கோவாக்சின் தடுப்பூசி, 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்வதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் ஆண்டனி பாஸி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும், பெருந்தொற்று நிபுணராகவும் உள்ள டாக்டர் ஆண்டனி பாஸி, கான்பரன்ஸ் கால் மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது.
எனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பது தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்..
கொரோனா நோய்த்தொற்று தொடர்பான வெள்ளை மாளிகையின் சீனியர் ஆலோசகர் ஆண்டி ஸ்லாவிட் கூறுகையில், ‘தடுப்பூசி உற்பத்தியை இந்தியா துரிதப்படுத்த, அதிகப்படுத்த தடுப்பூசி மூலபொருட்களை இந்தியாவிற்கு அனுப்பவுள்ளோம்.
இது இந்தியாவுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்தியாவின் இந்தத் துயரச் சூழ்நிலையில் உதவிகரமாக இருக்கவே விரும்புகிறோம். சிகிச்சைப்பொருட்கள், பிபிஇ கிட்கள், வென்டிலேட்டர்கள், போன்றவற்றை அனுப்ப உள்ளோம்.அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல திறன் படைத்தது. உலகின் பல பகுதிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களிடமிருந்து போதிய தடுப்பூசிகள் கிடைக்கின்றன,’ என்றார்