மிளகாய் மண்டி
தேவையானவை:
பச்சை மிளகாய் 10,
மொச்சை 4 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் 10,
பூண்டு 10,
புளி எலுமிச்சை அளவு,
உப்பு தேவைக்கேற்ப,
அரிசி கழுவிய கெட்டி மண்டி 5 கப்,
வெல்லத்தூள் 1 டீஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய் 7 டேபிள்ஸ்பூன்,
கடுகு 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2,
பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை:
பச்சை மிளகாயை அரை இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்துக்கொள்ளவும். மொச்சையை வறுத்து, குக்கரில் வேகவைத்து, நீரை வடித்துக்கொள்ளவும்.
அரிசி கழுவிய மண்டியில் உப்பு, புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயம், மிளகாயைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி, கொதித்ததும் மொச்சையையும் போட்டு, கொதிக்கவிடவும். நன்கு கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதக்கும் சமயம் இறக்கி, வெல்லத்தூள் தூவிப் பரிமாறவும். ‘சுள்’ளென்ற உறைப்பும் லேசான இனிப்புமாக இருக்கும் இந்த மிளகாய் மண்டி இருந்தால், பழைய சாதம் கூட பஞ்சாமிர்தமாக இறங்கும்.