இருந்தது 10 பரிசுப் பொருள்; கொடுக்கப்பட்டதோ 100 பேருக்கு! ஓபிஎஸ்., முன்னிலையில் மாயாஜாலம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

வெறும் பத்து பரிசுப் பொருள்களை வாங்கிவைத்துக் கொண்டு, 100 பேருக்கு கொடுத்த அளப்பரிய சாதனையைப் படைத்துள்ளது கல்வித்துறை. இந்த மாயாஜாலத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வைத்தே நடத்தியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான தமிழகப் பள்ளிக் கலைத் திருவிழா சனிக்கிழமை இன்று காலை தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பரிசுகளை வழங்கினார். மாணவ மாணவிகள் பெயர்கள் வாசிக்கப்பட அவர்கள் வரிசையாக துணை முதல்வரிடம் இருந்து பரிசுகளை வாங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து நகர்ந்தனர்.

அவ்வாறு வரும் மாணவ, மாணவியரிடம் இருந்து பக்கவாட்டில் நின்றிருந்தவர்கள், பரிசுகளை அந்த மேடையிலேயே பறித்துக் கொண்டு, அவற்றை மீண்டும் வேறு மாணவ மாணவியருக்கு கொடுக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி10 பரிசுகளை வாங்கி அதனை 100 பேருக்கு கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.

அவ்வாறு கொடுத்துச் செல்லும் மாணவியரிடம், நீங்க ஸ்கூலுக்கு போங்க… இந்த பரிசெல்லாம் உங்க ஸ்கூலுக்கே வந்துடும் என்று சொல்லி மாணவ மாணவிகளை வெறும் கையுமாக அனுப்பி வைத்துள்ளனர்.

பிளக்ஸ் பேனர் அடிப்பதில் காட்டும் செலவை, மாணவர்களுக்கு பரிசுப் பொறுள் வாங்க செலவு செய்யக் கூடவா இயலாத நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்?

கல்வித்துறையின் இந்த மோசமான அணுகுமுறை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி மாணவர்கள் கையில் இருந்து பரிசுகள் பறிக்கப்படுவதை துணை முதல்வர் ஓபிஎஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.