spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநானும் அவளும்..!

நானும் அவளும்..!

- Advertisement -

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி… – என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

அந்தப் பார்வையில் ஏக்கமா? ஏளனமா? அனுமானிப்பதில் அப்படி ஒன்றும் பிரம்மப் பிரயத் தனம் இல்லைதான்! திருமணம் ஆனவராயிருந்தால் ஏக்கப் பார்வை! ஆகாதவராயிருந்தால் ஏளனப் பார்வை! 

புறநகர் மின்சார ரயில் வண்டிப் பயணத்தில் ஒரே பெட்டியில் தினமும் வந்துபோனதில், ஒரு நட்பு வட்டம் சேர்ந்திருந்தது! ஒவ்வொரு நாளும் இண்டர் நேஷனல் லெவலில் டீப் டிஸ்கஷனெல்லாம் நடக்கும். சில நேரம் காரசாரமாக! சில நேரம் யம்மியா கிரிஸ்பியா! 

அன்று இந்த ரிங்டோனே விவாதத்தை தொடங்கி வைத்தது. ஒருவர் அப்படி என்ன இதில் சிறப்பு என்றார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்காதா? அது மாதிரி இது என் கல்யாணக் கனவு ஆசை என்றேன்!

பிடித்துக் கொண்டார்கள். அங்கே கனவுகளின் கோட்டை ஒவ்வொரு கல்லாக வைத்துக் கட்டப்பட்டது! 

சார்… இது 20 வருடம் முந்தைய ப்ளாஷ்பேக். நான் திருச்சி காலேஜில் படித்த போது இந்த ‘மீண்டும் கோகிலா’ படத்தை கெயிட்டி தியேட்டரில் ரசித்துப் பார்த்தேன். கமல்ஹாசன் ஸ்ரீதேவியை பெண் பார்க்கும் ஸீன்! ஸ்ரீதேவியின் அந்த முகபாவம், அழகா நீலக் கலர் பட்டுப் புடவை கட்டி, நெற்றியில் ரொம்ப அழகா குங்குமப் பொட்டு வைத்து, தலை நிறைய பூ வெச்சி, வீணையை லாகவமா மடியில் வெச்சி… அதெல்லாம்விட சுத்தி வர சொந்தக்கார பெண்மணி கள், பாக்கு இடிக்கிற பொக்கைவாய்ப் பாட்டி, மடியில ஒண்ணுக்கு அடிக்கிற குழந்தைன்னு… அட இந்த மாதிரி நம்ம வாழ்க்கையிலயும் ஒரு பெண் பார்க்கும் படலம் இருக்கணும், இதே மாதிரியான ஸீன் நடக்கணும்னு கனவெல்லாம் இருந்துது சார்…

“என்னாது..? அப்டில்லாம் நடந்ததா என்ன?” நண்பர் இடைமறித்தார்.

 “அட போங்க சார்… இந்தக் காலத்துல அப்டில்லாம் நடக்குமா? பாட்டு, வீணை, புடவை, பூன்னு… எல்லாம் ஒரு கனவு; ஆசை..! ஆனா, இப்டி ஆசைஇருக்கக் கூடாதா என்ன?” – கேட்டு வைத்தேன்! 

“சார்… உங்க ஆசை என்ன சார் ஆசை..! பாத்தோமே ஒரு புரோக்கிராம்! நீயா நானான்னு! உண்மையிலயே அப்டி ஆக்கிப்புட்டாங்க! நீயா நானான்னுதான்!”

“அட அதெல்லாம் நான் பாக்கலையே சார்…” என்று சொன்னதுதான் தாமதம், இன்னொருவர் தன் செல்போனில் யுடியூப்பை இயக்கி, என் முகத்துக்கு நேரே நீட்டினார். 

நாலைந்து பேராக சற்று நேரம் கேட்டுக் கொண்டே வந்தோம். ரயில் ஆட்டத்தைவிட உடன் வந்த ஓரிருவரின் மனம் கொந்தளிக்க, கை கால்கள் ஆடத் தொடங்கின.

“சார்.. கூல் கூல்! கொஞ்சம் இருங்க. ஏன் இப்படி கோவப் படறீங்க! என்னதான் பேசறாங்கன்னு கேப்பமே!” என்றேன். 

பெண்கள் என்னமாய் ஆசைகளை வெளிப்படுத்து கிறார்கள்! பிரமிப்பாய் இருந்தது! நான் ஏதோ மீண்டும் கோகிலா ரேஞ்சுக்கு இருக்க, பெண்களோ ஹாலிவுட்டுக்கு ஐடியா கொடுப்பார்கள் போலிருக்கிறதே!

ஒரு பெண் சொல்கிறாள்… ‘மாப்பிள்ளை சும்மா கார்ல வந்து போர் அடிச்சிடிச்சி; அப்டியே ஜம்னு ஹெலிகாப்டர்ல வந்து இறங்கணும்!’ ‘கல்யாண மண்டபம் அப்டி சும்மா நச்னு… 100 பவுனுக்கு குறைஞ்சி ம்ஹும்… அந்த வீடு, அதே வீடு, அதுவும் ரோட்டடில இருக்கற வீடு, எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே எழுதிக் கொடுத்திடணும்… அப்பா கடன கட்டுவாரு; தம்பி கடன்காரனா ஆயிட்டுப் போறான்..!’

இப்படியாக எவ்வளவோ கருத்துகள்! அருகிருந்த வர்கள் கொந்தளிக்க நான் சொன்னேன்… ‘சார் பெண்கள் எவ்ளோ அழகா ஆசையை வெளிப்படுத்த றாங்க! ஆசைப் படறதுல, கனவு காணுறதுல ஒன்னும் தப்பில்லையே சார்! ஆனா… இந்த கடன்காரன், அப்பா தம்பி, நூறு பவுன், வீடு, கல்யாண மண்டபம்ங் கிற இந்த டிமாண்டுகளும் மனப்பாங்கும் தான் சார் இடிக்குது! இது ஏதோ இந்தப் பெண்களா பாத்து பேசின மாதிரி தெரில…!’ என்று இழுத்தேன்.ந

கைச்சுவையாகப் போன டிஸ்கஷன் அப்படியே கொஞ்சம் சீரியஸாகிவிட்டது. அந்தக் காலத்துல… என்று இழுத்தாலே, யோவ் இதெல்லாம் இப்போ பேசாதே! இப்ப உள்ளதைப் பேசு என்று வாயடைத்து விடுகிறார்கள். இருந்தாலும் நாம் அறிந்ததைச் சொல்லித்தானே ஆகணும்! 

வழக்கம்போல் ராமாயணத்தில் இருந்து ஒரு கருத்தை சொன்னேன். ஒரு பெண்ணின் கடமையை, உரிமையை சீதை எப்படிச் சொல்கிறாள் தெரியுமா? தான் மட்டும் காட்டுக்குப் போகிறேன் என்று ராமன் சொன்னபோது, சீதை, “மனைவி, கணவன் உடலில் சரிபாதி என சுருதிகள் சொல்கின்றன? எனவே உம்மை காடு செல்லும்படி கட்டளையிட்டால் அது எனக்கும் பொருந்தும். இகலோகத்திலும் பரலோகத்திலும் ஒரு பெண்ணுக்கு கதி யார்? பிதாவா, மாதாவா, புத்திரனா, தேகமா, தோழிகளா? இல்லவே இல்லை! கணவன் ஒருவனே!ந பிதா ந ஆத்மஜ: ந ஆத்மா ந மாதா ந சகிஜனா: இஹப்ரீத்ய ச நாரீணாம் பதி: ஏகோ கதி: சதாஎன்று கணவனே பெண்ணுக்கு கதி என்கிறாள்.

அது பின்னாளில் பொருளாதார ரீதியாக ஒரு பெண் ஆணைச் சார்ந்திருக்கும் நிலைக்குக் கொண்டு வந்தது. சிறு வயதில் தந்தை, பின் சகோதரன், மணமான பின் கணவன், வயதான காலத்தில் மகன் என்று ஆனது.

இப்போதைய சமூகம், ஒற்றைக் குழந்தை சமூகம். அல்லது பெண்பிள்ளைகளே கொண்ட குடும்பம். அப்போது, பொருளாதார சுயசார்பு என்று பெண்ணின் சார்பு பரிணாமம் பெற்றது. அதற்காக பணிக்குச் செல் கிறார்கள். தங்களுக்கு வேண்டியதை தாங்களே சம்பாதித்து, பெற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரை சார்ந்திருக்கும் பெண்கள் மிகக் குறைவு.

இப்படியான ஒரு பரிணாம வளர்ச்சி பெற்ற சமூகத்தில் பெண்கள் தந்தையை, சகோதரனை கடன்காரன் ஆக்குவேன் என்பது, குடும்பத்திலும், சமூகத்திலும் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்தாக்க செயலன்றி வேறல்ல; பெண் வாரிசு மட்டுமே உள்ள குடும்பத்தில் பெற்றோரைப் பேணும் பொறுப்பை பெண்ணே ஏற்கிறாள்! பெற்றோர் வசதி இல்லாதவர்கள் எனில், பெண்ணே உழைத்து கடமையைச் செய்கிறாள்!

ஆனால் ஊடகத்தில் காட்சிப் படுத்தப் படுவது, பொருளாதார ரீதியில் உயர் வகுப்பினர்தான். அவர்களின் எண்ணங் கள் சமூகத்தின் பொது எண்ணம் அல்ல!” என்றேன். 

உண்மைதான்! என் நெருங்கிய உறவுப் பெண் ஒருத்தி. வயதாகிக் கொண்டே போகிறதே! ஏனம்மா இன்னும் திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறாய்! அம்மா வருத்தப் படுகிறாரே! என்று கேட்டால், தெளிவாகச் சொல்கிறாள்… ‘கஷ்டப் பட்டு படிக்க வைத்து வளர்த்த அம்மாவின் எதிர்காலத்துக்கு பேங்க் பேலன்ஸ் கௌரவமாகச் சேர்த்து வைத்துவிட்டு பிறகு யோசிக்கிறேன்….!’ அவளே இந்த சமூகத்தின்  பெண்ணினத்தின் அடையாளம்! 

வரதட்சிணை கேட்பது தவறு என ஆன்மிகப் பெரியவர்களும் சமூகவாதிகளும் சொல்லி வந்துள்ளார்கள். அதையும் மீறி கௌரவம் என்ற பெயரில் இதை நாம் அனுமதித்துதான் வருகிறோம்.

ஆண் வீட்டார் கேட்கும் வரதட்சிணையைப் போல், சீர் செனத்தி என, பெண் வீட்டாரே தம் சக்தியை மீறிச் செய்வதும், பெண் பிள்ளைகளின் இந்தப் போக்குக்கு வழி வகுத்துள்ளது என்று சொல்லலாம்! 

சொன்னபடி நகை பணம் கொடுக்காததால், வீடு எழுதி வைக்காததால் திருமணம் நின்றது என்று இதே நாட்களில் செய்திகளும் வரத்தான் செய்தன. எல்லாப் பெண்களும் பெற்றோரை சுரண்டிப் பிழைப்பவர்கள் இல்லை. திருமணம் ஆகியும், தன் சம்பளத்தில் ஒரு பகுதியை பெற்றோருக்கு அனுப்பி வைக்கும் பெண்கள் அதிகம்!

தங்களுக்கு வேண்டியவாறு பேசும் 25 பேரைக் காட்டி, இதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வை எனக் காட்டுவது அபத்தம், ஆபத்து!ஆனால் ஒன்று! கல்யாணத்துக்கு நிற்கும் நம் நாட்டின் இளம்பெண்களை இவ்வளவு கேவலமாக யாராலும் சித்திரிக்க முடியாது. ஊடகங்களில் எதிர்ப்பும் அதிருப்தியும் தலைதூக்கியதும், தமது செயலை நியாயப் படுத்தும் விதத்தில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை இதேபோல் நடத்தி, அடம் பிடிப்பது என்ன மாதிரியான டிஸைன்?!

இவர்கள், அண்ணனுக்கும் தங்கைக்கும் சண்டை மூட்டுகிறார்கள்; சகோதர பாசத்தை கொச்சைப் படுத்துகிறார்கள். சகோதரிகளுக்குள்ளே பிரிவினை உண்டாக்குகிறார்கள்! வீடு, பணம், நகை, புடவை, அப்ளையன்ஸஸ், நுகர்பொருள்கள் இவற்றில் மோகம் கொண்டவர்கள் பெண்கள் என நிலைநிறுத்துகிறார்கள்!

இதை எல்லாம் கொடுப்பார்கள் என்றுதான் நான் அம்மா அப்பா பார்த்து வைக்கும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.. இல்லாவிட்டால்… என்று ஒரு பெண் சொல்கிறாள். இதைக் கேட்கும் மனநிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம்!

உண்மையில், கன்ஸ்யூமரிசம் எனும் நுகர்பொருள் ஆசை கொண்டது, ஒரு மதம். இது, இந்துயிசத்தை, கிறிஸ்துவிசத்தை, இஸ்லாமிசத்தை என இசங்களை தூக்கிச் சாப்பிட்டுவிடும் தன்மை கொண்டது! இந்த நிகழ்ச்சியில் இத்தகைய பெண்களின் ஆசைகளை, கண்டிஷன்களை அவர்களின் வாயால் கேட்ட ஆண், அவர்களைத் திருமணம் செய்யத் தயங்குவான் என்பது ஒருபுறமிருக்க, பெற்றோர்களின் நிலையை யோசித்தால் கவலைதான் மிஞ்சுகிறது!

இந்த நிகழ்ச்சியில் பேசிய பெண்களின் பேச்சுகளும் ஜோடனைகளும் நிச்சயம் அவர்களின் கருத்தோட்டங்கள் இல்லை என்றே தோன்றுகிறது. யாரே ஒருவரின் பேச்சை அவர்கள் தங்கள் முகங்களின் வழியே வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்!

ஒரு பவுன் நகையை சம்பாதிக்க, நேர்மையான வழியில் வியாபாரத்திலோ, மாசச் சம்பளமோ, கூலியோ பெறும் இவர்களின் தந்தை எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்? இந்த நகை, புடைவை ஆசைகளையெல்லாம் ஈடு செய்ய வேண்டுமானால், நிச்சயமாக அவர் நேர்மையற்ற வழியில்தான் சம்பாதித் தாக வேண்டும். லஞ்சம் ஊழல் குறித்து தெருவுக்கு கொடிபிடிக்க வருபவர்கள், தங்கள் தந்தை அதே ஊழலில் திளைக்க தாங்களே காரணமாவதை உணர்வார்களா? ஆடம்பரமும், தேவைக்கு மீறிய படாடோபங்களும் தங்களை மட்டுமல்ல, சார்ந்தோ ரையும் படுகுழியில் விழ வைக்கிறது!

இவர்களைப் போல், சொத்து எனக்கு, எல்லாம் எனக்கு என்று ஒவ்வொரு அண்ணன்களும் தம்பிகளும் சண்டை போட்டால், பெண்கள் பாடு மேலும் திண்டாட்டமாகும். அத்தகைய கொடூர விதையை இவர்களின் பேச்சுக்கள் தங்கள் சகோதர்களின் மனத்தில் விதைக்கும் விளைவை அவர்கள் பிற் காலத்தில் உணர்வார்கள்!ஊடகங்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும்.

ரேட்டிங்குக்காக சமூகத்தில் தெரிந்தே தாங்கள் எண்ணும் நச்சுக் கருத்துகளை பிறர் எண்ணம் என்ற ரீதியில் பரப்புவது தவறு! ஒருவர் சொன்னார், அட போங்க சார்…இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காம, அந்த நிகழ்ச்சிய கண்டுக்காம விடறதுதான் இவங்களுக்கு ட்ரீட்மெண்ட்!

இவர்களது தேவை, விளம்பரம். அது நெகடிவ்வா கிடச்சாலும் மதிப்பு உண்டு. மக்களை திசை திருப்ப நினைப்பவர்களை ஒதுக்குவதுதான் புத்திசாலித்தனம். இதுக்கு பதில் சொல்றாதை விட, நாலு ஜோக் சொன்னா, நண்பர்கள் சிரிச்சுட்டு போவாங்க… என்றார்! 

(மங்கையர் மலர் இதழில் வெளியான கட்டுரை)

– செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe