
சனாதன தர்மத்தில் சாஸ்திரங்கள் அனேகவித அம்சங்களைக் கூறுகின்றன. ஆனால் அவற்றுள் சில சாமானியர்களின் பார்வைக்கு அற்புதமாகத் தென்படும். சில பொருளற்றவையாகத் தென்படும்.
சிறிது சாஸ்திர பரிச்சயத்துடனோ அல்லது ஆழ்ந்து சிந்தித்து பார்த்து கவனிப்பதாலும் அது பொருளோடு கூடியதே என்பதை உணரமுடியும். நாமே தவறாக புரிந்து கொண்டு விட்டோம் என்று நாளையாவது அங்கீகரிப்போம்! அதனால் அவசரப்பட்டு பெரியவர்கள் கூறிய வழிமுறைகளை பொருளற்றது என்றோ வீண் என்றோ கருதக் கூடாது.
மேலும் மக்களை மகிழ்விப்பதற்காக அவற்றை பொருளற்றது என்று வாதிப்பது கூட தவறு. இதனை உணர வேண்டும்.
சிவலிங்கத்தில் சிவன் உள்ளான் என்ற பாவனையோடு அவனுக்கு பால், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யும்படி சாஸ்திரங்கள் கூறியுள்ளன. லிங்கத்தில் சிவன் உள்ளான் என்று எந்த சாஸ்திரம் கூறுகிறதோ அதே சாஸ்திரம் எவ்விதம் வழிபாடு செய்தால் லிங்கம் சிவலிங்கமாகும்? எவ்விதமாக வழிபாடு செய்தால் விக்கிரகம் தெய்வமாகும்? என்பதையும் கூறுகின்றது.
யாருடைய நம்பிக்கையோடும் அவநம்பிக்கையோடும் அதற்கு சம்பந்தம் இல்லை. நம்பினாலும் நம்பாவிட்டாலும் அந்த வழிமுறைப்படி சிலையை ஸ்தாபித்தால் விக்ரஹம் தெய்வமாகிறது. அதற்கான பிரதிஷ்டை வழிமுறைகள் நமக்கு உள்ளன. சுயம்பு க்ஷேத்ரங்களில் பிரதிஷ்டை தேவையில்லை. ஆனால் அங்கு அதற்குரிய ஆகமத்தின்படி நியமங்களை மேற்கொண்டால் அந்த விக்கிரகத்தில் உள்ள தெய்வ சக்தி கட்டாயம் அருள்புரியும். அதற்குத் தகுந்த சில ஆசார நியமங்கள் உள்ளன.
அவற்றை மதிக்காமல் அம்பிகை சிலைக்கு நகைகள் எதற்கு? நகையையெல்லாம் விக்கிரகத்துக்கு சாத்துவதற்கு பதில் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க கூடாதா? என்று கேட்பவர்களிடம் என்ன கூறுவது? விக்கிரகத்தை வெறும் பொம்மையாகப் பார்ப்பவர்கள் நாத்திகர்கள். ஆத்திகர்கள் விக்கிரகத்தை தெய்வம் என்ற பார்வையோடு பார்க்கிறார்கள்.
ஆலயம் என்ற அமைப்பை நம்பும்போது ஆலயத்தில் பூஜை விதானங்களைக் கூட சாஸ்திர ஆதாரத்தோடு நம்பவேண்டும்.
வில்வ இலை சிவபெருமானுக்குப் ப்ரீத்தி. துளசிதளம் விஷ்ணுவுக்கு ப்ரீத்தி. அருகம்புல் கணபதிக்கு ப்ரீத்தி. காரணம் என்ன என்பதை நாம் பௌதிக சாஸ்திரத்தின் மூலம் கூற இயலாது. பௌதிக சாஸ்திரம் வேறு! ஆன்மீக சாஸ்திரம் வேறு! அதனை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. இதனை அதனால் பார்க்கக்கூடாது. எதன் மரியாதை அதற்குண்டு. இதனை அறிய வேண்டும்.

வில்வ தளத்தால் சிவபெருமானைப் பூஜிப்பது என்ற அம்சத்தில் அந்த இலையில் ஏதோ தெய்வீகம் உள்ளது. சிவனில் உள்ள இயல்புக்கும் அந்த இலைக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளது என்பதை அறிய வேண்டும். அதேபோல் துளசி தளத்துக்கும் மகாவிஷ்ணு பூஜைக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது. அருகம் புல்லுக்கும் கணபதிக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. இந்த விஷயங்கள் எல்லாம் கிரகித்து அறிய வேண்டியவை. அதனால் முறையாக செய்யும் இந்த வழிபாடுகள் எல்லாம் மிக உயர்ந்தவையே!
அதேபோல் பசும்பால் கொண்டு வழிபட்டால் என்ன பலன்? பசும் தயிரால் வழிபட்டால் என்ன பலன்? என்பதைப் பற்றி கூட சாஸ்திரத்தில் கூறியுள்ளார்கள். இவை அனைத்தாலும் அபிஷேகம் செய்த தீர்த்தம் அருந்தினால் என்ன கிடைக்கும்? என்று கூட சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு வழிபாடு செய்பவர்கள் சாஸ்திரங்கள் விவரித்துள்ள பலன்களைப் பெறுவதை இன்றளவும் பார்க்க முடிகிறது.
துன்பத்திலும் கவலையிலும் இருப்பவர்கள் ருத்ராபிஷேகம் செய்து சிறப்பாக மந்திரங்களைப் படித்து அங்கு பசும்பால் அபிஷேகம் செய்து அதற்கான மந்திரத்தை உச்சரித்து தயிரால் அபிஷேகம் செய்யும்போது அதற்கான மந்திரத்தை உச்சரித்து நெய், தேன் போன்ற சாத்வீகமான பதார்த்தங்களால் அபிஷேகம் செய்யும்போது அதற்கான மந்திரங்களோடு அந்த தேவதைகளை வணங்கி, மீண்டும் தீர்த்தமாக அவற்றைப் பெறுகையில் சாஸ்திரங்களில் கூறியுள்ளவை அனைத்தும் கிடைத்தே தீருகிறது.
ஒரு பயங்கரமான கிரக தோஷம் இருந்தால் சிவபெருமானுக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை அருந்தும்போது பலன் உடனே தெரிவதைப் பார்க்கிறோம். சாஸ்திரத்தில் கூறப்பட்டவை கண்முன்னால் நடப்பதைக் காண்கிறோம்.
அதனால் சாஸ்திரங்களில் கூறியுள்ள சூட்சுமமான தெய்வீகமான அம்சங்களை நாம் பௌதீகமான காரணங்களைக் காட்டி நம்பும்படி செய்வதற்கு முயற்சிப்பது கூட தவறு.
ஆலயங்களில் தெய்வ சக்தி நிச்சயம் இருக்கிறது. விக்கிரகங்களிலும் சிவலிங்கத்திலும் தெய்வ சாந்நித்தியம் இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களில் சாஸ்திரம் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைபிடித்தால் அது ஆலயத்திற்கு மட்டுமே அன்றி அந்த ஆலயம் இருக்கும் ஊருக்கும் மேன்மை! மக்களுக்கும் க்ஷேமம். தேசத்திற்கும் நன்மை!
அதனால் சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி, கணபதிக்கு அருகம்புல்… இவ்வாறு அந்தந்த தெய்வங்களுக்குக் கூறியுள்ள பூஜை பதார்த்தங்களால் வழிபட்டு அபிஷேகம் செய்து அதன் பலன்களை சமுதாயம் முழுவதுமாகப் பெற வேண்டும்! ப்ரக்ருதி நலமாகவும் சாந்தமாகவும் விளங்க வேண்டும்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



