
வயிற்று வலி சரியாக…
அஜீரணம் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் ஓமம், கோஷ்டம் வசம்பு சம எடை எடுத்து தட்டி சட்டியிலிட்டு கருக்கி 200 மி.லி தண்ணீர் ஊற்றி சரிபாதியாக கண்டக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் காலை மாலை சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
நீரடைப்பு சரியாக…
நீர் முள்ளி. நெருஞ்சில், சுரைக்கொடி வேர், சோம்பு, சரக்கொன்றை. கடுக்காய், நெல்லி முள்ளி, தான்றிக்காய் இவற்றை சம எடை எடுத்துப் போட்டு குடிநீராக்கி சுண்ட வைத்து வடிகட்டி சாப்பிட நீரடைப்பு குணமாகும்.
நீர்க்கடுப்பு சரியாக…
கடும் வெயிற் காலத்தில் உடல் வெப்பம் மிகுந்து நீர்க்கடுப்பு ஏற்பட்டால் சோற்றுக் கற்றாழையில் நடுவிலுள்ள நுங்கு போன்ற கதுப்பை எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து விழுங்க குணமாகும்.
நாக்குப் பூச்சி வெளியேற…
அரை மூடித் தேங்காயை தண்ணீர் விடாத சுத்தமான கெட்டிப்பாலாக எடுத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றிலுள்ள கீரைப் பூச்சி நாக்குப் பூச்சி அத்தனையும் வெளியே வந்துவிடும்.
தேள் கடிக்கு…
சிவனார் அமிர்தம் என்ற சித்த மருந்துடன் அப்ரக பஸ்பம் என்ற மருந்தை சம எடை கலந்து தேனில் குழைத்து சாப்பிட இருபது நிமிடத்தில் குணம் தெரியும்.
மரங்கள்ளி என்ற மூலிகைச் செடியின் இலையில் இரண்டொன்றை உள்ளுக்குத் தின்று இரண்டு இலைகளைக் கசக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க உடனே குணமாகி விடும்.
வெற்றிலை இரண்டை எடுத்து பத்து மிளகை அதில் வைத்து மடித்து மென்று சாற்றை விழுங்க விஷமிறங்கி வலி நிற்கும். இது ஓர் உடனடி நிவாரணி.