
நியூயார்க்: காஷ்மீர் பிரச்னையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் சமாதானம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவிப்பது நான்காவது முறையாகும்.
அவர் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறியதாவது: இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இரு தலைவர்களுடனான இந்தச் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்னையைப் பொருத்தவரையில் மத்தியஸ்தம் உள்ளிட்ட எந்த சமரச நடவடிக்கைகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அவர்களிடம் தெரிவித்தேன். நான்காவது முறையாக அவர்களிடம் இந்த கருத்தை நான் தெரிவித்தேன்.
இந்த விவகாரத்தில் என்ன முடியுமோ அதை நான் செய்வேன். ஏனெனில், அவர்கள் இப்போது மிகவும் கடுமையான முரண்பாடுகளில் உள்ளனர். விரைவில் நிலைமை சீராகும் என்று நம்புகிறேன்.

இரு நாடுகளின் தலைவர்களுமே எனக்கு நல்ல நண்பர்கள். இரண்டுமே அணு ஆயுத நாடுகள். எனவே, காஷ்மீர் விவகாரத்துக்கு சுமுகமான முறையில் தீர்வு எட்டப்பட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
டிரம்பின் இந்த கருத்து குறித்து இந்திய வெளியுறவு விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு அனுமதியில்லை என பிரதமர் ஏற்கெனவே தெளிவுபடக் கூறியுள்ளார். அதே கருத்தைத்தான் வெளியுறவுத் துறை செயலாளரும் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். எனவே, அதே நிலைதான் தற்போதும் தொடர்கிறது என்றார் அவர்.

மோடி-டிரம்ப் சந்திப்புக்கு பிறகான செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே கூறியது: பாகிஸ்தானுடனான பேச்சுவார்தையிலிருந்து நாங்கள் விலகவில்லை என்பதை பிரதமர் மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால், அது நடக்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. ஆனால், பாகிஸ்தான் அதுபோன்ற உருப்படியான முயற்சிகளை எடுத்ததாக இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை என்றார் அவர்