spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆலயங்கள்ஆரியங்காவில் நடந்த தர்மசாஸ்தா  புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ..

ஆரியங்காவில் நடந்த தர்மசாஸ்தா  புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ..

aryankavuayyappan343 1576303478

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு தர்மசாஸ்தா  மதுரை சௌராட்டிர குலபெண் புஷ்கலா தேவி திருக்கல்யாணம் கோலாகலமாக திங்கள்கிழமை இரவு நடந்தது.இன்று பகலில் மண்டலாபிஷேகம் கும்பாபிஷேகம் ஆரியங்காவு தர்மசாஸ்தாவுக்கு விமரிசையாக நடைபெறும்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள ஆரியங்காவு ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னை ஸ்ரீபுஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் வீற்றிருக்கும் ஐயப்பன் அன்னை புஷ்கலா தேவியுடன் தம்பதி சமேதராக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 10 அல்லது 11ஆம் தேதியன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு ஆடைகளை நெய்து கொடுக்கும் மதுரை சவுராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த புஷ்கலை என்ற பெண், ஐயப்பன் பூஜைக்கு தேவையான பணிவிடைகளை பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். அப்போது புஷ்கலைக்கு பிரம்மச்சாரியான ஐயப்பன் மீது காதல் ஏற்பட்டது. புஷ்கலையின் பக்தியில் மகிழ்ந்த ஐயப்பனும் அவரை மணம் முடிக்க முடிவெடுத்தார்.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கும், சவுராஷ்டிர சமுதாயத்திற்கும் இந்த விசயம் தெரிய வர, அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இரு தரப்பு உறவின்முறைகளும் மார்கழி மாதம் 10ஆம் தேதியன்று ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் கூடி தர்மசாஸ்தா ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் முடித்து வைத்ததாக தலவரலாறு கூறுகின்றது.

தமிழக-கேரள மாநில எல்லையில் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயம். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருவதுண்டு. தற்போது சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் என்பதால் அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலுக்கு வந்து தரிசித்த பின்னர், சபரி மலைக்கு செல்கின்றனர். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் டிசம்பர் மாதம் நடைபெறும் ஸ்ரீதர்மசாஸ்தா அன்னை ஸ்ரீபுஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

Tamil News large 3202742
ariyankavu31 1641031011 1

அதே போல் இந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியன்று ஸ்ரீதர்மசாஸ்தா அன்னை ஸ்ரீபுஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவமானது கேரள மாநிலத்தின் மாம்பலத்துறையில் அம்மனின் ஜோதி ரூப தரிசனத்துடன் இனிதே தொடங்கியது. மாம்பலத்துறையில் அன்னை ஸ்ரீ பகவதி அம்மன் ரூபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபுஷ்கலா தேவிக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதியன்று அதிகாலை சகல அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அபிஷேக ஆராதானைகளைத் தொடர்ந்து அன்னை ஸ்ரீபகவதி அம்மன் காளி ரூபத்தில் சத்திய சொரூபியாக, மணமகள் அலங்காரத்தில் ஸ்ரீபுஷ்கலா தேவி எழுந்தருளினார். இவ்வைபவத்தில், மாம்பலத்துறை ஊர் மக்களின் சார்பாக, சம்பந்தி என்ற முறையில் மதுரை சௌராஷ்டிரா சமூகத்தினருக்கு பூரண கும்பமரியாதை வழங்கப்பட்டது. இத்திருமண வைபவத்தில் பங்கேற்ற அனைவருக்கும், மாம்பலத்துறை ஸ்ரீபுஷ்கலா தேவி ஜோதிமய சௌராஷ்டிரா மகாஜன சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டதும், தந்திரி, அம்மனை ஜோதி சொரூபத்தில் ஆவாஹனம் செய்து, ஊர் மக்கள் முன்னிலையில் ஆரியங்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகாஜன சங்கத்தினரிடம் வழங்கினார். அம்மனின் ஜோதி சொரூபத்தை சங்கத்தின் உதவி காரியதரிசி ஊர்வலமாக ஆரியங்காவுக்கு எடுத்து வந்தார். அம்மனின் ஜோதி ரூபத்தை ஆரியங்காவு ஊர் எல்லையில் மக்கள் வரவேற்று கோவிலுக்கு அழைத்து வந்தனர். ஆரியங்காவு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் வாசலில், தந்திரி புனித நீர் தெளித்து ஜோதி சொரூபத்தை ஏந்திச் சென்று கர்பக்கிரஹத்தில் சுவாமி ஜோதியுடன் இரண்டறக் கலந்தார்.

விழாவின் முக்கிய அம்சமாக டிசம்பர் 25ஆம் தேதியன்று பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்த வைபவம் நடைபெற்றது. அன்று மாலை 5 மணியளவில் ஆரியங்காவு கோயில் வாசலில், கல்மண்டபம் அருகில், ஊர் மக்களின் சார்பாக, அட்வைசரி கமிட்டி நிர்வாகிகள் சௌராஷ்டிரா மக்களுக்கு சம்பந்தி வரவேற்பு வழங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் ‘தாலப் பொலி’ என்னும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் தங்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்ட கேரள மாநில பெண்கள் கையில் மங்கல விளக்குகள், குருத்தோலை, வண்ண வண்ணப் பூக்கள் ஜொலிக்க பரிமள சுகந்த வாசனையோடு பூஜை தட்டுகளை ஏந்திக்கொண்டு சென்றனர்.

அன்று மாலை 7 மணியளவில் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஸ்ரீதர்மசாஸ்தா-மாம்பலத்துறை தேவி, திருவிதாங்கூர் மன்னர் பிரான் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராம வர்மா முன்னிலையில் நிச்சயதார்த்த சடங்குகள் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், தமிழக முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

பகவான் சார்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன், தேவசம் போர்டு கமிஷனர், கோகுலத்து மடம் தந்திரி ஸ்ரீ வாசுதேவரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ஏராளமான ஊர் மக்களும் கலந்து கொண்டனர். அம்மன் சார்பாக சௌராட்டிர சங்கத்தின் மூத்த தலைவர் கே.ஆர்.ராகவன், பகவான் சார்பாக கோயில் நிர்வாகி ஆகியோர் பரஸ்பரம் நிச்சய தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.

டிசம்பர் 26ஆம் தேதியன்று காலை மூலஸ்தானத்தில் இருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா, அன்னை ஸ்ரீபுஷ்கலா தேவி, கணபதி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், வஸ்திர சாத்துப்படி உற்சவம், பொங்கல் படைப்பு , அன்ன தானம், திருவிளக்கு பூஜை, தேர் பவனி உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்றன. இரவு 9 மணியளவில் திருக்கல்யாண மண்டபத்தில் கோகுலத்து மடம் தந்திரி ஸ்ரீவாசுதேவரு, சாந்திமார் முன்னிலையில் மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, புளியரை ஸ்ரீதரன் பட்டர், தேவஸ்வம் போர்டு சார்பாக கொண்டு வரப்பட்ட திருமாங்கல்யத்திற்கு மாங்கல்ய பூஜை செய்து, பகவான் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கரங்களால் திருமாங்கல்யம் அணிவித்து மங்கல குலவை முழங்க சரண கோஷம் முழங்க திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார். அம்மனின் சார்பாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இவ்வைபவத்தில் தமிழக முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மதுரை தெற்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேரள மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்ம் இத்திருக்கல்யாண வைபத்தில் கலந்து கொண்டனர்.

இன்று பகலில் ஆரியங்காவு தர்மசாஸ்தாவுக்கு கும்பாபிஷேகம் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe