ஐ.சி.சி. டி20 போட்டி – 07.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஞாயிறன்று இரண்டு குரூப் 2 பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே அபுதாபியில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடைபெற்றது.
நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி பூவாதலையா வென்று முதலில் மட்டையாட முடிவு செய்தது. முதல் ஆறு ஓவர்களான, பவர்ப்ளேயில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 23 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. நஜீபுல்லா சத்ரன் என்ற ஆப்கானிஸ்தான் வீரர் மட்டும் சிறப்பாக ஆடினார். அவர் 48 பந்துகளில், 3 சிக்சர், 6 ஃபோர்களுடன் 73 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. எனவே ஆப்கானிஸ்தான் அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 124 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் போதும்; அரையிறுதிக்குச் செல்லலாம் என்பதால் நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி 18.1 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 125 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எனவே நாளை நமீபியா அணியுடன் இந்திய அணி விளையாடப் போகும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. குரூப் 2 பிரிவிலிருந்து அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மட்டுமே.
பாகிஸ்தான் – ஸ்காட்லாந்து
பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. முதலில் மிக மெதுவாக ஆடிய அந்த அணி வீரர்கள் பின்னர் புயலைப் போல ஆடினார்கள். அந்த அணி வீரர்கள் முதல் 50 ரன் எடுக்க 49 பந்துகள் எடுத்துக் கொண்டார்கள்; அடுத்த 50 ரன் எடுக்க 37 பந்துகள்; அதற்கடுத்த 50 ரன் எடுக்க 25 பந்துகள்; அடுத்த 39 ரன் எடுக்க 9 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டனர். அந்த அணியின் ஷோயப் மலிக் 18 பந்துகளில் ஆறு சிக்ஸ், ஒரு ஃபோருடன் 54 ரன் எடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி இருபது ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது.
இந்த கடினமான இலக்கை அடைய ஸ்காட்லாந்து அணி மிகவும் தடுமாறியது, அந்த அணியின் ரன்ரேட் எப்போதும் பாகிஸ்தான் அனியின் ரன்ரேட்டைவிட குறைவாகவே இருந்தது. அந்த அணியின் ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் சிறப்பாக ஆடி 54 ரன் எடுத்தார். எனவே ஸ்காட்லாந்து அணி இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 117 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது.
நாளை நடைபெறப்போகின்ற குரூப் 2 பிரிவு ஆட்டமான இந்தியா-நமீபியா ஆட்டத்தினால் எந்த முக்கியத்துவமும் இல்லை.
அரையிறுதி ஆட்டங்களில் ஆடும் அணிகள் முடிவாகிவிட்டன. முதல் அரையிறுதி ஆட்டம் நவம்பர் 10ஆம் தேதி அபுதாபியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே துபாயில் நவம்பர் 11இல் நடைபெறும்.