“சீட்டுக் கட்டு வைத்தியம்”
(பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா? சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா? ‘துருப்பு’ அவர்கள் (பெரியவா) கையில் இருக்கிறது.)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
வயோதிகர் ஒருவருக்குப் பாரிசவாயு வந்து வலது புறம் முழுவதும் செயலற்றுப் போய் விட்டது. மருத்துவத்தில் சிறிதளவு குணமாயிற்று.பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை.
அவருடைய மனைவி, பெரியவா தரிசனத்துக்கு வந்தார். கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்தார். “பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். அவருக்குப் பூரண குணம் ஆகணும்…..”
பெரியவா ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்கள்.
“அவருக்கு உடம்பு குணமாகணும்னா,என்ன வேணா செய்வியா?”
” என்ன சிலவானாலும் பரவாயில்லை…”
“அது இல்லை. நான் சொல்றதை விளையாட்டா எடுத்துக்க மாட்டியே?”
“மாட்டேன்…”
“சீட்டுக்கட்டு இரண்டு வாங்கி, எப்போதும் அவர் கண்ணில் படும்படி வெச்சுடு. கொஞ்சம் கொஞ்சமா நினைவு வரும். பேச்சு வரும்…”
அந்த அம்மாளுக்கு ஆச்சரியமாகவும், விநோதமாகவும் இருந்தது. தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? என்று ஆச்சரியம். சீட்டுக் கட்டு கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், உடம்பு குணமாகி விடுமா? என்ன விநோதம்!
ஆனால் அந்த அம்மையார், பெரியவா சொன்னபடியே செய்தார்.
சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு வந்தது. பேரன் – பேத்திகளுடன் விளையாட்டாக சீட்டாட ஆரம்பித்தார். தப்புத் தப்பாக ஆடினான் பேரன்.
“இஸ்பேட்டுக்குப் பதிலா ஆட்டின் போடறியே>” என்று பேரனை அதட்டினார்.
பேச்சு வந்து விட்டது.
பெரியவா சொன்னது வீட்டு வைத்தியமா? சீட்டு வைத்தியமா? அல்லது சீட்டுப் பைத்தியமா?
‘துருப்பு’ அவர்கள் கையில் இருக்கிறது



