
நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் இறைவனிடம் என்னவென்று பிரார்த்திக்கவேண்டும்? நமக்கு ஸ்ருதி, ஸ்மிருதிகளில் பலவிதமான பிரார்த்தனைகள் கூறப்பட்டுள்ளன. அந்தப் பிரார்த்தனைகளை யோசித்துப் பார்த்தால் அன்றைய ருஷிகளின் ஆலோசனை விதானம் எவ்வாறு இருந்தது என்பதும் நம்மைக் கூட எவ்விதம் ஆலோசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதும் தெளிவாகப் புரியும்.
முக்கியமாக யக்ஞம் செய்யும்போது அக்னிதேவனை பிரார்த்திப்பார்கள். அந்தப் பிரார்த்தனை மந்திரங்களைக் கூட தெரிந்து கொள்ள வேண்டும். செய்து வைப்பவர்களும் மந்திரத்தின் பொருளை அறிந்திருக்க வேண்டும். செய்பவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் ஹோமம், யாகம் எல்லாம் செய்வோமே தவிர, அதிருந்து ஏதோ புண்ணிய பலன் கிடைக்கும் என்று ஆர்வத்தோடு அங்கே அமர்ந்திருப்போம். ஆனால் அதில் என்ன நிகழ்கிறது என்பதை கவனிக்க மாட்டோம்.
இறுதியில் அக்னி தேவனிடம் பிரார்த்தனை செய்தபடி பிரதக்ஷிணம் செய்வார்கள். அப்போது கூறும் மந்திரம் “அக்னேனைய சுபதாராயே !” என்று தொடங்குவார்கள். “என்னை நல்ல வழியில் நடக்கும்படி செய்வாயாக!”. இது தான் அங்கு கேட்கப்படுகிறது.
நல்ல வழியில் நடக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையானவை நிறைய உள்ளன. முதலில் நல்ல மார்க்கம் என்னவென்று தெரிய வேண்டும். பிறகு நல்ல மார்க்கத்தில் நடக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும். மூன்றாவது அவ்வாறு நல்ல வழியில் நடக்கும் போது எந்த தடங்கலும் ஏற்படாமல் இருக்க வேண்டும். அந்த நல்ல வழியில் சாமர்த்தியமாக திறமையோடு தொடர்ந்து முன்செல்ல வேண்டும். அதன் மூலம் நற்பலன்களைப் பெற வேண்டும். இவை அனைத்தும் கிடைக்க வேண்டுமென்றால் இறைவனின் அருள் வேண்டும். அனுகூலம் வேண்டும்.

சிலமுறை நாம் கூறுவோம், “எனக்கு எது நல்ல மார்க்கம் என்றே தெரியவில்லை!” என்போம். தெரியவில்லை என்ற விஷயம் தெரிந்தாலே மகிழ்ச்சிதான். ஆனால் தெரியும் என்று கெட்ட வழியை நல்ல வழியாக எண்ணிச் சென்றால் ஆபத்தில் முடியும். அதனால் இறைவனை பிரார்த்தனை செய்து விட்டால் உண்மையான நல்ல மார்க்கம் எது என்பதை ஏதோ ஒரு விதத்தில் தெரியச் செய்வான். ஒரு மகானின் மூலமோ, ஒரு நூலின் மூலமோ, அல்லது ஸ்புரணை மூலமாகவோ தெரியச் செய்வான். சிலர் யாரும் எதுவும் கூறாமலேயே நல்ல செயல்களைச் செய்து வருவார்கள். அவர்களின் புத்தியில் ஸ்புரணை ஏற்படுத்துகிறான் இறைவன்.
“அக்னேனைய சுபதா” என்ற வார்த்தை மிகச் சிறப்பானது. ‘சுபதா’ என்ற சொல்லை வேதம் மிகச்சிறப்பாக நமக்களித்துள்ளது. சுபதா என்றால் மேலான மார்க்கம். மேலானது என்றால் நமக்கு நல்லது என்று மட்டுமல்ல. நம் மூலம் பிறருக்கும் நன்மையான நடத்தையே மேலான என்ற சொல் மூலம் சுட்டப்படுகிறது.
அதுமட்டுமன்றி, “சுக: கர்த சுபதா ஸ்வஸ்தயே !” என்கிறார். “மேன்மைக்கான மார்க்கம் சுகமாக இருக்க வேண்டும்”. மார்க்கம் நல்லதாக இருந்தாலும் சில சமயம் நல்ல செயல்கள் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். நாம் கஷ்டமாக இருப்பதாக நினைக்கும் நற்செயல்களை சிலர் மிகச் சுலபமாக செய்து விடுவார்கள். அதாவது அனுகூலம் நன்றாக உள்ளது என்று பொருள்.
அதனால்தான் முதலில் நல்வழியில் நடப்பது, அதிலும் சுகமாக நடந்து செல்வது. இரண்டும் முக்கியம். சிலர் கஷ்டப்பட்டு நற்செயல்களை செய்து சோர்ந்து போவார்கள். அவ்வாறின்றி ஹாய்யாக நல்ல செயல்களை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நல்ல மார்க்கம் என்பதை பற்றி வேதம் பல இடங்களில் கூறியுள்ளது. “நான் சுகமாக இருக்க வேண்டும். அதனால் அதுதான் நல்ல மார்க்கம்” என்று நாம் நினைப்போம். ஆனால் எது சுகம் என்பது நமக்குத் தெரியுமா? எனவே இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நல்லதை கொடு என்று கேட்க வேண்டுமே தவிர நாமே ஒன்றை நல்லது என்று தீர்மானித்து அதைக் கொடு என்று கேட்கக் கூடாது.
“யத் பத்ரம் தன்ன ஆசுவா !” என்ற அக்னி ஸ்வரூபனான ஆதித்ய பகவானையும், ஜோதி ஸ்வரூபர்களான தேவதைகளையும் பிரார்த்தனை செய்து.. இவர்கள் அனைவரின் ஐக்கிய மூர்த்தியான பரமேஸ்வரனை பிரார்த்தித்து ஒரு ஸ்லோகம் உள்ளது.
“விச்வாணி தேவ சவிதிர் துரிதானி பராசுவா
யத் பத்ரம் தன்ன ஆசுவா !”
இந்த மந்திரத்தின் பொருள் என்னவென்றால், “துரிதாவிலிருந்தும் தூராசாரத்தில் இருந்தும் என்னை தூரம் செய்! எது பத்திரமோ அதனை எனக்குக் கிடைக்கச் செய்!” இந்தச் சொற்களை கவனமாகப் புரிந்து கொண்டால் இதனையே இறைவனிடம் கேட்போம். இது போதும் என்று தோன்றும்!
துரிதம் என்றால் பாவச் செயல்கள். துராச்சாரம் என்றால் செய்யக் கூடாதவை. இவற்றிலிருந்து என்னை தூரம் செய் என்று பிரார்த்திக்கவேண்டும். அதாவது இவற்றைச் செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றக்கூடாது.
“ஒருவேளை நான் அவசரப்பட்டோ மோகத்தாலோ ஆசையாலோ அல்லது தவறான புத்தியாலோ அவற்றைச் செய்வதற்கு முன்னுக்கு சென்றாலும் அந்த மார்க்கத்தில் போகவிடாமல் ஏதாவது தடை விதித்து விடு!” என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனால்தான் துர் மார்க்கங்களுக்குத் தடைவேண்டும். சன்மார்க்கத்திற்குத் தடை விலக வேண்டும்.
அதனால் துரிதத்திலிருந்தும் துராசாரத்திலிருந்தும் தூரம் செய் என்று பிரார்த்திப்பது மிகவும் இன்றியமையாத அம்சம். நல்லது வேண்டும் என்று கேட்பது எத்தனை அவசியமோ கெட்டது விலக வேண்டும் என்று விரும்புவதும் அத்தனை அவசியமே!
அதனால் “துரிதானி பரா சுவா” என்பதோடு கூட, “யத் பத்ரம் தன்ன ஆசுவா!” – “எது எமக்கு பத்திரமோ எது எமக்கு பாதுக்காப்போ அதனை எங்களுக்கு கிடைக்கச் செய்!” என்கிறார். இங்கு பத்ரம் எது என்று நிர்ணயிக்கும் அதிகாரத்தை இறைவனுக்கு அளித்து விடுகிறோம். நாமே இது பத்திரம் என்று நினைத்தால் மிகவும் ஆபத்து.
சிறு குழந்தை ஒரு தீபம் எரியும் போது அது ஏதோ இனிப்பான பொருள் என்று ஈர்க்கப்பட்டு அதன் அருகில் சென்று விடுவான். அப்போது அவனுக்கு எரியும் அக்னி பத்திரமாக தென்பட்டது. நம் புத்தி கூட அப்படிப்பட்டதே! தற்போதைக்கு நன்றாக இருக்கிறது என்றோ பத்திரம் என்றோ நினைத்து தீமையைப் பற்றிக் கொண்டால் ஆபத்தாய் முடியும். ஆனால் தீபத்தைத் தொடுவதற்கு குழந்தை செல்லும் போது தாய் அவனைத் தடுப்பாள். அப்போது அவன் அழுவான். தாயின் மேல் கோபம் வரும். ஆனாலும் தாய் அதை தடுப்பாள். ஏன்? அவனுக்கு அது நன்மை இல்லை என்பதால்!
அதேபோல் நாம் ஏதோ நமக்கு பாதுகாப்பு என்றெண்ணிச் சென்றால் அது உண்மையாகவே நன்மையாக இல்லாவிட்டால் இறைவன் நமக்கு அதை கிடைக்க விடாமல் செய்ய வேண்டும்! அந்த பாவனை இதில் காணப்படுகிறது. அதனால் பத்திரமானதைக் கொடுக்கும்படி இறைவனைக் கேட்டால், அது ஹாய்யாக இருக்கும்.
இக்காரணத்தால்தான் ஆதிசங்கரர் கூட அபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் கூறும்போது அம்பாளிடம் ஒரு சிறந்த வார்த்தை கூறுகிறார். “எனக்கு எது யோக்கியமா, எது எனக்கு நலனோ அதைச் செய், அம்மா! என்பார். இவ்வாறு கேட்பது மிகவும் சுகமானது.
எது எனக்கு நன்மை என்பது என்னை விட உனக்கு நன்றாகத் தெரியும் என்று இறைவனை பிரார்த்திக்க முடிந்தால்… எத்தனை நன்றாக இருக்கும்! கேட்டாலும் கேட்காவிட்டாலும் பெற்றோர் குழந்தையை கவனித்துக் கொள்வார்கள். அதுபோல் இறைவனும் நம்மை கவனித்துக் கொள்வான்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல புத்தியை அருளும்படி பிரார்த்தித்து நல்லவிதமாக நடந்து கொள்ள முயற்சித்தலே…! இறைவன் எப்போதும் நமக்கு நன்மையே அருள்வார்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



