மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த பங்களாவில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக., தேசியத் தலைவருமான அமித் ஷா விரைவில் குடியேற உள்ளார்.
தில்லியில் அமைச்சர்கள், விவிஐபி.,க்கள் வசிக்கும் மத்திய தில்லி பகுதியில் உள்ள கிருஷ்ணமேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் வாஜ்பாய் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
பிரதமராக இருந்த போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வந்த அவர், பின்னர் 2004ல் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதும் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவுக்கு மாறினார். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் காலமாகும் வரை அந்த இல்லத்தில்தான் வசித்துவந்தார்.
வாஜ்பாய் காலமானதை அடுத்து, நவம்பரில் அவரின் குடும்பத்தினர் அந்த பங்களாவை காலி செய்தனர். தற்போது யாரும் அங்கே குடியிருக்கவில்லை..
மோடி கடந்த முறை பிரதமரானபோதே, ‘தில்லியில் தலைவர்கள் வசித்த இல்லங்கள், நினைவிடங்களாக மாற்றப்படாது’ என உத்தரவிட்டிருந்தார். அதன்படி வாஜ்பாய் வசித்த பங்களாவும் நினைவிடமாக மாற்றப்படவில்லை. அதற்கு பதிலாக, தில்லியில் தலைவர்களுக்கான நினைவிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாஜ்பாய்க்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாஜ்பாய் வசித்த பங்களாவை தூய்மைப் படுத்தி அதனை அமித் ஷாவுக்கு ஒதுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அண்மையில் அங்கே சென்ற அமித் ஷா, சில மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டார். விரைவில் அந்த பங்களாவில் அவர் குடியேற உள்ளார். தற்போது அவர் தில்லியில் அக்பர் ரோடு 11 ஆம் எண் பங்களாவில் வசிக்கிறார்.




