spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்திருப்பாவைதிருப்பாவை - 14; உங்கள் புழக்கடை (பாடலும் விளக்கமும்)

திருப்பாவை – 14; உங்கள் புழக்கடை (பாடலும் விளக்கமும்)

- Advertisement -
thiruppavai pasuram 14
Thiruppavai pasuram 14

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை

விளக்கவுரை : வேதா டி. ஸ்ரீதரன்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்(து) ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். (14)

பொருள்

இரவு கழிந்தது, சூரியன் எழுந்துவிட்டான். உங்கள் வீட்டுத் தடாகத்தில் பூத்திருக்கும் தாமரைப் பூக்கள் மலர்ந்து விட்டன. இரவில் மலரும் கருநெய்தல் பூக்கள் கூம்பிவிட்டன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச, கோவில் பூஜைகளில் கலந்து கொள்வதற்காகக் கிளம்பிவிட்டனர். ‘நான் முதலில் எழுந்து உங்கள் எல்லோரையும் எழுப்பிவிடுவேன்’ என்று எங்களிடம் வாய்ச்சவடால் பேசிய பெண்ணே, நீ இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே! உனக்குக் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? சங்கு-சக்கரம் ஏந்தியவன், வலிமையான கரங்களை உடையவன், தாமரை போன்ற விரிந்த கண்களை உடையவன் – அத்தகைய கண்ணனைப் பாட விரைந்தோடி வருவாயாக!

அருஞ்சொற்பொருள்

புழக்கடைத் தோட்டம் – வீட்டின் முற்றப் பகுதியில் உள்ள தோட்டம் அல்லது பூங்கா

வாவி – குளம்

செங்கல்பொடிக் கூறை – காவி உடை

வெண்பல் தவத்தவர் – வெண்பற்களை உடைய துறவியர்

போதந்தார் – போகின்றார்

நாணாதாய் நாவுடையாய் – கூச்சமில்லாமல் வாக்குறுதி கொடுப்பவளே

தடக்கையன் – பெரிய தோள்களை உடையவன்

பங்கயற்கண்ணான் – தாமரைக் கண்களை உடையவன்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின – பகலில் மலரும் புஷ்பங்களின் இதழ்கள் விரிந்தன; இரவில் மலரும் புஷ்பங்களின் இதழ்கள் மூடின.

சங்கிடுவான் – சங்கு என்பது சாவியையும் குறிக்கும். எனவே, சங்கிடுவான் என்பதைக் கோயில் கதவுகளைத் திறப்பதற்காக என்றும் பொருள் கொள்ளலாம்.

மொழி அழகு

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின – பூக்களின் இதழ்கள் விரிவதையும் மூடுவதையும் இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா என்ற வியப்பே மேலிடுகிறது.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் – தாமரை மலர்வது சூரியனால். ஆனால், வீட்டுத் தோட்டத்தில் உள்ள குளத்திலோ சூரிய வெளிச்சம் புக முடியாதபடி மரங்களின் நிழல் மூடியுள்ளது. அதில் உள்ள புஷ்பங்களும் மலர்ந்து விட்டன என்றால் என்ன பொருள்? கதிரவனின் ஒளி நன்கு பரவி விட்டது. எனவே, அவையும் மலர்ந்து விட்டன. நீ இனியும் உறங்கலாமோ என்று தோழியை எழுப்புகிறாள்.

***

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் –

வெண்பல் என்றால் காவி ஏறாத – அதாவது, தாம்பூலம் தரிப்பதால் ஏற்படும் காவி நிறம் இல்லாத. தாம்பூலம் என்பது இல்லறத்தாருக்கு மட்டுமே உரியது. எனவே, வெண்பல் என்பது பிரம்மசாரி அல்லது துறவியைக் காட்டுவது. தவம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும், துறவிகளுக்கும் பிரம்மசாரிகளுக்கும் விசேஷமானது. செங்கல் பொடிக்கூறை என்பது காவி உடையைக் குறிப்பதால் இது பிரம்மசாரியைக் குறிக்கவில்லை. துறவியையே குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆன்மிகம், தத்துவம்

தவத்தவர் –

தவம் என்றால் புலனடக்கம். இது அனைவருக்கும் பொதுவானது. என்றாலும், இல்லறத்தில் இருப்பவர்கள் நியமங்களுக்கு உட்பட்டு இன்பம் துய்க்கலாம். பிரம்மசாரிகளும் துறவிகளும் முழுமையான புலனடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிரம்மசாரி என்றால், பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பவன் அல்லது உள்முகமாகச் செல்வதற்குரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவன் என்று பொருள். பிரம்மசாரிக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கத்தில் பணிவும் புலனடக்கமும் முக்கியமானவை.

இவை இரண்டும்தான் பிரம்மசரியத்துக்கான அடிப்படைத் தகுதி. பிரம்மசரியம் என்பது மாணவப் பருவம். பிரம்மசாரி என்பவன் மாணவன் அல்லது சிஷ்யன். கல்வி கற்பதற்கான அடிப்படைத் தகுதி என்பதே பணிவுதான். எனவேதான் பிரம்மசாரி விநீதன் என்று அழைக்கப்படுகிறான் (விநீதம் = பணிவு).

கல்வியினால் அடையப்பட வேண்டியதும் பணிவுதான். பணிவைத் தருவதே கல்வி. (வித்யா ததாதி விநயம்.) பரிபூர்ண சரணாகதியே கல்வியின் குறிக்கோள். சரணாகதி என்பது பணிவின் முதிர்ச்சி.

ஆக, கல்வி என்பது பணிவில் தொடங்குகிறது. பணிவில் (சரணாகதியில்) நிறைவடைகிறது.

உலகப் பற்றுகள் நீங்கி, இறைவனின் சரணங்களை மட்டும் பற்றி நிற்கும் சரணாகத நிலையை அடையும் வாழ்க்கைப் பாதையின் இறுதி நிலையாக இருப்பது துறவறம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe