
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட், டில்லி,
மூன்றாம் நாள், 19.02.2023
இந்தியா அபார வெற்றி
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் 263 (க்வாஜா 82, ஹேண்ட்ஸ்கோம்ப் 72*, ஷமி 4-60, அஷ்வின் 3-57, ஜடேஜா 3-68).
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 261 ரன் (அக்சர் படேல் 74, கோலி 44, அஷ்வின் 37, ரோஹித் 32).
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 113 ரன் (ஹெட் 43, லபுசேன் 35, ஜதேஜா 7/42, அஷ்வின் 3/59).
இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 118/4 (ரோஹித் ஷர்மா 31, புஜாரா 31*, கோலி 20, பரத் 23*, லியன் 2/49).
இந்திய அணி ஆறு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்கள் ஆடி ஒரு விக்கட் இழப்பிற்கு 61 ரன் எடுத்திருந்தது. ட்ராவிஸ் ஹெட் 39 ரன்களோடும் லபுசேன் 16 ரன்களோடும் ஆடிகொண்டிருந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே ஹெட் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஸ்மித், ஸ்வீப் ஷாட் ஆட முயன்று அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 95 ரன்கள் எடுத்திருந்தபோது, லபுசேன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் ஜதேஜா பந்திவீச்சில் கிளீன் போல்ட் ஆயினர். ரென்ஷா அஷ்வின் பந்தில் lbw ஆனார். ஆக, 95 ரன்னில் மூன்று விக்கட் வீழ்ந்தது. ஹெட், லபுசேன் இருவரைத் தவிர எவரும் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டவில்லை.
ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. ரவிந்தர் ஜதேஜா 42 ரன்னுக்கு ஏழு விக்கட்டுகள் எடுத்தார்; அதில் ஐந்து விக்கட்டுகள் கிளீன் போல்ட்.
உணவு இடைவேளைக்கு மூன்னர் இந்திய அணி நாலு ஓவர் விளையாட வேண்டியிருந்தது. இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் இரண்டாவது ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் கே.எல்.ராகுல் விக்கட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஏழாவது ஓவரில் ரோஹித் ஷர்மா இரண்டாவது ரன் எடுக்க முனைந்தபோது ரன் அவுட் ஆணார். புஜாரா விளையாட வேண்டும் என்பதற்காக ரோஹித் தன் விக்கட்டைப் பறிகொடுத்தார் எனச் சொல்ல வேண்டும்.
கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் சரியாக விளையாட வில்லை. இறுதியில் பரத், பூஜாரா இருவரும் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர். ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரின் பந்து ஒன்றை புஜாரா தூக்கி அடித்து விளையாடினால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் – என அஷ்வின் சொல்லியிருந்தார். இன்று புஜாரா இரண்டு முறை லாஃப்டட் ஷாட் ஆடினார். அஷ்வின் ஒரு பக்க மீசையை எடுக்கிறாரா எனப் பார்க்க வேண்டும்.
ஜதேஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 2-0 என்ற வெற்றிக் கணக்கில் இந்தத் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த டெஸ்ட், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், இந்தூரில் மார்ச் 1ஆம் தேதி நடக்கவுள்ளது.