“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”
( “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. )

ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்ய அஸ்தமனத்துக்கு அப்புறம் உணவு அருந்தக் கூடாது என்பது பெரியவா உத்திரவு.
பெரியவாளே கூட, ஒருமுறை உடல்நிலை சரியில்லாத போது தொண்டர் கொடுத்த பாலை சூர்ய அஸ்தமனத்துக்கு பிறகு சாப்பிட்டு விட்டார். ஆனால் அது தெரிந்ததும் அடுத்து வந்த ஒரு வாரம் சுத்த உபவாசம் இருந்தார்.
ஒரு ஞாயிற்றுகிழமை. இரவு பன்னண்டு மணி. தன் அணுக்கத் தொண்டரான ஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகளை எழுப்பி தனியே அழைத்துக் கொண்டு போய் எசையனூரில் அவருடைய குடும்பம், வாய்க்காலில் தண்ணி வரத்து, தோட்டத்து செம்பருத்தி செடி என்று கனகாரியமாக எல்லாவற்றையும் விஜாரித்துவிட்டு, ” நேத்து ராத்திரி என்னடா ஆஹாரம் பண்ணினேள்?” என்றார்.
“ரவா உப்புமா” வேதபுரி சாஸ்த்ரிகள் பொய் சொல்லத் தெரியாதவர்.
கிழவனார் மேலும் கிண்டினார் ” யாரல்லாம் சாப்ட்டா?”
வரிசையாக எல்லார் பெயரையும் சொன்னார் வேதபுரி சாஸ்த்ரிகள்.
“சரி போ” படுத்துக் கொண்டுவிட்டார். வேதபுரி மாமாவை கூட்டி கொண்டு வந்த காரியம் ஆயாச்சு. மறுநாள் திங்கட்கிழமை கண்ணன் என்ற தொண்டர் வந்து நமஸ்காரம் பண்ணினார். பொதுவான விஷயங்களை பேசி விட்டு மெதுவாக ” நேத்து ராத்திரி என்ன ஆஹாரம் பண்ணினே?” தெரியாதவர் மாதிரி ஒரு கேள்வி!
“நேத்து ஞாயித்துக்கிழமையாச்சே! ராத்திரி ஒண்ணும் சாப்பிடலை……….” என்றார் குழறியபடியே!
“ஏன் பொய் சொல்லறே? ரவா உப்புமா கெளறிக் குடுத்தானாமே வேதபுரி?” என்று பெரியவா கேட்கவில்லை. “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.
ஆனால், ரவா உப்புமா விவஹாரத்தை வேதபுரி எல்லாத் தொண்டர்களிடமும் சொல்லி, எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டார்!



