காலையில் விலகல்; மதியம் விலகலுக்கு விலகல்! பிறகு முடிவு வாபஸ்! ஜெ.தீபாவால் இன்று கலகல..!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

deepa madhavan - 2026

கனடா பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அரசியலில் இருந்து விலகும் தனது முடிவை வாபஸ் பெற்றார் #ஜெ_தீபா என்று கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்!

ஒவ்வொரு நாளும் பொழுது போகவும் போக்கவும் ஏதாவது ஒன்று சமூக வலைத்தளவாசிகளுக்கு கிடைத்து விடுகிறது. வெச்சி செய்வது என்ற ரீதியில் பொழுது போக இன்று கிடைத்த வெறும்வாய்க்கு மெல்லும் அவல் மேட்டர்தான் ஜெ.தீபாவின் அரசியல் அதிரடி கலகல காமெடி!

இன்று பேஸ்புக், ஜெதீபா பெயர்களால் நிரம்பிவழிந்தது. புயலென அரசியல் களத்தில் உள்ளே புகுந்து, வலுவிழந்த காற்றாய் புஸ்ஸாகிப் போனதில் ஜெதீபா முதன்மையானவர். ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து உள்ளே வந்தவர், கால ஓட்டத்தில் காணாமல் போனார். ஆனால், அவர் வந்த வேகத்தில் அவருக்காக பட்டுக் கம்பளம் விரித்து, பூக்களை அள்ளித் தெளிப்பது போல், பணத்தை வாரியிறைத்தவர்கள் எல்லாம் வாரிச்சுருட்ட நேரம் பார்த்தார்கள்! இப்போது திடீரென காலை பின்னுக்கு இழுத்தால் பின்னே வந்தவர்கள் என்ன செய்வார்கள்?!

இன்று ஜெ_தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு, அவரது பெயரிலான பேரவையினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதே நேரம், இன்று செம காமெடி இருக்கு என்று பேஸ்புக்வாசிகளுக்கு உற்சாகத்தைத் தந்தது.

deepa jayakumar - 2026முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேஸ்புக் பக்கத்தில் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதில், யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்; எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்! குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை! ஏன் என்னைக் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு ஜெ_தீபா கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜெ.தீபா பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்தக் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்! தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது ஆதரவாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடுத்த காச திருப்பி கேட்டா என்ன நடக்கும்னு கோடு காட்டிச்சு போல… என்று இந்த முடிவுக்கு அர்த்தம் கொடுத்தார்கள்.

இந்நிலையில், பேரவையைக் கலைக்க வேண்டாம் என்று நிர்வாகிகள், ஜெ.தீபாவுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் மனம் மாறியதால்தான், ஜெ.தீபா, அரசியலில் இருந்து முற்றிலும் விலகுகிறேன் என்று வெளியிட்ட அறிவிப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார் என்கிறார்கள்.

இதை அடுத்து, கனடா பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அரசியலில் இருந்து விலகும் தனது முடிவை வாபஸ் பெற்றார் #ஜெ_தீபா என்று கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்!

ஒருவேளை விலகும் முடிவு இருந்தால், கணவரான மாதவனிடமே விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டிருக்கலாமே என்று கலகலக்கிறார்கள் சிலர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெ.தீபா, நான் அரசியலுக்கு வந்ததால், நெருக்கடி வேதனை ஏற்பட்டது. பெண்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் தரக் குறைவான விமர்சனம் இருக்கக் கூடாது. கட்சி தொடங்கிய பிறகு என்னை ஏமாற்றிவிட்டனர்.
என்னை வழிநடத்த சரியான நபர்கள் எவரும் இல்லை! இனிமேல் எப்போதும் நான் அரசியலுக்கு வர மாட்டேன். ஜெயலலிதா சொத்துக்கு ஆசைப்பட்டது இல்லை. சொத்து வேண்டும் என்றால் நான் அப்போதே கேட்டிருப்பேன்.

என் வீட்டின் முன் நின்று, என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்ததால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அரசியலுக்கு வந்ததே தவறு என பல முறை யோசித்துள்ளேன். இனி அரசியல் எனக்கு வேண்டாம்… என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.