
— Chowkidar Smriti Z Irani (@smritiirani) May 6, 2019




