
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார்விரலி உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் நந்தகோபரின் திருமாளிகையுள் புகுந்து, நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோரைத் துயில் எழுப்பும் இடைப் பெண்கள், கண்ணன் எழாதது கண்டு, இந்தப் பாசுரத்தில் கண்ணனை எழுப்புமாறு நப்பின்னையை கதவு திறந்து வெளிவரச் சொல்கிறார்கள்.
தன்னால் வென்று வீழ்த்தப்படும் மத யானைகளை உடையவன் நந்தகோபாலன். போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாத தோள் வலிமையைக் கொண்டவன். அத்தகைய நந்தகோபாலனுக்கு மருமகள் ஆனவளே. ஓ நப்பின்னைப் பிராட்டியே. பரிமள மணம் கமகமவென வீசும் கூந்தலை உடையவளே. நீ இந்தக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்துவிடு.
அதிகாலைப் பொழுதில் கோழிகள் எங்கும் நிறைந்து விடியலை உணர்த்திக் கூவுகின்றனவே. நீ அதனைக் கேட்டாயோ? மேலும், குருக்கத்திக் கொடிகளால் ஆகிய பந்தலின் மேல் உறங்கும் குயில் கூட்டங்கள், பல முறை கூவிக் கிடப்பதைக் கண்டாயோ? அந்தக் கண்ணபிரானோடு விளையாடுவதற்குக் கருவியான பந்தினைத் தாங்கிக் கொண்டிருக்கும் விரல்களைக் கொண்டவளே. உன் கணவனான கண்ணபிரானின் திருநாமங்களை நாங்கள் பாடவேண்டும்.
அதற்கு வசதியாக, சீர்மை பொருந்திய உன் கை வளையல்கள் ஒலிக்கும்படி நடந்துவந்து, தாமரைப் பூப் போன்ற உன் கையினால் எங்கள் மீது மகிழ்ச்சி கொண்டு தாழ்ப்பாளைத் திறந்துவிடு என்று தோழியரை முன்னிட்டுக் கொண்டு பாடுகிறார் ஆண்டாள்.
தன்னைப் பற்றுவதற்கு, வாசல்காப்பானையும் நந்தகோபரையும் பலராமனையும் இறைஞ்சுவதால் என்ன பயன் என்று கண்ணன் வாளாவிருந்தானோ எனக் கருதிய இடைப் பெண்கள், பிராட்டியின் கருணை அன்றோ வேண்டும் என்றவாறு நப்பின்னையைத் துயில் எழுப்பினார்கள் இந்தப் பாசுரத்தில்.
கண்ணபிரானை நந்தகோபன் குமரன் என்று அவரது தொடர்பைச் சொல்லி அழைத்த இடைப் பெண்கள், நப்பின்னையையும் நந்தகோபாலன் மருமகளே! என்றனர். புகுந்த வீட்டை மேன்மேலும் சிறக்கச் செய்வதால், பிறந்த வீட்டின் பெருமையைச் சொல்லாது நந்தகோபாலன் மருமகளே என நப்பின்னையை விளித்தார் ஸ்ரீஆண்டாள்.!
- செங்கோட்டை ஸ்ரீராம்
இந்தக் கட்டுரைகளையும் படிக்க…