நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இதை அடுத்து, இன்று மாலை புதிய அமைச்சரவைக்கான பதவிப் பிரமாணம், தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் தொடர்ந்து முன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். மிகச் சரியாக 7.25க்கு அவர் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டு, கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோஹர் லால், தர்மேந்திர பிரதான், ஹெச்டி குமாரசாமி, ஜிதன் ராம் மாஞ்சி உள்பட பாஜக.,வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பாரதத்தின் முக்கியத் தலைவர்கள், கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 8000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.