ஶ்ரீரங்கம் பகல் பத்து -மூன்றாம் திருநாள்

பகல்பத்து-மூன்றாம் திருநாள்…(விவரமும்)
நம்மாழ்வார் சந்நிதியில் மதுரகவியாழ்வார் ,மூலமாக ஆழ்வார்கள்,ஆச்சாரியர்களுக்கு,நடைபெறும் மரியாதைகளும்…

நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து
உற்சவத்தின் 3 ம் திருநாளில் (13-12-15) காலை
சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி,
மேலைப்படி மரியாதை ஆகி, சேனைமுதலியாருக்கும், மரியாதைகள் நடந்து,கிளிமண்டபம் படியேற்றம் ஆகி,
துலுக்க நாச்சியாருக்கு சேவை சாதித்து, தாம்பூலம் பெற்றுக்கொண்டு,அரையர்களின் தாளத்துடன் பகல்பத்து மண்டபத்தில் (அர்ஜுன மண்டபத்தில்) ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,அரங்கனின் அடியார்கள் புடைசூழ,வீற்றிருப்பார்.

ஸ்ரீ வைகுண்டத்தில், எம்பெருமான் எவ்வாறு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,முமுக்ஷுக்கள்,நித்யசூரிகள் புடைசூழ,
நாலாயிர திவ்ய பிரபந்தத்தினை கேட்டு மகிழ்வானோ,
அவ்வாறே, பூலோக வைகுண்டமான திருவரங்கத்திலும்,
இந்த பகல்பத்து விழா நடைபெறும் அர்ஜுனமண்டபத்தில், அரங்கனும் வீற்றிருப்பார்…

இன்றைய தினம்,அரையர் சேவையில்,
பெரியாழ்வார் திருமொழி இறுதிப்பதிகமான,
“சென்னியோங்கு” பதிகம் மற்றும்”நாச்சியார் திருமொழியில்”,
12 ம் பதிகம் ஈறாக,சேவிக்கபடும்.

“சென்னியோங்கு” (பெரியாழ்வார் திருமொழி) மற்றும்
மார்கழித் திங்கள் (ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவையின் 1ம்பாடல் )ஆக, இரண்டு பாசுரங்களுக்கும், அபிநய வியாக்கியானங்கள்.நடைபெறும்.அரையர் ஸ்வாமிகளால் “மார்கழித் திங்கள்” பாசுரத்திற்கு வியாக்கியானம் ஆகும் போது,கோஷ்டியார் நின்றுகொண்டு இருப்பார்கள்..

“சென்னியோங்கு” பாசுரங்களுக்கு,அபிநய வியாக்கியானங்கள் ஆகி,அபிநயம் முன்னதாகவும்,பாசுரம் பின்னதாகவும்,அந்தத் திருமொழி முழுவதும் சேவிக்கப்படும்.

“சென்னியோங்கு” 7 வது பாசுரத்தில்,
“திருப்பொலிந்த சேவடி எஞ்சென்னியின் மேல்பொறித்தாய்” என்பது வரை,அரையர் ஸ்வாமிகள் சேவித்து, நிறுத்தி, நம்பெருமாள் திருவடிகள், தலைமேல் ஸ்தாபிக்கப்பெற்ற, பெரியாழ்வார் பெற்ற பேறு, அடியார்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு,அரங்கனைப் பிரார்த்தித்து, அரையர் ஸ்வாமிகள், நம்பெருமாளின்(ஸ்ரீசடாரி) திருவடிகளைத் தம்முடைய ஸிரஸில் தரித்து வந்து, ஆழ்வார் ஆச்சாரியர்கள், கோஷ்டிக்கும், மற்றையோருக்கும் சாதிப்பார்கள்.இன்று அரையர்கள் தீர்த்தம் சாதிப்பது இல்லை.

(பெரும்பாலும்இந்த பகல்பத்து இராப்பத்து உற்சவங்கள் மார்கழி மாதத்தில் தொடங்கப்பெறும், இந்த மன்மத வருடம் போல்,
(2015) சில சமயங்களில்,மார்கழிமாதம் தொடங்கி 1 வாரத்திற்குள் “வைகுண்ட ஏகாதசி” வந்து விடுவதால், கார்த்திகை கடைசி வாரத்தில் பகல்பத்து உற்சவம் ஆரம்பிக்கப்படும்.காரணம் 20 நாட்கள் கொண்ட இந்த உற்சவத்தின்,11 வது நாளில்,வைகுண்ட ஏகாதசி ,கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவே)

பிறகு,மார்கழித்திங்கள் பாசுரத்தின் வியாக்கியானம் பூர்த்தியானதும்,ஆண்டாள்நாச்சியாரின் மனோரதத்தினைப் பூர்த்தி செய்து,”கோயிலண்ணர்” “திருப்பாவைஜீயர்” என்று பிரஸித்தி பெற்ற,ஸ்வாமி ராமானுஜர் சந்நிதியில் இருந்து,
பகல்பத்து மூன்றாம் திருநாளான இன்று,அரையர் ஸ்வாமிகளுக்கு “பஹுமாணம்” அனுப்பி வைக்கப்படும்.

அதுதவிர,திருப்பாவை பிரபந்தத்துக்கு ஏற்ப்பட்ட
“விட்டவன் விழுக்காடு”பகல் பத்து மூன்றாம்திருநாளான
இன்று “உடையவர்”சந்நிதிக்கே அனுப்பபடும்…

பிறகு வழக்கம் போல் நிவேதனம்.. விநியோகம்,,, ஆழ்வார்களும்,ஆச்சாரியர்களும் ஸ்ரீசடகோப (ஸ்ரீ சடாரி) மரியாதை ஆகி,உத்தர தினசரியா,பராங்குச பஞ்சவிம்சதி,
நக்ஷத்ர மாலிகா,முதலான ஸ்தோத்தர பாட கோஷ்டியோடு,
பகல் பத்து மண்டபத்தில் இருந்துபுறப்பட்டு,நம்மாழ்வார் சந்நிதிக்குப் போவார்கள்.

அங்கே நம்மாழ்வார் மாத்திரம்,தம்முடைய சந்நிதிக்குள் சென்று,தம்முடைய ஆஸ்தானத்தில் எழுந்தருளுவார். நம்மாழ்வார் சந்நிதியின் வெளியே நின்று சேவை சாதிக்கும், மற்றைய ஆழ்வார்களுக்கும்,ஆச்சாரியர்களுக்கும் மதுரகவியாழ்வார் செய்து வைக்கும் பாவனையாக,
கற்பூர ஆரத்தி நடைபெறும்.

பிறகு நம்மாழ்வாரின் பூமாலையில் ஒன்றைப்
பெரியாழ்வாருக்கு சாதிப்பார்கள்.எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும்,நம்மாழ்வாரின் ஸ்ரீ சடரியான
மதுரகவிகள் சாதிக்கப்படும்..

உடனே பெரியாழ்வார்,உடையவர்,கூரத்தாழ்வான்,
பிள்ளை லோகாச்சாரியார் இவர்கள் நால்வர் தவிர,
இதர ஆழ்வார்கள்,ஆச்சாரியர்கள் அவர்களின்
சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்…

இந்த நால்வரும் புறப்பட்டு,கார்த்திகை கோபுர வாசலுக்கு வெளியே,(ஆலய அலுவலகத்தின்அருகில்) கிழக்கு முகமாக எழுந்தருளும் பெரியாழ்வார் ,எதிரில்,கூரத்தாழ்வான்,
பிள்ளை லோகாச்சாரியார்களுக்கு மத்தியில், மேற்கு முகமாக இருக்கும் உடையவருக்கு, நம்மாழ்வார் தமக்கு சாதித்த பூமாலையை,சாதித்தபிறகு, பெரியாழ்வார் தம்முடைய
சந்நிதிக்கு எழுந்தருளுவர்.

பிறகு உடையவர்,கிழக்கு முகமாகத் திரும்பி,தமக்கு முதலில் நம்மாழ்வாரும்,பிறகு பெரியாழ்வாரும்,சாதித்த மாலைகளில், ஒன்றை ,கூரத்தாழ்வானுக்கு சாதித்து,அவரை சந்நிதிக்கு
அனுப்பி வைப்பார்…

பிறகு உடையவர்,மற்றொரு மாலையை பிள்ளை லோகாச்சாரியாருக்கு சாதித்து,அவரோடும்,ஸ்தோத்தர பாட கோஷ்டியினரோடும்,புறப்பட்டு, தங்களுடைய சந்நிதிக்கு உடையவரும்,பிள்ளை லோகாச் சாரியரும் எழுந்தருளுவார்கள்.

உடையவர் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளிய பிறகு,
அடியார்களின் கோஷ்டிக்கு,தீர்த்த பிரஸாத விநியோகம் ஆகும். இதுவரை பெருமாள்,அன்றைய உபயதாரர்களுக்கு சேவை மரியாதை அணுக்ரஹித்து,தோளுக்கினியானில் (பல்லக்கு) எழுந்தருளி,உடையவர் கோஷ்டியில் இருந்து,
சேவார்த்திகள் மற்றும் கைங்கர்ய பரர்கள் வரும்வரை
காத்திருந்து,அதன்பிறகே வழக்கம் போல் புறப்பட்டு,பத்தி உலாத்துதல் ஆகி, ஸர்ப்ப கதியில்,மூலஸ்தானம் திரும்புவார்…..

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு