
வைரஸ் தொற்று, பொதுமக்களை பல வகைகளில் வதைத்து வருகிறது. பொது போக்குவரத்து முழுமையாக இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு கஷ்டமான நிலை ஏற்படும் போது, அவர்களின் ஒரே நம்பிக்கை கடவுள் வழிபாடு தான். தங்கள் குறைகள் தீர வேண்டும் என விரதம் இருந்து, நேர்ச்சை நேர்ந்து கோவிலுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள் அனைத்தும், வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 80’நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பெரிய கோவில்களில் மூண்று காலபூஜைகளும், சிறிய கோவில்களில் ஒரு காலபூஜையும் நடைபெற்று வருகிறது. பூஜை நடைபெறும் சமயம் கோவிலுக்குள் பூஜை வைப்பவர்கள் தவிர, பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்தக்கட்டுப்பாடுகள் மக்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சில தினங்களாக, பூட்டியிருக்கும் கோவில்கள் முன்பு, சூடம் ஏற்றி மக்கள் சாமியை மானசீகமாக வணங்கத் தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான மக்கள் கிராமக்கோவில்களுக்கும், ஊருக்கு வெளியே இருக்கும் குலதெய்வக் கோவில்களுக்கும் சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர்.
ஞாயிறுக் கிழமை குடும்பம் குடும்பமாக கோவிலுக்குச் சென்ற மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மொட்டை போட்டு முடி காணிக்கையும் செய்து வருகின்றனர். இதனால் விடுமுறை நாளான ஞாயிறுக் கிழமை கிராமக் கோவில்கள் களைகட்டியது.
வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து, அனைத்துக் கோவில்களும் விரைவாக திறக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.
- செய்தி: ரவிசந்திரன், மதுரை