
எங்கு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் சுமார் 10 ஆண்டுகள் தாயின் சடலத்தைப் பெண் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ. உணவு முதல் பார்க்கிங் வரை அனைத்திற்கும் மிக அதிகமாகச் செலவாகும். சிறிய அறை கொண்ட வீடே பல கோடி வரை விற்பனையாகும்.
இதன் காரணமாக அந்நாட்டிலுள்ள பெரும்பாலான குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய மக்கள் அரசின் குடியிருப்புகளிலேயே வசிக்கின்றனர். அவ்வாறு டோக்கியோ நகரிலுள்ள அரசின் அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் 48 வயதான யூமி யோஷினோ.
இவர் முறையாக வாடகை செலுத்துவதில்லை என்பதால் அரசின் குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன், அவரது அப்பார்ட்மென்ட்டை சுத்தம் செய்ய க்ளீனர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது ப்ரிட்ஜை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ப்ரிட்ஜை திறந்ததும் பல ஆண்டுகளாக அதிலிருந்த சடலம் மெல்ல க்ளீனர் மீது சாய தொடங்கியது. இதனால் ஆடிப்போன அவர், அலறியடித்துக்கொண்டு ஓடிவிட்டார். பின் இது குறித்துக் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ப்ரிட்ஜில் இருந்த சடலம் யூமி யோஷினோவின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டது.
தனது தாயாரின் பெயரிலேயே அப்பார்ட்மென்ட் இருந்ததாகவும், எங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தால், அப்பார்ட்மென்டை காலி செய்ய சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் கடந்த 10 ஆண்டுகளாகச் சடலத்தை ப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்ததாக யூமி யோஷினோ கூறியதைக் கேட்டதும் காவல் துறையினர் ஆடிப்போய்விட்டனர்.
பல ஆண்டுகளாக ப்ரிட்ஜில் இருந்ததால், உடற்கூறாய்வு யூமி யோஷினோவின் தாய் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், உயிரிழந்தபோது அவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.