ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய நான்…. தெய்வ சாட்சியாக…. வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில், இன்று மதியம் 12.23க்கு என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார். தெலுங்கு மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக் கொண்டவுடனே ஜெகன் போட்ட முதல் கையெழுத்து, அவர் முன்பு வாக்குறுதிஅளித்திருந்த படி ஓய்வூதிய திட்டம் குறித்த அந்த பைலில்தான்!
நவரத்தினங்கள் போல், அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்த 9 வாக்குறுதிகளில் முதலாவதாக முதியோர் பென்ஷன் திட்டம் மீதுதான் தனது முதல் கையெழுத்தை இட்டார்!
ஒய்எஸ்ஆர் பென்ஷன் காணிக்கையாக, தாத்தா பாட்டிகளுக்கான காணிக்கையாக, முதலில் கையொப்பமிட்டது முதியோர் ஓய்வூதியத் திட்ட கோப்பில்தான்!
அப்போது பேசிய ஜெகன் மோகன், முதியோர் பென்ஷன் ரூ.3000க்கு உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.
3648 கிலோ மீட்டர் இந்த பூமி மீது நடந்ததற்கும் ஒன்பது ஆண்டுகளாக உங்களோடு ஒருவனாக நடந்ததற்கும் வானளாவிய வெற்றியை அள்ளித் தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அக்காவுக்கும் ஒவ்வொரு தங்கைக்கும் ஒவ்வொரு பாட்டிக்கும் ஒவ்வொரு தாத்தாவுக்கும் ஒவ்வொரு சகோதரனுக்கும் ஒவ்வொரு சினேகிதனுக்கும் இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு உங்களின் ஒவ்வொரு பெயரையும் உச்சரித்து, இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“ஜெகனுக்கு அளிக்கப் பட்ட பொறுப்பு பெரியது! தந்தையின் வாரிசாக பெயரை காப்பாற்ற வேண்டும்” என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஜெகனை வாழ்த்தினார். மேலும், இன்னும் மூன்று முறை ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன் என்றார்.
தெலங்கானா முதல்வர் கேசிஆர் மேலும் பேசியபோது, தெலுங்கு மக்கள் இப்போது கை தட்டி ஆரவாரம் செய்ய வேண்டும்! அன்போடு கலந்து இந்த அற்புதமான வெற்றியை நாம் கொண்டாட வேண்டும் என்றார்! ஆந்திரப் பிரதேசத்தின் இளைய புதிய முதலமைச்சருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று வாழ்த்தினார் கேசிஆர்.
ஜெகன் ஆதரவாளர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் விஜயவாடா இந்திரா காந்தி முனிசிபல் மைதானம் நிரம்பி வழிந்தது. பதவிப் பிரமாணம் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் திமுக, தலைவர் ஸ்டாலினும் தெலங்கானா முதல்வர் கேசிஆரும் ஜெகன்மோகனின் வீட்டுக்கு மதிய விருந்துக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து இருவரும் தில்லி செல்ல விமான நிலையம் செல்வதாகக் கூறப்படுகிறது பதவி ஏற்றுக் கொண்ட ஜெகன்மோகன் தில்லி செல்வது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.




