துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 43.88 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்குவதும் தொடர்கதையாகிவிட்டது.
விமான போக்குவரத்து வழியாக அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பிடிபடும் கடத்தல்காரர்கள் தங்கத்தை மறைத்து கொண்டு வர பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர்.
இதனை எப்படியும் சுங்கத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகின்றனர். கடந்த மாதம் சென்னையில் பிடிப்பட்ட கடத்தல்காரர்கள் தங்கத்தை தலைமுடியில் வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் ஜீன்ஸ் பேண்டின் பெல்ட் அணியும் பகுதியில் வைத்து ஒரு கும்பல் தங்கத்தை கடத்தி வந்தது.
இதற்கு ஒருபடி மேலே போய் கேரள மாநிலம் கண்ணூரில் பிடிப்பட்ட ஒரு கும்பல் தங்கத்தை பேஸ்ட் போல் ஜீன்ஸ் பேண்டுகளில் தடவி வந்துள்ளனர். பேண்ட் வித்தியாசமாக இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர்.
அத்தனை தங்கம் ஒருகணம் சுங்கத்துறை அதிகாரிகளே ஷாக்காகிவிட்டனர். அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 14 லட்சமாம்.
மங்களூர் ஏர்போர்ட்டில் கடந்த வாரம் போர்வையில் தங்கத்தை கடத்தி வந்த நபர் பிடிபட்ட நிலையில் தற்போது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூர் வந்துள்ளார்.
அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
உள்ளாடையில் தனியாக பாக்கெட் ஒன்றை உருவாக்கி அதில் தங்கத்தை பவுடராக்கி எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
சுமார் 920 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவை 24 கேரட் அக்மார்க் தங்கம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மதிப்பு சுமார் 44.88 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.