
சென்னைக்குள் வருவதற்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர் அதிகாரிகள். சென்னையில் இருந்து வெளியே செல்லவும், சென்னைக்கு வரவும் இனி இ-பாஸ் வாங்குவதற்கு சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரொனா பாதிப்பு மிகப் பெரும் அளவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அரசின் சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் தினந்தோறும் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தச் சூழலில் சென்னையை தமிழகத்தில் இருந்து தனிமைப் படுத்த திட்டமிட்டுள்ளது அரசு. இது தொடர்பான ஆலோசனைகளையும் மாநகராட்சி அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய சூழலில் சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்து பின்னர் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தவும், சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்குச் சென்று கொரோனா தொற்றைப் பரப்புவதைக் கட்டுப் படுத்தவும் உள்ள வழிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சரியான காரணம் எதுவுமின்றி எவருக்கும் இ-பாஸ் வழங்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது. மிக முக்கியமான காரியங்களைத் தவிர்த்து எதற்காகவும் சென்னைக்குள் வர யாரையும் அனுமதிக்க வேண்டாம் என பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கும் , மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது இ-பாஸ்காக சிரமப் படும் சாதாரண மக்களுக்கு பெரும் நெருக்கடியைத் தான் தரும்!