
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உணர்வு இந்தியா முழுவதும் இப்போது பரவி நிற்கிறது. சந்திராயன் 2 நிலவுக்கான பயணத்திட்டம் நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து விட்டது. இப்போது தோல்வியோ வெற்றியோ அதையும் கடந்து தொலைநோக்குப் பார்வையுடன் இயங்குகிற உணர்வை இந்தியா பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ரோட்டக்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
ரோட்டக் நகரில் பாஜக.,வின் விஜய் சங்கல்ப பேரணி நடைபெற்றது. ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி விஜய் சங்கல்ப பேரணி ஞாயிறு அன்று ரோட்டாக் நகரில் நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவின் சந்திரயான் குறித்தும், அது மக்களவை ஒருங்கிணைத்தது குறித்தும் தனது பேச்சின் இடையே குறிப்பிட்டார்.
அவர் இது குறித்துப் பேசிய போது…
செப்.7ம் தேதி இரவு நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் உணர்வுப் பேரலையாகப் பரவி இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைத்துள்ளது. இந்தியா தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்தியர்கள் ஒருபோதும் எதிர்மறையான பயன்களை, விளைவுகளை அங்கீகரிப்பதில்லை!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்தியாவே தொலைக்காட்சி முன் காத்துக் கொண்டிருந்தது. விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வைக் காண ஆவலுடன் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அந்த 100 வினாடிகளில் இந்தியாவில் என்ன நிகழ்ந்ததோ அது இந்தியாவின் 125 கோடி மக்களின் மன உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்தியாவின் 120 கோடி மக்களும் சக்தி நிரம்பியவர்களாக நம்பிக்கை நிரம்பியவர்களாக எதிர்காலத்தின் மீது அசைக்கமுடியாத உறுதி கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு அது எடுத்துக்காட்டு. நான் அதை இஸ்ரோ உணர்வு என்றே குறிப்பிட விரும்புகிறேன். அத்தகைய உணர்வு உள்ள நாடு ஒன்று தான் தன் தோல்விகளைக் கடந்து வெற்றிகளை உறுதி செய்ய முடியும்.

இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்திய மக்கள் விரும்புவதை நிறைவேற்றக்கூடிய சக்தியும் திறமையும் இப்பொழுது இந்தியாவில் உள்ளது என்று மக்கள் நம்பத் தொடங்கி உள்ளனர் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.



