டி20:இலக்குகள் அதிகம்!

உலகம் விளையாட்டு
icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டி – 02.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று அபுதாபியில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம், குரூப் 2 பிரிவில் வங்கதேச அணிக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இடயே நடந்தது. இரண்டாவது ஆட்டம் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணிக்கும் நமீபிய அணிக்கும் இடையே நடைபெற்றது.    

வங்கதேசம்-தெ ஆப்பிரிக்கா

பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஃபீல்ட் செய்யத் தீர்மானித்தது. இன்றைய தினம் வேகப் பந்துவீச்சாளர்களின் தினம். தென் ஆப்பிரிக்க அணியின் ரபாடாவும் அனிரிக் நாட்ஜேயும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் எல்லா பந்துவீச்சாளர்களும் மிகவும் சிக்கனமாகப் பந்து வீசினர். வங்கதேச அணியில் இன்று ஷாகிப் ஆடவில்லை. இனி பிற ஆட்டங்களிலும் ஆடமாட்டார் எனத் தெரிகிறது. வங்கதேச அணி 18.2 ஓவரில் எல்லா விக்கட்டுகளையும் இழந்து 84 ரன் எடுத்தது.

பின்னர் ஆடவந்த தெனாப்பிரிக்க அணி முதல் ஆறு ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்தனர். வங்கதேச வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் திணறினர். ஆனால் மிகக் குறைவான் இலக்கு என்பதால் பதட்டமில்லாமல் ஆடி 13.3 ஓவரில் 86 ரன் எடுத்து வெற்றிபெற்றனர்.

தென் ஆப்பிரிக்க அணி ஆறு புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

பாகிஸ்தான்- நமீபியா

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் நமீபியா அணியும் விளையாடின. எதிர்பார்த்து போல பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி மட்டையாட முடிவுசெய்தது. தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் மிக மெதுவாக விளையாடினர். முதல் பத்து ஓவரில் விக்கட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தனர். அதற்கடுத்த பத்து ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து இருபது ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 189 ரன் என்ற இமாலய இலக்கை நமீபிய அணிக்குக் கொடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் முகம்மது ரிஸ்வான் 50 பந்துகளில் நாலு சிக்ஸ், எட்டு ஃபோர்களுடன் 79 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும் அணித்தலைவருமான பாபர் ஆழம் 49 பந்துகளில் ஏழு ஃபோர்களுடன் 70 ரன் எடுத்தார். முகம்மது ஹஃபீஸ் 16 பந்துகளில் 32 ரன் எடுத்தார். இருபதாவது ஓவரில் ரிஸ்வான் ஒரு சிக்ஸ், நாலு ஃபோருடன் 24 ரன் எடுத்தார்.

பின்னர் ஆடவந்த நமீபியா தொடக்கத்திலிருந்து ஓவருக்கு எட்டு ரன் வீதத்தில் அடித்துக்கொண்டிருந்தது. ஆனால் 189 என்ற இமாலய் இலக்கை எட்ட அந்த ரன் ரேட் போதவில்லை. இருபது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 144 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான், புள்ளிப்பட்டியலில் குரூப் 2 பிரிவில் அணி எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நாளை குரூப் 2 பிரிவில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. நியூசிலாந்து ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம் மற்றும் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.