
- ஜடாயு, பெங்களூர்
பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதத்தை நொறுக்கி அழிக்கும் ஆபரேஷன் சிந்தூர் போரில், இந்தியா முழுவதும் ஒன்றுதிரண்டு நமது தேசியத் தலைமையும், ராணுவமும் இணைந்து எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே குரலில் தனது ஒட்டுமொத்த ஆதரவைத் தெரிவித்திருக்கின்றது, விதிவிலக்கான மிகச்சில தேசதுரோக அபஸ்வரக் குரல்கள் தவிர்த்து. வெளிப்படையான பாகிஸ்தானிய ஆதரவில் ஆரம்பித்து, போரைத் தவிர்ப்போம், அமைதி, மனித நேயம், இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்று பலவிதமானவை இந்த அபஸ்வரங்கள்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த அபஸ்வரக் குரல்களின் நாராசம் தமிழ்நாட்டில் சற்று அதிகமான ஓசையுடன் உரத்து ஒலிக்கிறது. சீமான், வைகோ, திருமா, ஜகத் கஸ்பர், பா.ரஞ்சித் போன்ற வழக்கமான இந்திய தேசிய எதிர்ப்பு அரசியல், சினிமா பெருச்சாளிகளும், தமிழ் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் உலாவும் சில்லறை தேசவிரோத பூரான்களும் தெரிவிக்கும் கருத்துக்கள் தான் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன என்று விசனப் படுகிறார்கள் நண்பர்கள், தேசபக்த தமிழர்கள் (தினமலர் தவிர்த்து, தமிழ் ஊடகம் என்ற முடைநாற்றமெடுக்கும் சாக்கடைப் பக்கம் நான் அதிகம் போவதில்லை).
தமிழ்நாட்டின் அறிவுசீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கூட்டாக கையெழுத்து போட்டு வெளியிட்டுள்ள அறிக்கை இன்னொரு அசிங்கம் (சுட்டி முதல் மறுமொழியில்). வண்ணதாசன், பவா செல்லதுரை, இமையம், ரவிக்குமார் எம்.பி., ஜி.குப்புசாமி, பெருமாள் முருகன், சாம்ராஜ், சுப்ரபாரதிமணியன், இளங்கோ கிருஷ்ணன் என்று நீங்கள் அறிந்த, அறியாத இலக்கிய மாஃபியா உறுப்பினர்களின் பெயர்கள் இதில் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் எத்தனைபேர் எழுதியிருப்பதை படித்துப் பார்த்தான்கள் தெரியவில்லை.
ஆட்டுமந்தைக் கூட்டம் போல பெயர் போட்டிருக்கவும் கூடும். எப்படியானாலும், இந்த தேசதுரோக கீழ்மகன்களின் பெயர்களை மறக்காமல் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். “இலக்கியம்” என்ற பெயரில் இந்த சனியன்கள் எழுதும் நச்சுக்கழிவை வாசிக்காவிட்டால் எந்தவிதத்திலும் நீங்கள் குறைந்துபோய்விடமாட்டீர்கள் என்பதை உணருங்கள்.
பல வருடம் முன்பு கோவை குண்டுவெடிப்பு கொடூரன் மதானியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் இதேபோல தமிழ்நாட்டின் இலக்கிய மாஃபியாவை சேர்ந்த ஒரு பெரிய கும்பல் கையெழுத்திட்டது. அந்த அவலட்சண “பாரம்பரியம்” இன்னும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்தக் கும்பலை சமரசமின்றி கண்டித்திருக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் போற்றுதலுக்குரியவர்.
தமிழ் இலக்கியத்தில் நேர்மையும், தேசபக்தியும், பண்பாட்டு உணர்வும் இன்னும் ஏதோ கொஞ்சம் ஜீவனுடன் உள்ளன என்பதற்கான சாட்சி அவர். இதில் கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்ட பிற பிரபல எழுத்தாளர்கள், அறிவுசீவிகளும் அந்த நம்பிக்கையை மேலும் சற்று உறுதிப் படுத்துகிறார்கள்.
உண்மையில் தமிழ்நாட்டின் வெகுஜன மனநிலை இந்திய தேசியத்திற்கு எதிரானதல்ல. சொல்லப் போனால் தேசபக்தியிலும் ராணுவத்தின் மீதான மதிப்பிலும் தமிழர்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. ஆனாலும் ஏன் இப்படி நடக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் முதல் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த மறுநாள், லக்னோவிலும், வாராணசியிலும், தில்லியிலும், மும்பையிலும், பெங்களூரிலும் மற்றும் பல நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து தேசபக்த கோஷங்களுடன் அதைக் கொண்டாடினார்கள்.
ஆனால் கேவலம் ஒரு சினிமா நடிகனுக்காக தாம்தூம் என்று குதிக்கும் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரையில், இதற்காக எந்தக் கொண்டாட்டமும் நடந்தது பற்றிய செய்திகள் எதையும் நான் பார்க்கவில்லை. ஏன் இந்த நிலை? இதற்கும் குவார்ட்டரும் பிரியாணியும் கொடுத்து கூட்டிவரவேண்டும் என்ற நிலையில் தான் திமுக கொத்தடிமைகளின் சொர்க்கபூமியான தமிழ்நாடு உள்ளது போல.
பாஜகவும் மற்ற தேசபக்த சக்திகளும் இணைந்து இந்த வெட்ககரமான தமிழ்ச் சூழலை மாற்றியாக வேண்டும். இதை இப்படியே வளரவிடுவது தமிழ்நாட்டின் நலனுக்கும், பாரதநாட்டின் இறையாண்மைக்கும் சற்றும் உகந்ததல்ல.





