October 15, 2024, 3:22 AM
25 C
Chennai

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (23): உலூகல சேஷ லேஹன நியாய:

சமஸ்கிருதம் நியாயமும் விளக்கமும் பகுதி – 23
தெலுங்கில்: பி.எஸ்  சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

உலூகல சேஷ லேஹன நியாய:
உலூகலம் – உரல், சேஷம் – மீதியிருப்பது, லேஹனம் – நக்குவது.
(உரலில் தலையைக் கொடுத்தது போல)

உரலில் மீதி உள்ள பொருளை நக்குவது என்பது இதன் பொருள். இது படிப்பதற்கு ஒரு விதமான நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால் இந்த நியாயத்தில் ஒரு நீதிக் கருத்து உள்ளது. ஒரு புத்திசாலித்தனம் உள்ளது. பாசாங்கு செய்யும் ஹிப்போக்ரசி மீது ஒரு சாட்டையடி உள்ளது.

உள்ளுக்குள்ள ஆசை இருந்தாலும் வெளியில் அடக்கமாக இருப்பது போல் நடிப்பது இந்த நியாயத்தில் உள்ள அம்சம். “எனக்கு அதெல்லாம் பிடிக்காது. எனக்குத் தேவையில்லை” என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் அதை விரும்பும் குணத்தை விமரிசிக்கிறது இந்த நியாயம்.

உலகத்தில் யோகிகள் போல் நடிக்கும் போகிகள் இருப்பார்கள். உலகத்தை வஞ்சிப்பதற்காக புலன்களை கட்டுப்படுத்தி இருப்பது போல பிரமையை ஏற்படுத்துவார்கள். மனம் இன்பங்களின் மீதே இருக்கும். இவர்களைப் பற்றிய விமர்சனமே இந்த நியாயம்.

இதுபோன்ற வெளிப்பகட்டால் அதிக நஷ்டமும் அதிக அவமதிப்பும் ஏற்படும் என்று இந்த ‘உலூகல சேஷ லேஹன நியாயம்’ எடுத்துரைக்கிறது. கிறிஸ்தவ சர்ச்சுகளில் பாதர் என்று அழைக்கப்படுபவர்களே சிஸ்டர்ஸ் (நர்சுகள்) மீது செய்து வரும் மானபங்கங்கள் பற்றி அண்மையில் செய்திகள் படிக்கும் போது இந்த நியாயமே நினைவுக்கு வருகிறது.

உலகம் தன்னை நல்லவனாக நினைக்க வேண்டும் என்று நடிப்பதால் உண்டாகும் தீய பரிணாமத்தை விவரிக்கும் ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. சங்கோஜப்பட்டு பொய்யாக நடிப்பதால் வரும் துன்பங்களை நையாண்டியாகத் தெரிவிக்கும் கதை அது.

சுருக்கமாக அந்த கதையைப் பார்ப்போம். ஒரு ஊரில் கூச்சம் அதிகமுள்ள புது மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு பண்டிகைக்கு வருகிறான். அவனுக்கு மிகவும் பிடித்த   ‘மாகாய்’ என்னும் மாங்காய் ஊறுகாய் உரலில் இடித்து தயார் செய்வதைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு வாயில் எச்சில் ஊறியது. அன்று மாலை மாப்பிள்ளைக்காக பருப்பு அடையும் அதற்கு தொட்டுக் கொள்வதற்கு ‘மாகாய்’ ஊறுகாயும் பரிமாறினார்கள். ஊறுகாய் எத்தனை தின்றாலும் இன்னும் வாயில் நீர் வயிற்றில் ஊறிக் கொண்டே இருந்தது. இன்னும் வேண்டும் என்று கேட்பதற்கு புது மாப்பிள்ளை வெட்கப்பட்டான்.   

அன்று இரவு அனைவரும் உறங்கிய பின் சமையலறையில் இருந்த உரலில் ஒட்டியிருந்த மீதி மாங்காய் ஊறுகாயை வழித்துத் தின்ன வேண்டும் என்று விரும்பினான். முதலில் குழவியை எடுத்து அதனை ஆசை தீர நக்கிய பின்பும் அவனுக்கு திருப்தியாகவில்லை. அந்த உரலில் தலையை நுழைத்து அதில் ஒட்டியிருக்கும் ஊறுகாயையும் நக்க வேண்டும் என்று முயற்சி செய்தான். பாவம தலை உரலில் சிக்கிக் கொண்டது.

ALSO READ:  ஆடி-18 நாளில் சிவகாசியில் 2025ம் ஆண்டுக்கான காலண்டர் பூஜை போட்டு வெளியீடு!

“ஐயோ அம்மா” என்று முதலில் முனகினான். பின்னர் அரற்றினான். பின்னர் கத்தினான், அலறினான். அனைவரும் நல்ல உறகத்தில் இருந்ததால் யாருக்கும் காதில் விழவில்லை. சற்று நேரம் கழித்து மனைவி எழுந்து பார்த்த போது கணவன் அறையில் இல்லை. வீடு முழுக்கத் தேடினாள். சமையல் அறையில் சத்தம் கேட்டதால் உரலில் தலையை நுழைத்துக் கொண்ட கணவனைப் பார்த்ததும் பயந்துபோய் நாலு பேரை அழைத்து வந்து கணவனின் தலையை வெளியே எடுத்தாள். (தமிழில் இந்தக் கதையை எள்ளுருண்டைக்காக உரலில் தலையைக் கொடுத்த புது மாப்பிள்ளை என்று கூறுவோம்)

இவ்வாறு ஏற்பட்டது தான் ‘உலூகல சேஷ லேஹன நியாயம்’. கதையில் வரும் வீட்டு மாப்பிள்ளையின் மனநிலையையும் நடத்தையையும் ஆராய்ந்து பாருங்கள். அனைவரும் பார்க்கும் போது ஒரு விதமான நடத்தையும் யாரும் பார்க்காத போது உண்மை சுபாவமும் வெளிப்படுகிறது. உள்ளே ஆசை. வெளியில் நடிப்பு. இவ்வாறு இரட்டை மனநிலையில் இருக்கும் இந்த மாப்பிள்ளை போன்றவர்கள் அவமானத்திற்கு ஆளாகிறார்கள். ஆபத்தில் சிக்குகிறார்கள் என்று எச்சரிக்கிறது இந்த நியாயம்,

சாணக்கிய நீதியில் உள்ள இந்த ஸ்லோகம் இந்த நியாயத்தில் உள்ள நீதிக் கருத்தான சங்கோஜம் பற்றி எச்சரிக்கிறது.

தன தான்யா ப்ரயோகேஷு, வித்யாசங்க்ரஹணேஉ பி ச
ஆஹார வ்யவஹாரே ச த்யக்த லஜ்ஜா: சுகீ பவேத்

பொருள்: வியாபாரம் தொடர்பான விவகாரங்களிலும், கல்வி கற்கும் போதும்,   சாப்பாட்டு விஷயத்திலும், பிற மனிதத்  தொடர்பான விஷயங்களிலும் சங்கோஜப்படுவதை விட்டவர்கள் சுகப்படுவார்கள்.

வெட்கம் என்பது மனிதனுக்கு அலங்காரம் என்பர் பெரியோர். அலங்காரம் என்றாலே தேவையான போது அணிந்து, தேவையில்லாத போது மறைத்து வைப்பது அல்லவா! கூச்சம், வெட்கம், சங்கோஜம் போன்றவை இருக்கக்கூடாத சந்தர்ப்பங்களை கவிஞர் விவரிக்கிறார்.

நண்பர்களிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் சங்கோஜம் இருக்கக் கூடாது. பின்னால் வருத்தப்படுவது விட முன்னால் கண்டிப்பாக இருப்பது நல்லது. எத்தகைய நண்பன் ஆனாலும் சரி சங்கோஜம் இல்லாமல் கொடுக்கல் வாங்கல் நிகழந்தால் மட்டுமே நட்பு நிலைத்திருக்கும்.  

இனி, கல்வி விஷயத்திற்கு வந்தால் – வகுப்பில் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியரை அச்சமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். யாரோ ஏதோ நினைப்பார்கள் என்று கூச்சப்பட்டால் யாருக்கும் நஷ்டம்? அதனால் கல்வி கற்கும் விஷயத்தில் வெட்கம் கூடாது.

ALSO READ:  நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

அடுத்து, நியாயத்தில் நேரடியாக தெரிவிக்கும் விஷயம் என்னவென்றால் சாப்பாட்டு விஷயத்திலும் சங்கோஜம் கூடாது என்பது. சாப்பாட்டு விஷயத்தில் வெட்கப்பட்டால் யாருக்கும் நஷ்டம்? உணவு விஷயத்திலும் பத்தியம் விஷயத்திலும் கூச்சப்படக் கூடாது.   

அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த ஒரு கூச்ச சுபாவம் உள்ள நண்பர் அமெரிக்காவில் நம்மவர்களுக்கு விருந்து உபசாரமே தெரியவில்லை என்று வருத்தப்பட்டார். என்ன ஆயிற்று என்று கேட்டபோது, ஒரு நண்பர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற போது சங்கோஜத்தால் போதும் என்று சொன்னாராம். அதனால் மீண்டும் பரிமாறவே இல்லையாம். சரி என்று சும்மா இருந்து விட்டார்களாம். கூச்சப்பட்டதால் அன்று வயிறு காய்ந்தது. நம் பாரத தேசத்தில் என்றால் விருந்தினர்கள் இது போன்று  வெட்கப்பட்டு ‘போதும்’ என்பார்கள் என்பதை மனதில் கொண்டு மீண்டும் மீண்டும் பரிமாறுவார்கள். வேண்டாம் என்றாலும் போட்டுக் கொண்டே இருப்பார்கள்” என்றார்.

சாப்பிடுபவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு செய்யும் முயற்சி இது. ஒரொரு  சமயத்தில் இந்த உபசாரம் நோய்க்கும் ஆரோக்கிய கேட்டிற்கும் கூட வழிவகுக்கும்.

ஒருவர் தன்  வீட்டுக்கு வெளியில் ஒரு நோட்டீஸ் போர்டு வைத்துள்ளார். “உங்கள் செருப்புகளுகளையும் உங்கள் சங்கோஜத்தையும் வெளியே விட்டு விட்டு வாருங்கள்” என்று. சங்கோஜப்படுபவர்களைப் பற்றிய அன்பான எச்சரிக்கை இது.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பலரை நாம் பார்த்து வருகிறோம்.  முக்கியமாக அரசியல் அரங்கில் இப்படிப்பட்ட டம்பர்களால் சமுதாயம் பெருத்த நஷ்டம் அடைகிறது.

“ஊழலை ஒழிப்பதே என் கடமை. பதவி மேல் எனக்கு சற்றும் ஆசை இல்லை” என்று கூறி ஒரு தலைவர் பிரச்சாரம் செய்தார். லஞ்சம் இல்லாத தேசத்தை நிர்மாணிக்க வேண்டும் என்ற தேவையை அடித்து கூறினார்.  அதை நம்பி மக்கள் அவருக்கு ஓட்டு போட்டு பதவியில் அமர்த்தினார்கள். பின்னர் அந்த ஆசாமி பதவிக்காக எத்தனை தூரம் வேண்டும் என்றாலும் கீழே இறங்கும் நிலைக்கு மாறினார். எப்படியாவது அதிகாரம் வந்தால் போதும் என்ற லட்சியத்தோடு அரசாங்க கஜானாவை ஓட்டு வியாபாரமாக மாற்றினார். தேசத் துரோகியாக மாறினார். தேசத்தின் எதிரிகளோடு நட்பு கொண்டார். அதிகாரத்தின் மூலம் ஊழலை வளர்த்துக் கொண்டே போனார்.

ALSO READ:  காந்தி கிராம மாணவிகளுக்கு விவசாய நிலத்தில் பயிற்சி!

மேலுக்கு ஒரு விதமாகவும் உள்ளே வேறு விதமாகவும் நடக்கும் இது போன்ற விசித்திரமான மனிதர்களை அதட்டிக் கேட்பது இந்த ‘உலூகல சேஷ லேஹன’    நியாயத்தின் மற்றொரு கோணம்.  

இந்த நியாயத்தில் ஆழமான வேதாந்த குணம் கூட உள்ளது.

‘மனஸ்ஸன்யத், வசஸ்ஸன்யத் கர்மண்யன்யத்’

என்ற சுபாஷித்த வரிகள் கூறுவது போல தீயவர்கள் முக்கரணத் தூய்மையோடு நடந்து கொள்ள மாட்டார்கள். மனதில் ஒன்று, பேச்சில் மற்றொன்று, செயலில் வேறொன்று என்று இருப்பார்கள். ‘உலூகல சேஷ லேஹன நியாயம்’ இது போன்றவர்களால் நடக்கும் ஆபத்துகளை பளிச்சென்று எடுத்துக்காட்டுகிறது. பிறரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக மனதில் கள்ளத்தை மறைத்துக் கொண்டு நடக்காதே! மனப்பூர்வமாகப் பேசு என்கிறது இந்த நியாயம். “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்றார் வள்ளலார்

When you want to say ‘No’  never ever say ‘Yes’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது மனதில் உள்ள எண்ணத்தை அடையாளம் காண் என்று கூறுகிறது.

மகாத்மாக்கள் மனம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக நடந்து கொள்வார்கள். ‘மனஸ்யேகம், வச்ஸ்யேகம், கர்மண்யேகம் மஹாத்மனாம்’ – என்று சுபாஷிதத்தில் கூறப்பட்டுள்ளது. கூச்சப்படுவது போல் நடிக்கும் கபட வேடதாரிகளை இந்த நியாயம்  விமர்சிக்கிறது.

author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week