
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த, வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாணிக்கம் மகன் வசந்த். 21 வயதான இவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
தினமும் பேருந்தில் கல்லூரிக்குச் சென்றுவந்த இவருக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து காதலன் வசந்த்திடம் கூற அவர் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார்.
இதை சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பம் ஆனதும், அந்த கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டதும், தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாத்தா நாமகிரிப்பேட்டை காவல்துறையில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ராசிபுரம் மகளிர் காவல்துறையினர் கல்லூரி மாணவர் வசந்தை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
