
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு காலா. இது குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.
கபாலியை அடுத்து ரஜினிகாந்தை வைத்து பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ட்விட்டர் மூலம் இன்று காலை அறிவித்தார். தலைப்பைக் கேட்டு ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், பலரும் அது என்ன காலா என்று கேட்டு வருகின்றனர்.
இதனால், காலா என்பதற்கான பொருளை பா. ரஞ்சித் விளக்கியுள்ளார். நீதியும் நேர்மையும் கொண்ட தமிழ் அரசர் கரிகாலனைக் குறிப்பதுதான் காலா. திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ கடவுள் ‘காலா’. மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கைதான் காலா படம் என்று ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.
காலா படக்குழு ஏற்கெனவே மும்பைக்குக் கிளம்பிவிட்டது. வரும் 28ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. அன்றைய படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொள்கிறார். அவர் மூன்று வாரங்கள் மும்பையில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். படப்பிடிப்பின் பெரும்பகுதி தாராவி பகுதியில் நடைபெறுகிறது.



