
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
15ஆம் நாள் – வங்கதேசம் vs இந்தியா
புனே – 19.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கதேச அணியை (256/8, லிட்டன் தாஸ் 66, தன்சிட் ஹசன் 51, மஹமதுல்லா 46, ரஹீம் 38, பும்ரா 2/41, சிராஜ் 2/60, ஜதேஜா 2/38) இந்திய அணி (41.3 ஓவரில் 261/3, விராட் கோலி 103*, ஷுப்மன் கில் 53, ரோஹித் ஷர்மா 48, கே.எல். ராகுல் 34, மிராஸ் 2/47) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியில் இன்று இரண்டு மாற்றங்கள். ஷாகிப் அல் ஹசன் மற்றும் டஸ்கின் அகமது இன்று விளையாடவில்லை. ஷாகிபுக்குப் பதிலாக இன்று ஷண்டோ அணித்தலைவராக இருந்தார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தன்சிட் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். முதல் நான்கு ஓவரில் பும்ராவும் சிராஜும் ரன் குறைவாகக் கொடுத்து பந்து வீசினாலும் முதல் 10 ஓவர்களில் வங்கதேச அணி விக்கட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.
அதன் பிறகு வந்த வீரர்கள் ஷண்டோ (8 ரன்), மிராஸ் (3 ரன்), ஹிருதோய் (16 ரன்) சரியாக விளையாடவில்லை. பின்னர் ரஹீம் (38 ரன்) மற்றும் மகமத்துல்லா (46 ரன்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 8 விக்கட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது.
இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு இணையாக சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டம் ஆடினார்.
முதலில் ரோஹித் 48 ரன்னுக்கு ஆட்டமிழக்க, விராட் கோலி ஆட வந்தார். அவருக்கு தொடர்ந்து மூன்று நோபால் வீசப்பட்டது அந்த பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 34.3 ஓவரில் 257 ரன் எடுத்திருந்தால் இன்று புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணிக்கு மேல் இந்திய அணி முதலிடம் வகித்திருக்கும். இருந்தாலும் விக்கட் இழக்கக் கூடாது என்பதற்காக விராட் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் சற்று நிதானமாக ஆடினர்.
ஷ்ரேயாச் 19 ரன்னுக்கு ஆட்டமிழக்க ராகுல் விளையாட வந்தார். ஏற்கனவே பந்துவீசும்போது ஹார்திக் பாண்ட்யா காயமடைந்து மைதானத்தைவிட்டுச் சென்றிருந்தார். எனவே ராகுலும் கோலியும் இந்த ஆட்டத்தை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
இறுதியில் கோலி தனது 48ஆவது ஒருநாள் சதத்தையும் பூர்த்தி செய்து, இந்திய அணிக்கு வெற்றியும் தேடித்தந்தார்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. விராட் கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நாளை ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்திய அணியின் அடுத்த ஆட்டம் 22ஆம் தேதி, தர்மசலாவில் நியூசிலாந்து அணியுடன் நடக்கிறது.