ஓங்கும் ராஜபட்ச கரம்; தவிக்கும் சிறீசேன! ஈழ எல்லை சுருங்கிவிட்டதாக மகிந்த மமதைப் பேச்சு!

தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பரவலாக வெற்றி கிடைத்துள்ளது. இலங்கை அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது பெரிய கட்சியாக தற்போதும் திகழ்ந்து வருகிறது.

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் கட்சி பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராஜபட்சவுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அந்த மமதையில் மகிந்த ராஜபட்ச, ஈழ பிராந்தியத்தின் எல்லை சுருங்கிவிட்டதாக கேலி பேசியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மகிந்த ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது. இதை அடுத்து இலங்கை அரசியலில் ராஜபட்சவின் கை ஓங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிபர் மைத்ரீபால சிறீசேன ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபட்ச, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும். இலங்கையின் வரலாற்றில் ஆளும் கட்சிகளை எதிர்க் கட்சியானது உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த முதல் வரலாறு நிகழ்ந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அப்போது, இலங்கைத் தேர்தல் முடிவுகளை வெளியிட்ட பத்திரிகை ஒன்றைக் காட்டி, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் எமது கட்சியின் அரக்கு நிறம்தான் இருக்கிறது. ஈழ பிராந்தியம் என்பதுகூட சுருங்கிப் போய்விட்டது என கேலியாகச் சொல்லியுள்ளார்.

தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பரவலாக வெற்றி கிடைத்துள்ளது. இலங்கை அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது பெரிய கட்சியாக தற்போதும் திகழ்ந்து வருகிறது.